2.2 சிற்றிலக்கிய காலச் சமூக நிலை

Audio Button

ஒரு குடியில் பிறந்தவர்களுக்குள் அரசுரிமை யாருக்கென்ற சிக்கல் வந்தபோது, பாண்டி நாட்டில் இச்சிக்கலைப் பயன்படுத்தி அலாவுத்தீன் கில்ஜியின் படைத்தலைவனான மாலிக்காபூர் தமிழகத்திற்குள் நுழைந்து மதுரை அரசைக் கைப்பற்றினான். வீரபாண்டியன், சுந்தர பாண்டியன் என்ற உடன் பிறந்தார்கள் தங்களுக்குள் போரிட, மாலிக்காபூர் உதவப் புகுந்தது குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாயிற்று. 'சண்டையிட்டாலும் சகோதரர் அன்றோ' என்றும், 'ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி' என்றும் கருதும் கருத்தின்மையால், தமிழகத்தின் பகுதிகளை அவரவர் எளிதாகக் கைப்பற்ற முடிந்தது. டில்லி சுல்தான்களின் படைத் தலைவர்களும், ஆற்காட்டு நவாபும், விஜயநகர நாயக்கரும், மராட்டியரும் தமிழகத்திற் புகுந்தனர். ஒருகுடை நிழலில் பெரிய நிலப்பரப்பை ஆண்ட வேந்தர் ஆட்சி முறை மறைந்தது. சிற்றூர்த் தலைவர்களும், குறுநில மன்னர்களும் தத்தம் நிலப்பகுதிகளைப் பாதுகாத்துக் கொள்வதிலும், படைவலிமை மிக்க பகைவர்களுக்கு அடங்கி ஒப்பந்தம் செய்து கொள்வதிலும் நாட்டம் உடையோர் ஆயினர். மதுரை நாயக்கர், தம் ஆட்சிக்குட்பட்ட நிலப்பகுதியை எழுபத்திரண்டு பாளையப்பட்டுகளாகப் பிரித்து அவ்வப்பகுதியில் வலிமை படைத்தவர்களைப் பாளையக்காரராக நியமித்தனர். அயலவர்கள் ஆட்சியுரிமையைக் கைப்பற்றிக் கொண்டமையால், அயல் மொழிகளும், அயற்பண்பாட்டுக் கூறுகளும் தமிழகத்தில் புகுந்தன.

