2.5 சமயப்பூசல்

Audio Button

இக்காலத்தில் சமயங்களுக்குள் வேறுபாடும், சமயச் சண்டைகளும் தோன்றிவிட்டன. சைவ சமயமும் வைணவ சமயமும் கடுமையாக ஒன்றையொன்று எதிர்த்தன. சைவ வைணவப் போராட்டம் மட்டுமன்றி, வைணவ சமய உட்பிரிவுகளான தென்கலை, வடகலை ஆகிய இரண்டையும் சார்ந்தவர்கள் தங்களுக்குள் கடுமையாக மோதிக் கொண்டனர். சமய நிலையில் உயர்ந்த கோட்பாடுகள் மறைந்து, என் தெய்வம் பெரியதா, உன் தெய்வம் பெரியதா என்ற சண்டை தொடங்கிவிட்டது. சிறு தெய்வ எண்ணிக்கைகள் பெருகின. தத்துவ ஆராய்ச்சி மறைந்தது. பண்பாடு ஓரளவுக்குத் தேய்வுற்றது.

2.5.1 சிறு தெய்வ வழிபாடு

இக்காலத்தில் சக்தி, மாரி, காளி, மதுரை வீரன், இருளன், முனி போன்ற தெய்வங்களின் வழிபாடு, ஊருக்கு ஊர் பெருகியது. ஒவ்வொரு கோயிலிலும், அவ்வத்தெய்வம் சார்ந்த பூசவிழா, பூரவிழா, பாவை விழா, ஆனித் திருமஞ்சனம், சித்திரை விழா, மகம், பங்குனி விழா, கார்த்திகை விழா ஆகியன கொண்டாடப்பட்டன. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து, நாயக்கர்களால் தமிழகத்தில் புகுத்தப்பட்ட தீபாவளி விழா, வரவர வலிமை பெற்றது. தெய்வங்களின் எண்ணிக்கையும், சடங்குகளின் எண்ணிக்கையும், திருவிழாக்களின் எண்ணிக்கையும் பெருகின. காளி, மாரி போன்ற தெய்வங்கள் கொடூரமானவை, தண்டிக்கும் சக்தி உடையவை என்ற கருத்துப் பரப்பப்பட்டது.

2.5.2 தத்துவ வீழ்ச்சி

ஆத்மா, பரம்பொருள், நல்வினை, தீவினை போன்றவற்றைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்த நிலை மாறியது. எந்தத் தெய்வம் அருள் செய்யும்? எந்தத் தெய்வம் எதைச் செய்தால் மகிழ்ச்சி அடையும் என்ற கருத்துத் தோன்றியது. மொட்டை அடித்துக் கொள்ளுதல், தீ மிதித்தல், அலகுக் குத்தி காவடி சுமத்தல், உடம்பைத் தரையில் கிடத்திக் கோயிலைச் சுற்றிப் புரண்டு வருதல் போன்ற பல நோன்புகள் பெருகின. தெய்வத்திற்குக் கள், சுருட்டு, சாராயம் ஆகியவற்றை மக்கள் படைத்தனர். கோயில் உண்டியல்களில் காணிக்கை பெருகியது. தத்துவ ஆராய்ச்சி மறைந்து மூடநம்பிக்கைகள் பெருகின. இதனால் தத்துவங்களுக்குத் கொடுத்த முக்கியத்துவம் குறைந்தது.