தமிழ்நாட்டிலும்
நகரங்களில் இன்று தூய தமிழ்ப் பண்பாடு
முழுமையாக உள்ளது என்று கூறுவதற்கில்லை. பண்பாட்டின்
அடிநிலைகளில் பெரும் மாறுதல்கள் இல்லாவிட்டாலும்
பண்பாட்டுக் கூறுகள் சிதைவுறவே செய்திருக்கின்றன. கீழே
உள்ள காட்சிகளே பண்பாட்டுச் சிதைவுக்குச்
சான்று: வாசலில் குரோட்டன்ஸ் வளர்க்கும் நாகரிகம். சில அன்றாட
சமூகக் காட்சிகள் மக்கட் தொகை மிகுதியாக இருக்கக்கூடிய சூழல், நுகர்வுப் பொருள்களைப் பெறுவதில் ஒரு பெரும் துன்பத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில் விருந்தோம்பல் என்பது மறக்கப்பட்ட ஒரு பண்பாக இருக்கிறது. வரவேற்பறை, முகமன் பேச்சு, அதிகப்படியான நிலையில் ஒரு தேநீர் என்ற அளவில் நெருக்கமான உறவுகள் கூடக் கத்தரிக்கப்படுகின்றன. தாய் பிள்ளை உறவுக்கிடையிலும் கூட வேற்றுமை உருவாகியுள்ளது. மருமகள் வருகை, சொத்துப்பிரிவினை போன்றவை பேதங்களை உண்டாக்கியிருக்கின்றன. கருச்சிதைவு, வரதட்சிணை, பெண் வெறுப்பு, குறுக்கு வழியில் பொருள் ஈட்டும் முயற்சி, விளம்பரப் புகழ் பெற்றுவிடும் ஆர்வம் ஆகியன பண்பாட்டைப் பெரிதும் சிதைத்திருக்கின்றன. இந்நிலையில் நகரங்களும் சிற்றூர்களும் எந்த நிலையில் உள்ளன எனக் காணலாம். 5.5.1
நகரப் பண்பாடு வேகமாகத் தொழில்மயமாகிக் கொண்டிருக்கும் நகரங்களில் புதிய புதிய குடியிருப்புகள், வேலைக்குப் போகும் ஆண் பெண் சிறார்கள், ஆங்கிலப் பள்ளிகளில் சீருடைகளில் வந்திறங்கும் அரும்புகள், இரவைப் பகலாகக் காட்டும் சோடியம் விளக்குகள் ஒளிவெள்ளம் பரப்பும் கடைத் தெருக்கள், ஆடை அணிகலன்களை விற்கும் பெரிய மாளிகைகள் போன்ற கடைகள், நடைபாதைகளில் மலிவுவிலைப் பொருட்களைக் கூவி விற்கும் சிறு வணிகர்கள், பல துறைகளிலும் தேர்ந்த மருத்துவர்களால் நடத்தப்பெறும் தனியார் மருத்துவ மனைகள், ஐந்து நட்சத்திர உணவகத் தங்கும் விடுதிகள், சாலைகளில் ஓயாது போய்க் கொண்டிருக்கும் பேருந்துகள், கடற்கரைகளில் காற்று வாங்க மாலையில் மொய்க்கும் மக்கள் திரள், மக்கள் பார்வை படரும் இடங்களில் மிகப்பெரிய விளம்பரப் பலகைகள், பாராட்டுக்குரிய செயல் புரிந்தோர்க்குச் சிலைகள், சிறிய பெரிய கோயில்கள், காதைத் துளைக்கும் ஒலிபெருக்கிகள், எவ்வளவு திட்டங்களை வகுத்தும் மாற்றமுடியாத நடைபாதைக் குடிசைகள், தெருவோரக் குழாயிலிருந்து ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீர், விழியற்றவரைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்று ஓரமாய்விடும் சமூகத் தொண்டர், கோடையில் குலைகுலையாய்க் கட்டி விற்கப்படும் இளநீர், தர்பூஸ் பழங்கள், வெள்ளரிப் பிஞ்சுகள் இப்படிப் பலப்பல காட்சிகள் நம் கண்களை நகர்ப்பகுதிகளில் வந்து தழுவும். நகரப் பண்பாடு புறநிலையில் மேற்கு நாடுகளின் தாக்கத்தைப் பெற்றிருப்பது உண்மைதான். ஆனால் புதைநிலையில் தமிழர் உள்ளப்பாங்கு அங்கும் குலையாமல் இருக்கிறது. 5.5.2 சிற்றூர்ப் பண்பாடு
5.5.3 கிராமத்து வரலாற்றாசிரியன் புதுமைப்பித்தன் கூறுவது போலக் கிராமத்தான் ஒவ்வொருவனும் வரலாற்றாசிரியனாக விளங்குகிறான். போன தையிலே வந்த வெள்ளம், உடைப்பெடுத்த ஏரி, சின்னான் மகன் வீரன் ஏரி உடையாமல் ஊரைப் பாதுகாத்தது, கண்ணாத்தா காட்டில் விறகெடுக்கச் சென்றபோது பாய்ந்து வந்த புலி, ஐயனார் கோயில் புற்றில் யார் கண்ணிலும் படாமல் இருக்கும் அஞ்சுதலை நாகம் என்று பலப்பல உண்மையும் கற்பனையும் கலந்து தான் வாழும் ஊரோடு தனக்கிருக்கும் பிணைப்பைக் காட்டுவான் சிற்றூர்க் குடிமகன். ஒவ்வொரு வீட்டைப் பற்றியும், வீட்டிலுள்ளவர் பற்றியும் அவன் தெரிந்து வைத்திருக்கிறான். அந்தரங்கம் என்பது அவனிடம் இல்லை. ஒப்புரவு, ஒட்டுறவு ஆகியவற்றைக் கொஞ்சமும் பின்னடையாது பாதுகாத்து வைத்துள்ளன தமிழகச் சிற்றூர்கள். |