|
2.5 ஊராட்சி முறை |
தமிழக அரசர்கள் ஆட்சி சிறப்புற்றிருந்தது.
நாட்டு மக்கள்
எல்லா நன்மைகளும் பெற்று அமைதியாக வளமான வாழ்வு
வாழ்ந்தனர். இதற்கெல்லாம் முதற்காரணம் அக்காலத்தில் ஊர்கள்
தோறும் நிலைபெற்றிருந்த ஊராட்சி மன்றங்களின் தன்னலமற்ற
தொண்டேயாகும். தமிழக ஊர்களில் அமைந்திருந்த அந்த
ஊர்ச்சபைகள் எல்லாம் பொறுப்புணர்ச்சியுடன் விளங்கின.
அறநெறி தவறாமல் நடுநிலைமையோடு அவை ஒழுங்காகத் தம்
கடமைகளைச் செய்தமையால் மக்கள் அச்சமின்றி நல்வாழ்வு
வாழ்ந்தனர். மன்றங்களின் முடிவுகளை ஏற்று, மக்கள் அனைவரும்
கீழ்ப்படிந்து நடந்தனர். தீயோர்கள் அடங்கி
ஒடுங்கினர்.
இச்சபைகளின் பணிகள் அரசன், அரசனுடைய அதிகாரிகள்
கண்காணிப்பில் இருந்தன.
|
• பிரிவுகள்
|
அக்காலத்தில் ஊராட்சி
நடத்தி வந்த மன்றங்களைக்
கவனிக்குமிடத்து அவை நான்கு வகைப்பட்டிருந்தன என்பதை
அறியலாம். பிராமணர்கள் ஊர் நில உரிமையுடன் வசித்துவந்த
சதுர்வேதிமங்கலங்களில் இருந்த சபை, கோயில்களுக்கு உரிய
தேவதான சபை, உழவர் உள்ளிட்ட ஏனையோர் இருந்த ஊர்ச்சபை,
வணிகர்கள் வசித்து வந்த ஊர்களின் சபை என அவை நான்கு
வகைப்படும்.
|
2.5.1
வாரியங்களும் குழுக்களும் |
மன்றங்களின் கடமைகள்
பெருகிவந்தன. கடமைகள்
பெருகவே அவற்றை நிறைவேற்றுவதற்குத் தனித்தனி வாரியங்கள் அமைப்பது இன்றியமையாததாயிற்று. அவை சம்வத்சர வாரியம்
அல்லது ஆட்டை வாரியம், ஏரி வாரியம், தோட்ட வாரியம்,
கலிங்கு வாரியம், பஞ்சவார வாரியம், பொன் வாரியம், கழனி
வாரியம், கணக்கு வாரியம், தடிவழி வாரியம், குடும்பு வாரியம்
எனப் பலவகைப்பட்டன. இவ்வாரியங்கள் அன்றி மூலபருடையார், சாத்த
கணத்தார், காளி கணத்தார், கிருஷ்ண கணத்தார்,
குமார
கணத்தார், சங்கரப்பாடியார், பன்மாகேஸ்வரர் போன்ற வேறு சிறு
தனிக் குழுவினரும் அக்காலத்தில் இருந்தனர். (இங்குச்
சுட்டப்பட்டுள்ள வாரியங்கள் பற்றிய விளக்கங்கள்
பாட
இறுதியிலுள்ள கலைச் சொற்கள் பகுதியில் கூறப்பட்டுள்ளன.)
|
• உறுப்பினர்
|
சொந்த இடத்தில்
வீடு கட்டிக் குடியிருப்போர், வரி
செலுத்தக் கூடிய கால்வேலிக்குமேல் நிலம் உடையவர்கள், கல்வி
அறிவுடன் அறநெறி தவறாமல் தூய வழியில் பொருள் ஈட்டி
வாழ்பவர்கள், காரியங்களை நிறைவேற்றுவதில்
வல்லமையுடையவர்கள், முப்பத்தைந்து வயதுக்கு மேல் எழுபது
வயதிற்கு உட்பட்டவர்கள், கடந்த மூன்றாண்டு வாரியத்தில்
உறுப்பினராக இல்லாதவர்கள், பெரும்
கல்வியறிவுடன்
அரைக்கால் வேலி நிலம் உள்ளவர்கள் ஆகியோர் வாரிய
உறுப்பினர் ஆவதற்கு உரிமை உடையவர்கள்
ஆவர்.
அக்காலத்தில் சபை உறுப்பினர் ஆவதற்குச் சொத்து, கல்வி,
ஒழுக்கம் ஆகியவையே காரணமாக இருந்தன.
|
• உறுப்பினராக இயலாதோர்
|
வாரிய உறுப்பினராக இருந்து கணக்குக்
காட்டாதவர்கள்,
இவர்களின் சிறிய தந்தை பெரிய தந்தை மக்கள், அத்தை மாமன்
மக்கள், தாயோடு உடன் பிறந்தான், தகப்பனோடு உடன் பிறந்தான்,
சகோதரியின் மக்கள், சகோதரியின் கணவன், மருமகன், தகப்பன்,
மகன் ஆகியோரும் மற்ற நெருங்கிய
உறவினர்களும், பெரும்பாதகம் புரிந்தோர், இவர்கள் உறவினர்,
தீயோர்
கூட்டுறவால் கெட்டுப் போனவர், கொண்டது விடாத கொடியோர்,
பிறர் பொருளைக் கவர்ந்தவர், கையூட்டு வாங்கியோர், ஊர்க்குத்
துரோகம் செய்தோர், கூடத்தகாதவர்களோடு
கூடியோர்,
குற்றம்புரிந்து கழுதை மேல் ஏறினோர், கள்ளக் கையெழுத்து
இட்டோர் ஆகியோரும் வாரிய உறுப்பினர் ஆவதற்கு உரிமை
உடையவர்கள் அல்லர்.
|
• வாரியம் நடைமுறை
|
பறை அறைந்து அல்லது முரசு அடித்துச்
சபை கூட்டப்படும்.
