2.3 சிற்றிலக்கியங்கள் காட்டும் சமூகச் சித்திரங்கள்

Audio Button

கலம்பக நூல் பதினெட்டு உறுப்புகள் கொண்டது. புயவகுப்பு, அம்மானை, கழங்கு, ஊசல், கார், வண்டு, கொற்றியார், பிச்சியார், வலைச்சியார், இடைச்சியார் என்ற உறுப்புகள் இந்நூலில் இடம்பெறும். கொற்றியார், பிச்சியார், இடைச்சியார், வலைச்சியார் ஆகிய உறுப்புக்கள் கதைச் சுவைக்காகவும் புலவரின் கற்பனைப் பெருக்கிற்காகவும் சேர்க்கப்பட்டவை. இவர்கள் வழியாக, இரு பொருள்பட மொழியப்படும் சிலேடைகள் நூலில் அறிமுகப்படுத்தப்பட்டன. பள்ளு நூலில் வேளாண் கூலியின் மதுப்பழக்கம், சக்களத்தியர் ஏசிக் கொள்ளுதல், நில உடைமையாளர் தொழிலாளியைத் தொழுவில் கட்டி அடித்தல் ஆகியன பாடப்பெறுகின்றன. குறவஞ்சி நூலில் மேட்டுக்குடியினரின் காதல், பிரிவுத் துன்பம் ஆகியன ஒருவகையாகவும் எளிய குடியினரின் காதல், பிரிவுத்துயர் ஆகியன வேறு வகையாகவும் காட்டப் பெறுகின்றன.

2.3.1 பள்ளு நூலின் காட்சி

பள்ளு என்பது சிற்றிலக்கியங்களில் ஒன்று. பள்ளங்களில் வேலை செய்யும் வேளாண் தொழிலாளியைப் பற்றியது இந்நூல். உண்மையில் இந்நூல் அக்காலச் சமய மாறுபாடுகளைத் தெளிவாகக் காட்டுகின்றது. இதோ முக்கூடற்பள்ளு நூலில் வேளாண் தொழிலாளி எப்படிச் சித்திரிக்கப் பெறுகிறான் பாருங்கள்!

Former

வேளாண் தொழிலாளி

கறுக்கும் கிடாய் மருப்பின்
முறுக்கு மீசையும் - சித்ரக்
     கத்தரிகை யிட்ட வன்னக்
     கன்னப் பரிசும்
குறுக்கில் வளைதடி சேர்த்து
இறுக்கும் கச்சையும் - செம்பொற்
     கோலப் புள்ளி உருமாலும்
     நீலக் கொண்டையும்
சறுக்கும் தொறும் குதிப்பும்
சுறுக்கும் தலை அசைப்பும்
     தடிசுற்றி ஏப்ப மிட்டே
     அடிவைப்பதும்
மறுக்கும் மதுவெறிகொண்டு
உறுக்கும் சிரிப்பும் தோன்ற
     வடிவழகக் குடும்பன்
     தோன்றி னானே.

Audio Button

 

(கிடாய் மருப்பின் = ஆட்டுக் கிடாயின் கொம்பு போன்ற, சித்ரக்கத்தரிகை = அழகான கத்தரிக்கோல், வன்னக் கன்னப்பரிசு = கன்னங்களின் இருபுறமும் சீர்செய்த முடி, வளைதடி = ஆயுத வகை, உருமால் = மேல் துண்டு)

முக்கூடற்பள்ளு நூலில் வரும் வேளாண் தொழிலாளி, ஈடற்ற பெருமாள் அன்பன். பிற சமயங்களை ஏற்றுக் கொள்ளாத இவனுடைய இரண்டாம் மனைவி, சைவ சமயத்தவள். வைணவ சமய உண்மைகளை மறுப்போரை வெட்டி வீழ்த்தத் தயங்க மாட்டேன் என்கிறான் இவன். இத்தகைய இலக்கியங்களில் நம் வேளாண் துறைப் பண்பாடு மேலோங்கித் தெரிவதை மறுக்க இயலாது. விதைகளின் வகைகள், ஏர்க்காலின் வகைகள், மாடுகளின் குணம், குறிகள் (அடையாளங்கள்), மீன் வகைகள் ஆகியன எல்லாம் தெளிவாகக் கூறப்படுகின்றன. இயற்கை வளப்பம் மிகுந்த நாட்டில் விருந்தோம்பல் தழைக்கின்றது. விருந்தோம்பல் பண்பாட்டை இயற்கையின் குறியீடாகப் புலவர் காட்டுகின்றார். “வருவிருந்தினர்க்கு உபசரிப்பது போல் தாழை சோறிட வாழை குருத்து அளிக்கும்" என்று பாடுகிறார்.

தாழை மகரந்தங்களைச் சிந்துவதும், அதற்குக் கீழே நிற்கும் வாழை தன்னுடைய குருத்து இலையை நீட்டி, சோறு போன்ற மகரந்தத் தாதுக்களைப் பெற்றுக் கொள்வதும் விருந்தினரை உபசரிப்பது போன்று தோன்றுகிறது.

