5.0 பாட முன்னுரை

பழங்காலத்து மக்கள் நீதி நூல்கள் காட்டிய வழியில் அறநெறிப்படி வாழ்ந்து வந்தனர். இல்வாழ்க்கையில் மக்கள் ஈடுபட்டு, சுற்றத்தாருடன் கூடி, விருந்தினரை உபசரித்து மகிழ்ந்து வாழ்ந்தனர். கற்றறிந்த சான்றோர்கட்கும், சமயப் பெரியார்கட்கும், புலவர்கட்கும், குருக்கள்மார்க்கும் உயர்வும் மரியாதையும் தந்து அற வாழ்க்கை நடத்தினர். திருமணம் செய்யாத இளைஞர்களைப் பயலாள் என்று கல்வெட்டுக் கூறுகிறது. ஊர்ச்சபை நிர்வாகத்தில் முப்பத்தைந்து வயதுக்கு மேலானவர்களே அங்கம் பெற்றனர். பெண்களுக்கு ஊர்ச்சபைகளில் அன்று இடமளிக்கப்படவில்லை. ஓரூரில் பல்வேறு சமூகத்தார் தனித்தனிக் குடியிருப்புக்களில் வாழ்ந்தாலும் அவர்கள் வேறுபாடு இன்றி ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். கோயில்களே சமூக நிறுவனங்களாக விளங்கின. மக்களின் அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் சமய நிறுவனம் ஆகிய கோயில் முக்கியப் பங்கு வகித்தது சிறப்புக்குரியது. தனி மனித வாழ்வும், குடும்ப வாழ்வும், சமுதாய வாழ்வும் சிறந்திருந்தன. இவை பற்றிய செய்திகள் இந்தப் பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.