பெரும்பாலும் பகல் நேரத்தில் கூட்டம் நடைபெற்றது. இரவுக்
கூட்டங்கள் சரியாக நடைபெறாமலிருந்ததும், எண்ணெய், திரிச்
செலவு அதிகமானதும் அதற்குக் காரணம்
ஆகும்.
வாரியத்திற்கென்று தனி இடம் கிடையாது. ஏரி, குளக்கரைகளிலும்,
மரத்தின் அடியிலும், கோயில் கோபுரத்தின் கீழும், கோயில்
மண்டபங்களிலும் அவை கூடிற்று. உறுப்பினர்களுக்குச் சம்பளம்
எதுவும் கிடையாது. வாரியத்தின் பதவிக் காலம் ஓராண்டாகும்.
வாரியத் தேர்தலின்போது அரசு அலுவலர் உடன் இருப்பார்.
முதல் பராந்தக சோழன் காலத்தில் உத்தரமேரூர்ச்
சபைத்
தேர்தல் நடைபெற்றபோது, இரு முறை அரசு அலுவலர்களான தத்தனூர் மூவேந்த வேளானும், சோமாசிப் பெருமாளும்
உடன் இருந்தனர் என்பதை உத்திரமேரூர்க் கல்வெட்டு கூறுகின்றது.
|
2.5.2 குடவோலை முறை |
ஒவ்வொரு ஊரும் அதன் பெருமை
சிறுமைகட்கு ஏற்பப் பல
குடும்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. தொண்டை
நாட்டு
உத்தரமேரூர் முப்பது குடும்புகளையும், சோழ நாட்டுச் செந்தலை
அறுபது குடும்புகளையும் கொண்டிருந்தது. தகுதியும் விருப்பமும்
உடையவர் பெயர்களை ஓலை நறுக்கில் எழுதிக் குடத்தில் இடுவர்.
அதனைக் கட்டி முத்திரையிடுவர். எல்லாக் குடும்புகளில் இருந்தும்
வந்த குடங்களை ஊர்ப் பொது மன்றத்திற்குக் கொண்டு வருவர்.
ஊரில் உள்ள எல்லோரும் கூடியுள்ள சபையில் குடத்தை
எல்லோருக்கும் எடுத்துக் காட்டி முத்திரை அழித்துக் கட்டவிழ்த்து
சிறு குழந்தையை விட்டு ஓலையை எடுக்கச் செய்வர். அதைப்
பெரியவர் ஒருவர் ஐந்து விரலும் விரிய வாங்கிப்
படிப்பார்.
சபையில் உள்ள எல்லோரும் படிப்பர். பின் உறுப்பினராக
ஓலையில் உள்ளவர் பெயர் எழுதப் பெறும். இந்தப் பழங்காலத்
தேர்தல் முறைக்குக் குடவோலை முறை என்று பெயர் வழங்கியது.
இம்முறை தமிழ்நாட்டில் சங்க காலத்திலேயே இருந்தது. ‘கயிறு
பிணிக்குழிசி ஓலை கொண்மார் பொறிகண்டு அழிக்கும் ஆவண
மாக்கள்’ என்ற சங்க இலக்கியத் தொடரால் இதனை
அறிகின்றோம்.
|
2.5.3
மண்டலப் பேரவை |
கி.பி.
13ஆம் நூற்றாண்டில் செயங்கொண்ட
சோழமண்டலத்துள் உள்ள எல்லா நாட்டுப் பிரதிநிதிகளும் கூடி
எல்லா நாடுகளிலும் உள்ள தேவதானம், திருவிடையாட்டம்,
திருநாமத்துக்காணி, பள்ளிச்சந்தம், அகரப்பற்று, மடப்புறம்,
சீவிதப்பற்று, படைப்பற்று, வன்னியப்பற்று ஆகிய
எல்லா
நிலங்களிலும் வேலி ஒன்றுக்கு ஆறுகல நெல் தள்ளிவிட
வேண்டும் என்று தீர்மானித்தனர். இதனை மன்னன் மதுராந்தகப்
பொத்தப்பிச் சோழன் ஒப்புக் கொண்டு ஆணை பிறப்பித்ததைக்
காஞ்சிபுரம் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இதன் மூலம் மண்டலம்
எல்லாவற்றிற்கும் ஒரு பேரவை இருந்தது என்பதை அறிகிறோம்.
(இங்குச் சுட்டப்பட்டுள்ள மண்டலங்கள் பற்றிய விளக்கங்கள்
பாட இறுதியிலுள்ள கலைச் சொற்கள்
பகுதியில் கூறப்பட்டுள்ளன.) |