2.2.1 பல்கிப் பெருகிய சாதிகள்

கி.பி.500க்குப் பிறகு சாதிய வேர் ஆழமாகத் தமிழ் மண்ணில் வேரூன்றியது. கி.பி. 900க்குப் பிறகு சாதி வேறுபாடுகளும், சாதிச் சண்டைகளும் பெருகின. பொது இடங்களில் சிலரை ஒதுக்கி வைக்கும் வழக்கம் வளர்ந்து வலிமை பெற்றது. பிராமணர்கள் நிலத்தேவர் எனப்பட்டுப் பலராலும் போற்றத்தக்க மேலாண்மையினை எய்தினர். கோயில்கள் பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு உரம் சேர்த்தன. தமிழ், தமிழரின் வாழ்வில் முக்கியமான கட்டங்களிலிருந்து விலக்கி வைக்கப் பெற்றது. பெயரிடுதல், கடவுள் வழிபாடு செய்தல், இறப்புச் சடங்கு நிகழ்த்தல், திருமணம் புரிதல், புதுமனை புகுதல், பெண் பூப்பெய்தல் முதலான சடங்குகளிலெல்லாம் வடமொழி புகுந்துவிட்டது. கோத்திரம், குலம் என்பவற்றைப் பெரிய தகுதிகளாக மதிக்கும் சமுதாயம் உருவாகிவிட்டது. வலங்கைப் பிரிவு, இடங்கைப் பிரிவு எனச் சாதிகள் இருபெரும் பிரிவாகப் பிரிந்தன. வலங்கைச் சாதிகள் 98 என்றும், இடங்கைச் சாதிகள் 98 என்றும் வரலாறு பதிவு செய்துள்ளது. இடங்கையினர் வணிகரும் தொழிலாளருமாக இருந்தனர். ஒவ்வொரு சாதியினரும் மேலும் பல சாதிகளாய்ப் பிரிந்தனர். பிராமணர்கள் ஐயர், ஐயங்கார், சுமார்த்தர், வடமர் எனப் பிரிவுற்றனர். கம்மாளர் என்னும் சாதியினர் தட்டார், தச்சர், சிற்பியர், கன்னார், கருமார் எனப் பிரிந்தனர். இவர்கள் ஐவரும் ஒன்றுகூடக்கூடாது என்று சட்டம் இருந்தது. கள்ளர், மறவர், தேவர், அகம்படியர் என ஓரினத்தார் பல பிரிவு எய்தினர். கணக்குத் தொழில் பார்த்தவர் கைகாட்டிக் கருணீகர், சரட்டுக் கருணீகர், சீர் கருணீகர் எனப் பிரிந்தனர். பிரெஞ்சு அறிஞர் அப்பே துபாய் கூறுவது போலச் சூத்திரர் எனப்பட்ட பதினெட்டுச் சாதியார் நூற்றெட்டுச் சாதியார் ஆயினர். எல்லாத் தொழில்களும் சமமாக மதிக்கப்படாத நிலை மேலும் வளர்ந்தது. அழுக்கு அகற்றல், ஆடை துவைத்தல், தோல் பதனிடுதல், பிணம் சுடுதல், பறை கொட்டுதல் போன்றவை கீழான தொழில்களாகக் கருதப்பெற்று இவற்றைச் செய்வோர் தீட்டு உடையோராய் எண்ணப்பட்டனர். இந்தியா முழுமையிலும் வருண சாதிப்பாகுபாடுகளின் தாக்கம் மிகுதியானதால் படிப்படியே இந்தியாவின் ஒருமை உணர்வும் ஒற்றுமை மனப்பாங்கும் குலைந்தன.

2.2.2 ‘செயல் இழக்கச் செய்த பக்தி’

சமயம், வாழ்க்கையில் இன்றியமையாத இடம்பெற்றுவிட்ட நிலையில் புலவர்கள் சமுதாயச் சிக்கல்களை அகற்றக் குரல் கொடுக்காமல் இறைவனையே போற்றிப் பாடினர். விதியைப் பற்றிய அழுத்தமான நம்பிக்கை, தாம் எதிர்கொள்ளும் எந்தத் துன்பத்தையும், எதிர்த்துப் போராடாத ஒரு மனநிலையை உருவாக்கிவிட்டது. 'அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்பது இறைவனின் பேராற்றலை வலியுறுத்துவதற்கு மாறாகப் பலரையும் செயல்படாத தன்மைக்கு இட்டுச் சென்றது. பல சமயப் பிடிப்புக்குள் நின்று வாழச் சமூகம் பழகிக் கொண்டது. கோயில்களின்மீது மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வளர்ந்தது. மன்னனைக் காட்டிலும் தெய்வம் வலியது; அது நின்று கொல்லும் சக்தியுடையது என மொழியப் பெற்றன. பக்தியே வாழ்வின் குறிக்கோளாகவும், தலைமைக் கடமையாகவும் உருக்கொண்டது. பக்தியின் பொருட்டு மனைவி, பிள்ளை, உடைமை ஆகிய அனைத்தையும் துறந்துவிடுதல் சரியானது என்ற எண்ணம் வலிவுபெறத் தொடங்கியது. பக்தி நூல்கள் பலப்பல தோன்றின. சிற்றிலக்கியங்கள், தலபுராணங்கள் பலப்பல இயற்றப்பட்டன.

2.2.3 பெண் வெறுப்பு

ஓங்கி உயர்ந்திருந்த பெண்களின் நிலை இடைக்காலத்தில் சிறுமையுற்றது. தமிழர் வாழ்வுக்குப் புறம்பான செயற்கைத் துறவுநெறி பெண்களை நோய்க்கலங்களாக வருணித்தது. பெண் வெறுப்பு என்பது பெரும் புலவர்களாலும் சித்திரிக்கப்பட்டது. பட்டினத்தார், அருணகிரியார் ஆகியோரின் பாடல்களில் பெண்ணை வெறுக்கும் மனப்பாங்கு வெளிப்பட்டது. நிலையாமை உணர்வு ஏற்படுத்திய பாதிப்பு துறவாக மலர்ந்தது.

