4.1 சமயங்கள் என்ற நதிகள்

AudioE

இறைவன் ஒரு பெரிய கடல். கடலை யாராவது அளக்க முடியுமா? அதற்குக் கரைகள்தாம் உண்டா? இறைவனும் அப்படித்தான்! அந்தப் பெருங்கடலை நோக்கிச் சமயங்கள் என்ற ஆறுகள் ஓடுகின்றன. சைவம் ஓர் ஆறு; வைணவம் ஓர் ஆறு; பௌத்தம் ஓர் ஆறு; சமணம் ஓர் ஆறு; இசுலாம் ஓர் ஆறு; கிறித்தவம் ஓர் ஆறு. இன்னும் இப்படி எத்தனை எத்தனையோ! மதங்கள் எல்லாம் இறைவனை வழிபடும் மார்க்கங்களே. வழிகள் வேறுபடலாம். ஆனால் குறிக்கோள் ஒன்றுதான். அதனால்தான் இராமலிங்க அடிகள் இறைவனைக் குறிப்பிடுகையில்,

பொங்குபல சமயம்எனும் நதிகளெலாம்
     புகுந்து கலந்து இடநிறைவாய்ப் பொங்கிஓங்கும்
கங்குகரை காணாத கடலே!

Audio

என்று பாடுகிறார். சமயங்கள் என்ற ஆறுகள் மனிதர்களின் மனஅழுக்கைப் போக்கித் தூய்மை செய்வன ஆகும்.

4.1.1 சமயங்கள் தோன்று முன்பு

சமயங்கள் தோன்று முன்பே கடவுள் நம்பிக்கையும் வழிபாட்டு நெறிகளும் வழக்கத்தில் இருந்தன. அவரவர்களுக்கு விருப்பமான முறையில், வாழ்க்கை நெறிகளுக்கு ஏற்ற வகையில் வழிபாடு இருந்தது. கண்ணப்ப நாயனாருடைய வழிபாடு இதற்கு எடுத்துக்காட்டாகும். சிவபெருமானுக்கு இறைச்சியை அவர் படைத்தார். ஏன்? அவருக்குச் சைவ சமய நெறிகள் தெரியாது. அன்பு நிறைந்த அவர் செயல்களில் இறைவன் குறை காணவில்லை. குறவர்கள் ஆட்டை அறுத்துத் தினையரிசி பரப்பி முருகனை வழிபட்டனர்; முனிவர்கள் நீராடித் துவராடை (காவி வண்ண உடை) உடுத்து உச்சிக் கைகூப்பி முருகனை வழிபட்டனர். முருகன் இவ் இரண்டையும் ஒருநோக்கோடு கண்டதாக இலக்கியம் கூறுகின்றது. அவரவர் குடும்பமும் குலமும் அறிந்திருந்த வகையில் வழிபாடு இருந்தது.

4.1.2 தமிழரின் கடவுட்கொள்கை

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் வாழ்வில் கடவுள் நம்பிக்கை மற்றும் கடவுளைப் பற்றிய சில கோட்பாடுகள் இருந்தன. இறந்தவரைப் புதைத்தல், புதைத்த இடத்தில் மரங்களை நட்டு வளர்த்தல், மரங்களைக் கடவுளாகக் கருதி வழிபடுதல் ஆகிய பழக்கங்கள் பழந்தமிழர் வாழ்வில் இடம்பெற்றிருந்தன. மரத்தைக் கடவுள் மரம் என்று குறிப்பிட்டுள்ள நிலை அறியப்படுகின்றது. மரத்தின் அடிப்பகுதி, நீர்த்துறை, மன்றம் எனப்படும் பலர் கூடுமிடம், தெருக்கள் சந்திக்கும் இடம் ஆகிய இடங்களில் கடவுட் படிமங்களை வைத்து வழிபட்டனர். மரத்தை நட்டுக் கடவுளாக வழிபட்ட நிலையிலிருந்தே லிங்க வழிபாடு தோன்றியிருக்க வேண்டுமென்று அறிஞர் கருதுகின்றனர். இன்றும் தமிழ்நாட்டுக் கோயில்கள் சிலவற்றில் மரங்களும் கல்லால் உருவாக்கப் பெற்ற கம்பங்களும் தெய்வங்களாக வழிபடப்படுகின்றன.