3.3 சமய நோக்கும் அறங்களும்

Audio ButtonE

Click here to Animate

நாலடியார் போன்ற பிற்கால அறநூல்களும் வாழ்க்கைக்குரிய நெறிகளைக் கூறினும் அவற்றைத் தத்தம் சமயக் கண்ணோட்டத்துடன் கூறுகின்றன. இவை தோன்றிய காலத்தில் சமயம் வாழ்க்கையில் இன்றியமையாத கூறாகிவிட்டது. இல்லறத்தை வெறுத்த துறவை இந்நூல்கள் போற்றுகின்றன. இடைக்காலத் தமிழகத்தில் துறவு மதிப்புக்குரியதாகி விட்டது. வீட்டில் பலரும் இறக்கக் கண்ட ஒருவனை நிலையாமை உணர்வு பற்றிக் கொண்டது. வாழ்க்கையை வெறுத்துப் பார்க்கும் நோக்குத் தோன்றிவிட்டது.

கணம் கொண்டு சுற்றத்தார் கல்லென்று அலறப்
பிணம் கொண்டு காட்டு உய்ப்பார்க் கண்டும்-மணம்

கொண்டு ஈண்டு
உண்டு உண்டு உண்டு என்னும் உணர்வினாற் சாற்றுமே
டொண் டொண் டொண் என்னும் பறை

(நாலடி, மர்ரே: 3.5)

Audio

(காட்டு உய்ப்பார் = காட்டிற்குக் கொண்டுபோவார்)

என்கிறது நாலடியார். தமிழர் சமூக வாழ்வில் சமண பௌத்த சமயங்கள் மதிப்புப் பெற்றன. பிற சமயங்களும் தத்தம் நெறிகளை மக்களிடையே பரப்பிச் சமூக அமைப்பில் பல சமய வட்டங்கள் தோன்ற வழி வகுத்தன. மத மாற்றங்கள், போற்றுதல் தூற்றுதல்கள், மதப் போராட்டங்கள் ஆகியன இடைக்காலத்தில் தொடங்கிவிட்டன. மனித உடம்பையும் பெண்ணையும் சமயங்கள் இழிவாகக் கருதின. எனினும் தமிழர் பண்பாடு இவற்றுக்கு முழுமையாக இடம் கொடுத்துவிடவில்லை.

3.3.1 தமிழர் கண்ட பொதுமைக் கண்ணோட்டம்

Click here to Animate

எதனையும் நடுவுநிலைமையோடு சிந்திக்கும் முதிர்ச்சி பெற்றிருந்த தமிழ்ச் சமூகம், சமயங்கள்பால் ஒரு பொதுமைக் கண்ணோட்டத்தையும், பொறை நோக்கையும் கடைப்பிடிக்கத் தலைப்பட்டது. சமயங்கள் கற்பித்த நன்னெறிகளைத் தமிழ்ச் சமூகம் ஏற்றுத் தன் பண்பாட்டுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டது. கல்வி ஒன்றே வேறுபாடுகளைக் களைந்து மனிதனை உயர்த்தவல்லது என்பதை அற நூல்கள் தெளிவுபட உரைக்கின்றன. அறிவுடையோனுக்குக் குலம் என்பது இல்லை என்ற தமிழ்ச் சமூகக் கருத்து அதன் பண்பாட்டு உயர்ச்சியைக் காட்டும்.

தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக்
காணின் கடைப்பட்டான் என்று இகழார் - காணாய்
அவன் துணையா ஆறு போயற்றே, நூல் கற்ற
மகன் துணையா நல்ல கொளல்.

(நாலடி, மர்ரே: 14.6)

Audio

என்று சாதி வேறுபாட்டைக் கருதாமல், அவரவர் செயல்கண்டு மனிதனை மதிக்கும் பண்பைச் சில சமயங்கள் உருவாக்கின. தோணி ஓட்டுகிறவன் எந்த வருணத்தினன் என்று பார்த்தா பயணம் செய்வர்? அதுபோலக் கல்வியாளன் எக்குலத்தவனாக இருந்தால் என்ன என்ற கருத்து வருணாசிரம நெறியைத் தவிடுபொடி செய்துவிட்டது.