2.2.4 வர்க்கச் சமூகம்

பணக்காரர், ஏழை என்ற இரண்டு இனங்கள் சமூகத்தில் என்றும் உள்ளவை. இவ்விரு வகை மக்கள் கூட்டத்தை வர்க்கம் என்பர். பெருங்காப்பியங்கள் செல்வர்களைப் பாடின. சிற்றிலக்கியங்கள் எளிய மக்களைப் பாடத் தோன்றின என்பர். ஆனால் கலம்பகம், பள்ளு, குறவஞ்சி போன்ற இலக்கியங்கள் எளிய மக்களைப் பாடுவது போன்ற தோற்றமளிப்பினும் அவர்களைப் பெருமைப்படுத்துவனவாக இல்லை. இறைவனைப் பெருமையாகப் பேசும் நிலையில், இவை எளிய மக்களின் காதல் உணர்வுகளையும், தொழில் முயற்சிகளையும் நகைப்புக்குரிய நிலையில் சித்திரித்துள்ளன. நமது பண்பாட்டில் வர்க்கம் சார்ந்த சமூக அமைப்பு உருவாவதற்குரிய சூழல் முன்னரே இருந்தது எனினும் இடைக்காலத்திலேயே அது வலிவு மிகப் பெற்றது. கல்வியாளர், சான்றோர் ஆகியோரெல்லாம் செல்வர்க்கு அடங்கிப் போகும் சமூக நிலை தோன்றிவிட்டது. நிலத்தை உழுது உண்பவன், உழுவித்து உண்பவன் என்ற இரு பிரிவு தோன்றி வளர்ந்து ஒரு நிலஉடைமைச் சமுதாயத்தையும் ஓர் அடிமைச் சமுதாயத்தையும் உருவாக்குமாறு அமைந்தது இக்காலமே.

2.2.5 பண்பாட்டுச் சீர்கேடும் வணிக நலிவும்

சிற்றிலக்கியங்கள் தோன்றிய காலத்தில் தமிழர் பண்பாடு பல நலிவுகளை அடைந்தது உண்மையே. தெலுங்கு, கன்னடம், சௌராஷ்டிரம், மராட்டியம் ஆகிய மொழி பேசுவோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாகியது. ஒரு கலப்பு இனப் பண்பாடு உருவாவதற்குரிய சூழல் இக்கால நிலையில் தோன்றியது.

உடன்பிறந்தாருக்குள் அரசுரிமைச் சிக்கல், படைத்தலைவர், அமைச்சர் ஆகியோர் அரசனுக்குப் பழுது எண்ணுதல், பொருள்களின் உற்பத்திக் குறைவால் பஞ்சம், வேறு ஊர்களுக்குக் குடிபெயர்தல், விலங்குகள் ஊருக்குள் புகுந்து துன்பம் விளைத்தல், பகை அரசர்கள் ஊருக்குள் புகுந்து கொள்ளையிடுதல் ஆகியன நாயக்கர் கால ஆட்சியில் நிகழ்ந்தன என்பர் வரலாற்று அறிஞர். மார்ட்டின் பாதிரியார் என்பவர் தமிழ்நாட்டு மக்களின் அக்கால வாழ்க்கைநிலை குறித்துக் கூறுகையில்,

“மதுரை நாட்டு மக்கள் எளிமையாகவும் சிக்கனமாகவும் வாழ்ந்தார்கள். அவர்கள் பெருவாணிகம் செய்பவர்களாக இல்லை. உள்நாட்டில் கிடைக்கும் உணவு, ஆடை ஆகியவற்றைக் கொண்டு அவர்கள் மனநிறைவு எய்தினர்"


என்று குறிப்பிடுகின்றார் (கி.பி.1699ஆம் ஆண்டு). பெருவாணிகத்தைத் தமிழர்கள், ஆங்கிலேயர், டச்சுக்காரர், போர்ச்சுக்கீசியர் ஆகியோரிடம் படிப்படியாக இழக்கத் தொடங்கினர். தமிழ்நாட்டின் முத்துக்களும் ஆடைகளும் வணிகம் என்ற அளவில் கொள்ளை போயின.