தமிழகத்திற்கு வந்த சமண முனிவர்கள் இயற்கையான தமிழக
மலைக்குகைகளில் தங்கித் தம் சீடர்களுக்கும், மக்களுக்கும் அற
உபதேசம் செய்தனர். அம்மலைகளில் அவர்களுக்குரிய கல்
படுக்கைகளைத் தமிழக அரசர்களும், வணிகர்களும்,
பொதுமக்களும் அமைத்துத் தந்தனர். அவை பாழி, பள்ளி,
அதிட்டானம், கல்கஞ்சனம், இருக்கை என்று கூறப்பட்டன.
மேற்குறிப்பிட்ட செய்திகளை அக் கல்படுக்கைகளின் அருகே
கல்வெட்டெழுத்துகளாகவும் பொறித்தனர். இந்த அமைப்புடைய
குகைகள் மாங்குளம், அறச்சலூர், சித்தன்னவாசல், புகலூர்,
அரிட்டாபட்டி, அய்யர்மலை, அம்மன் கோயில்பட்டி, ஆனைமலை,
ஜம்பை, கருங்காலக்குடி, கீழவளவு, கொங்கர் புளியங்குளம்,
குடுமியான்மலை, குன்னக்குடி, மாமண்டூர், மன்னார் கோயில்,
மறுகால்தலை, மேட்டுப்பட்டி, முதலைக்குளம், முத்துப்பட்டி,
நெகனூர்ப்பட்டி, திருச்சி, திருப்பரங்குன்றம், திருவாதவூர்,
தொண்டூர், வரிச்சியூர், விக்கிரமங்கலம் போன்ற பல இடங்களில்
உள்ளன. இங்கெல்லாம் தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன.
|
கற்கோயில்களில் சுவர்களிலும், தூண்களிலும்,
வாயில்
நிலைகளிலும், மேல் விதானங்களிலும், தனிக்குத்துக் கற்களிலும்
கல்வெட்டுகளைப் பொறித்தனர். சில கோயில்களில்,
சுவாமி சிலைகளின் பீடங்களில்கூடக் கல்வெட்டுகள்
பொறிக்கப்பட்டுள்ளன.
|
கோயில்களுக்கு நாள் வழிபாட்டுக்காகவும், சிறப்பு
விழாக்களுக்காகவும், கோயில் பகுதிகளைப் புதிதாகக் கட்டும்
திருப்பணிக்காகவும், பழுதுபார்க்கவும், சுவாமிகள் திருவீதிகளில்
உலா வரவும், பாடல்களைப் பாடவும், ஆடல் நிகழ்ச்சிகளை
நடத்தவும், விளக்குகள் எரிக்கவும், மலர்மாலைகள் அணிவிக்கவும்,
அடியார்கட்கு அன்னமிடவும், கோயில் பணியாளர்களை
நியமிக்கவும், இசைக் கருவிகள் இசைக்கவும் பலர் கொடைகள்
அளித்தனர். அவற்றைக் கல்வெட்டாக வெட்டினர். அளித்த
கொடைகள் காசு, பொன், நெல், விளைநிலம் முதலிய பொருள்களாக
இருந்தன. |