2.3.2 நாணத்தைப் பலி கொடுத்த உலா இலக்கியம்

உலா என்பது சிற்றிலக்கியங்களில் ஒருவகை. இந்நூலில் தலைவன் உலா வருவான். அவனை வீதியில் கண்ட ஏழு மகளிர், அவன்மீது காதல் கொண்டு புலம்புவார்கள். இவர்கள் கணிகையர் குலத்தைச் சார்ந்தவர்கள்; பொதுமகளிர். உலா நூல்களில் இத்தகு காட்சியைக் காணலாம். பெண்கள் காமுற்றதாகப் பாடுவது ஓர் உத்தியே. உண்மையில் பெண்கள் இத்தகைய மன விருப்பத்திற்கு உள்ளாகவில்லை. தமிழ்நாட்டுப் பெண்களின் பண்பாடு எந்தக் கால நிலையிலும் உயர்ந்ததாகவே இருந்திருக்கிறது. நாணம், அச்சம், மடம், பயிர்ப்பு என்னும் நான்கு பண்புகளும் அவர்களின் நான்கு படைகள்.

பெண்கள் மடலேறுவது என்பது நிகழ்வது இல்லை. ஆண்களே மடலேறுவர். மடலேறுதல் என்பது காதல் மிகுந்த தலைவன் தன்னுடைய காதலியைத் தான் அடைய முடியாத சூழலில் மேற்கொள்ளும் செயலாகும். பெண்ணைப் பெற்றோர் காதலுக்குத் தடையானபோது தலைவன் பனை மடலால் செய்த குதிரை ஊர்ந்து, தன் காதலியின் உருவம் தீட்டிய ஓவியத்தைக் கையில் பற்றி, ஊர்மக்கள் அறிய, இவள் என்னால் காதலிக்கப்பட்டவள் என்று அறிவிப்பான். இதுவே மடலேறுதல் ஆகும். இப்படிப்பட்ட செயலைப் பெண்கள் செய்ய இயலுமா?


கடல்அன்ன காமம் உந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்கது இல்.               (குறள், 1137)  

என்று கூறுகிறார் வள்ளுவர். உள்ளத்தில் கடல் போலக் காம உணர்ச்சி இருந்தாலும் பெண்கள் மடலேற மாட்டார். அவ்வாறு ஏறாமையே பெண்ணின் பெருமையாகும். ஆயினும் பக்தி உலகில் பெண்களும் மடலேறுவதாகப் பாடுவதாக இருக்கின்ற ஓர் இலக்கிய உத்தியை இறையன்பர்கள் மேற்கொண்டனர். திருமங்கை ஆழ்வார் நாராயணனை மோகித்த பெண் மடலேறுவதாகப் பெரிய திருமடல், சிறிய திருமடல் என்ற இரண்டு இலக்கியங்களைப் படைத்துள்ளார்.

2.3.3 பெண்களைக் கவர்ச்சிப் பொருள் ஆக்கிய நூல்கள்

தூது நூல்களில் பெண் காற்று, வண்டு, மயில், கிளி, மேகம், குயில் ஆகிய பொருள்களைத் தலைவனிடத்துத் தூதாக அனுப்புவாள்.

விலங்கு, பறவை, மேகம், தென்றல் காற்று போன்ற ஒன்றிடம் உரைப்பதாகவே புலவர் பாடுவர். கோவை நூல்களிலும் காதலே பாடுபொருளாய் விளங்கினும், வள்ளல் ஒருவரைப் பாடல்தோறும் பெயர் விளங்கப் புனைய வேண்டும் என்ற விருப்பமே, நூல் தோன்றக் காரணமாகும். எனவே பெண்களும், பெண்கள் பங்கு பெறும் அகப்பொருளும் கவர்ச்சிப் பொருள்களாய்ப் புலவர்களால் இலக்கியப் படைப்பிற்குக் கொள்ளப் பெற்றமையினை நாம் அறியலாம். பெண்ணைப் புனைந்து புனைந்து பாடும் பாங்கிலேயே கவிதையின் செழிப்பு விளங்கியது.


புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன்
கயலே மணந்த கமலம் மலர்ந்து ஒரு கற்பகத்தின்
அயலே பசும்பொன் கொடிநின்றது

Audio Button

ஓர் உருவகக் காட்சியைக் காட்டுகின்றார். கூந்தலைச் சுமந்து பிறைபோன்ற நெற்றியைக் கொண்டு, வில் போன்ற புருவங்களோடு, மீன் போன்ற கண்களையும், தாமரை போன்ற முகத்தையும், கொண்ட கொடி போன்ற பெண் என்பது இவ்வுருவகத்தால் பெறப்படும் பொருள் ஆகும்.

2.3.4 சிற்றின்ப நோக்கம்

அழகு கனிந்த பொருள்களையும், ஆக்கம் தரும் பொருள்களையும் பெண்ணாய்க் காண்பது தமிழ்மரபு. நிலம், ஆறு, நிலவு ஆகியவற்றைப் பெண்ணாகச் சித்திரிப்பது தமிழ்ப் பண்பாடு. அந்நிலையில் இடைக்காலத்தில் பெண்டிரைக் குறித்த வருணனை மிகுதியாகி இருக்கின்றது. இந்த நிலை மாறி நொண்டி நாடகங்கள், விறலிவிடுதூது நூல்கள், கூளப்ப நாயக்கன் காதல் போன்றவை சிற்றின்ப வருணனை மிக்க நூல்களாகப் பிறந்தன.


தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. சிற்றிலக்கியம் என்பது யாது?

2. சிற்றிலக்கியங்களின் பண்புகள் யாவை?

3. வலங்கை, இடங்கைப் பிரிவுகளில் இடம்பெற்ற சாதிகள் எத்தனை?

4. தீட்டு உடையோராய்க் கருதப்பட்டோர் யார்?

5. திருக்கோயில்களில் தமிழ் எந்த நிலையில் இருந்தது?