2.7 தொகுப்புரை

இதுவரை, சேர சோழ பாண்டிய மன்னர்கள் நாட்டை ஆண்ட முறைகளுடன் பல்லவர், விசயநகர மன்னர்கள் நாட்டை ஆண்ட முறைகளையும் அவர்கள் வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொண்டீர்கள். அவர்களுடைய சிறப்புப் பெயர்கள், குலப்பெயர்கள் என்னவென்று கூறப்பட்டன. மன்னர்களின் வெற்றிச் சிறப்பு மெய்க்கீர்த்தி என வழங்கப்பட்டது. அரசியர் கோயில் திருப்பணிகள் செய்துள்ளனர். பெண் அதிகாரிகள் இருந்த செய்தி பெண்கள் சமூகத்தில் ஏற்றம் பெற்று வாழ்ந்த நிலையைக் காட்டுகிறது.

நாடுகள், மண்டலங்களாக, வளநாடுகளாக, நாடுகளாக, ஊர்களாகப் பிரிக்கப்பட்டு நல்லாட்சி நடந்ததைக் காணமுடிகிறது. குடஓலை முறையில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாரியத் தலைவர்கள் குற்றமற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. வரிகள் முறையாக வசூலிக்கப்பட்டன. கல்வெட்டில் காணப்படும் கலைச் சொற்களும் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.


கல்வெட்டுக் கலைச் சொற்கள்

வாரியங்களும் குழுக்களும்

ஆட்டை வாரியம்

இது ஆண்டு வாரியம், சம்வத்சர வாரியம் என்றும் கூறப்பெறும். ஊர்ச் சபையின் குழுக்களில் ஒன்று. இதுவே குழுவில் தலைமையான வாரியம்.

குடும்பு வாரியம்

ஊர்ச்சபை அமைந்துள்ள ஊரின் ஒரு பகுதி குடும்பு. இன்றைய நகராட்சி நிர்வாகத்தில் ‘வார்டு’ அமைப்பைப் போன்றது. பெரும்பாலும் இது விளைநிலத்தையொட்டி அமையும். அதை நிர்வகிக்கும் குழு குடும்பு வாரியம்.

தடிவழி வாரியம்

ஊர்ச் சபையில் வயலையும் வயல் பற்றிய கணக்கையும் நிர்வகிக்கும் குழு.

மூலபருடையார் கோயில் நிருவாக சபையார்.
சாத்தகணத்தார்

சாத்தகணத்தார்னார் கோயிலை நிர்வகிக்கும் குழுவினர்.

ஐகாளிகணத்தார் காளி கோயிலை நிர்வகிக்கும் குழுவினர்.
குமாரகணத்தார் முருகன் கோயிலை நிர்வகிக்கும் குழுவினர்.
சங்கரப்பாடியார் எண்ணெய் வணிகர்கள் கொண்ட குழுவினர்.
பன்மாகேஸ்வரர்

சிவனடியார் கூட்டம் (பன்மாகேஸ்வரன் என ஒருமையில் வராது. பன்மாகேஸ்வரர் எனப் பன்மையிலேயே வரும்.)


மண்டலப் பேரவை

திருவிடையாட்டம்

விஷ்ணு கோயில்கட்கு அளிக்கப் பெற்ற மானிய நிலம்.

திருநாமத்துக்காணி

சிவன் கோயில்கட்கு அளிக்கப் பெற்ற மானிய நிலம்.

பள்ளிச்சந்தம்

பௌத்தப் பள்ளிகட்கும் சமணப் பள்ளிகட்கும் அளிக்கப் பெற்ற மானிய நிலம் (சமண, பௌத்தக் கோயில்கள் பள்ளிகள் எனப்படும்.)

அகரப்பற்று

பிராமணர்களின் ஊராகிய அக்கிரகாரங்களுக்கு உரிய நிலம் (அகரம் என்பது அக்கிரகாரம் என்பதன் சுருக்கப் பெயர்.)

மடப்புறம் மடங்களுக்கு விடப்பட்ட மானிய நிலம்.
சீவிதப்பற்று

வாழ்நாள் வரை அனுபவிக்கும்  உரிமையோடு உள்ள நிலம்.

படைப்பற்று

படையில் உள்ளவர்கட்குப் பொதுவாக  அளிக்கப் பெற்ற நிலம் அல்லது ஊர்.

வன்னியப்பற்று

படையில் பணிபுரியும் வீரர்கட்கு அளிக்கப் பெற்ற நிலம் அல்லது ஊர். (வன்னியர் - படை வீரர்)


பலவகை வரிகள்

தட்டாரப்பாட்டம் பொற்கொல்லர்கள் செலுத்தும் வரி.
ஈழம்பூட்சி

ஈழவர் மீதான வரி (ஈழவர்- கள் இறக்குவோர்)

வண்ணாரப்பாறை துணி வெளுப்போர் மீதான வரி
இலைக்கூலம் வெற்றிலை வணிகர் மீதான வரி.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1)

‘சாவடி’ என்ற பகுதியின் பெயர் யார் காலத்தில் ஏற்பட்டது?

(விடை)
2)

சோழர் காலத்தில் தொண்டைநாடு எவ்வாறு அழைக்கப்பட்டது?

(விடை)
3)

சோழநாட்டில் முதலில் இருந்த வளநாடுகள் எத்தனை?

(விடை)
4) பழங்காலத் தேர்தல் முறைக்குப் பெயர் என்ன? (விடை)
5) ‘சுங்கந் தவிர்த்த சோழன்’ என்று சிறப்பிக்கப்படுபவன் யார்? (விடை)