3.5 மருந்து நூல்கள் காட்டும் பண்பாடு
சில நூல்களுக்கு மருந்துகளின் பெயர்களைப் புலவர்கள்
வைத்துள்ளார்கள். ஏன் தெரியுமா? மருந்து நோயைத் தீர்ப்பது
போல இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள நீதியும் மனத்தின்
குறையைப் போக்கும் என்பதற்காக ஆகும். ஏலாதி என்பது ஒரு
நூல். ஏலக்காய், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி,
சுக்கு என்ற ஆறு மருந்துச் சரக்குகள் சேர்த்துச் செய்தது ஏலாதி
எனப்படும். இது போல ஆறு பொருள்களைக் கூறுவது இந்நூல்.
நிறை உடைமை, நீர்மை உடைமை கொடையே பொறை உடைமை, பொய்ம்மை புலாற்கண் மறை உடைமை
வேய் அன்ன தோளாய் இவை உடையான் பல் உயிர்க்கும்
தாய் அன்னன் என்னத் தகும். (ஏலாதி, மர்ரே: 6)
|
 |
இதன் பொருள்: 'மூங்கில் போன்ற தோளை உடையவளே!
நிறைந்த பண்பு, அன்பு, கொடைக் குணம், பொறுமை, பொய்
கூறாமை, புலால் உண்ணாமை என்ற ஆறு பண்புகள்
கொண்டவன் எல்லா உயிர்க்கும் தாய் போன்றவன்' என்பதாகும்.
இவ்வாறே திரிகடுகம் என்ற நூலும், சிறுபஞ்சமூலம் என்ற
நூலும் மருந்துப் பெயர்களைக் கொண்டு நீதிக் கருத்துகளைக்
கற்பிக்கின்றன. |