5.3 நம்பிக்கை தரும் சில நிகழ்வுகள்

Audio Button

மேற்காட்டிய சிலவற்றை நீக்கிக் கண்டால் தமிழர் பண்பாட்டில் இன்று ஒளிமிகுந்த பக்கங்கள் பலப்பல உருவாகியுள்ளன. வழிமாறிச் செல்லும் சமூக சிந்தனைகளை நெறிப்படுத்த அரசும், சமூக உணர்வு கொண்ட அமைப்புகளும் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளால் நம்பிக்கை தரும் மாற்றங்கள் தொடங்கியுள்ளன. ஒருங்கிணைந்த சமூக முன்னேற்றம், மனிதநேயம், சமய நல்லிணக்கம், பெண்ணிய வளர்ச்சி போன்றவை குறிப்பிடத்தக்கன.

5.3.1 சமூக ஒருமை உணர்வு

தமிழர் பண்பாட்டில் இன்று ஒளி மிகுந்த பக்கங்கள் பலப்பல உருவாகியுள்ளன என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும். தாழ்த்தப் பட்டவர்களாகவும், பிற்படுத்தப்பட்டவர்களாகவும் சமுதாய வீதியில் புறக்கணிக்கப்பட்டவர்கள் இன்று கணிசமாக முன்னேறியுள்ளனர். தீண்டாமையை இன்று தமிழகம் போற்றவில்லை. நிறபேத உணர்வுகளும், பிறப்பால் கற்பிக்கப்பட்ட உயர்வு தாழ்வுகளும் இன்று நாகரிகமற்றவை என்ற கருத்து வலிமை பெற்றுவிட்டது. சமய சாதிச் சண்டைகளைப் பெரும்பான்மையான மக்கள் ஒப்பவில்லை. பொது வாழ்வில் சமய நல்லிணக்கம் போற்றப்பட்டு வருகின்றது. இந்து, இசுலாம், கிறித்துவம் என்ற மூன்று சமயங்கள் தமிழகத்தில் ஒருமைப்பாட்டுணர்வைப் பேணி வருகின்றன. தமிழகக் கல்வி நிலையங்களில் அனைத்துச் சமய இலக்கியங்களும் பாடமாக அமைந்துள்ளன. தாயுமானவரையும், மஸ்தான் சாகிபையும், வீரமாமுனிவரையும், குமரகுருபரரையும், வேதநாயகரையும், இராஜமையரையும் ஒப்பிட்டு ஆராயும் உள்ளங்களை இங்குக் காணலாம். பலப்பல முன்னேற்றமான விளைவுகளும் விளைச்சல்களும் தமிழ்ச் சமூகத்தில் இக்காலத்தில் தோன்றியுள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்குக் காணலாம்.

5.3.2 முன்னேறும் பெண்ணியம்

தமிழகப் பெண்களின் போக்கில் பெரிய மாறுதல்களை இக்காலக் கல்வியும், வேலைவாய்ப்புகளும் உருவாக்கியுள்ளன. முத்துலட்சுமிரெட்டி முதன் முதல் மருத்துவக்கல்வி பயிலும் பெண்ணாகக் கல்லூரிக்குள் நுழைந்தபோது இருந்த வியப்பும், எதிர்ப்பும் மறைந்து பெண்களே பெரும்பான்மையவராகத் தொழிற்கல்வித் துறைகளில் இடம்பெறும் நிலை வளர்ந்துள்ளது. பெண்கள் பணி வாய்ப்புப் பெறக்கூடிய சூழலை உருவாக்கும்  வகையில் தமிழக அரசு 33 விழுக்காட்டுப் பணியிடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கியுள்ளது.

தற்குறியாய், உலகியல் அறியா மூடமாய், அடுப்பங்கரை ஒன்றே அறிந்தவளாய், நகைகளின் சுமைதாங்கியாய், அலங்காரப் பதுமையாய், ஆணுக்கு அடிமையாய், மண்ணெண்ணெய்க்குப் பலிப்பொருளாய், வரதட்சணையால் முடிவு செய்யப்படும் வாழ்க்கைப் பொருளாய்ப் பெண் இருந்த காலம் மாறிவிட்டது. எனினும் தமிழ்ச் சமூகம் முழுமையும் பெண்ணைப் போற்றுவதாகவும் ஆணுக்குச் சமமாகக் கருதுவதாகவும் கூறமுடியவில்லை. பெண் குழந்தையைக் கருவில் அழிப்பது, பிறந்தபின் எருக்கம்பால் ஊட்டிக் கொல்வது போன்ற இரக்கமற்ற செயல்கள் சமூகத்தின் சில பகுதிகளில் நிகழாமலில்லை.

குன்றக்குறவன் ஒருவன் கடவுளை வேண்டிப் பெண் பெற்றான் என்று ஐங்குறுநூறு கூறுகின்றது. இக்கருத்தும்

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
     மாதவம் செய்திட வேண்டு மம்மா

Audio Button

என்று கவிமணி கூறிய கருத்தும் இன்று சில பகுதிகளில் போற்றப் பெறவில்லை.

பெண்ணென்று பூமிதனிற் பிறந்துவிட்டால் - மிகப்
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்

Audio Button

என்று பாரதி கூறுவது போலப் பெண்கள் துன்பப் பிறவிகளாக அல்லற்படுவதும் நம் பண்பாட்டின் ஒரு கூறுதான்.

இன்று பெண்ணியக்கம் வலிமை பெற்றுள்ளது. பெண் போராடும் உள்ளம் பெற்றுள்ளாள். தமிழர் பண்பாட்டில் கண்ணகியும் கண்ணம்மாவும் உயிர்ப்புற்று உலா வருகின்றனர். காவல்துறையில், ஆட்சித் துறையில், வான்படை, கப்பல் துறைகளில், பொறியியல், மருத்துவ அறிவியல் துறைகளில் பெண்கள் பங்கேற்கும் மறுமலர்ச்சி தமிழகத்திலும் தோன்றியுள்ளது.