5.2 பெண்கள் நிலை

சமுதாயத்தில் சரிபாதி எண்ணிக்கையுடைய பெண்கள் நிலை எவ்வாறு இருந்தது? அவர்கள் வாழ்க்கை முறை என்ன? என்பன பற்றியும் கல்வெட்டுகள் சில குறிப்புகளைத் தருகின்றன. கல்வியறிவும், உலகியல் அறிவுமுடைய பெண்கள் குடும்பப் பொறுப்பேற்று இல்லறத்தினை நல்லறமாக்கினர்.
 

5.2.1 சொத்துரிமையும் கொடையும்

பெண்கள் “சீதனம்” பெற்றுள்ளனர். திருமணத்தின்போது பெற்றோர் மணமகளுக்குக் கொடுப்பது சீதனம் எனப்படும். ஒரு கல்வெட்டில் “என் தமக்கைக்குச் சீதனம் வாத்த நிலம்” என்ற குறிப்புக் காணப்படுகிறது. அது கணவன் உரிமையாகிறது. ஆனால் கணவன் இறந்தபின் அவன் சொத்துக்கள் மனைவியையே சேர்கிறது.
 

• பெண்கள் கொடை

பெண்களுக்குச் சொத்துரிமை ஓரளவு இருந்துள்ளது. குந்தவையார், செம்பியன்மாதேவி போன்ற அரச குடும்பத்துப் பெண்கள் மட்டுமல்ல சில வணிகர், வேட்டுவர், வேளாளர் குலப் பெண்களும் கோயிலுக்குக் கொடுத்த கொடை பற்றிக் கல்வெட்டுகள் கூறுகின்றன. காவலன் குறும்பிள்ளரில் சொக்கன் மனைக்கிழத்தி, வேளாளரில் கண்ணன் மூவேந்தவேளான் மணவாட்டி பெருந்தேவி ஆகியோர் கோயிலுக்குக் கொடை கொடுத்தமை பற்றிய செய்திகள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இராசராசன் கூட “நம் அக்கன் குடுத்தனவும் நம் பெண்டுகள் குடுத்தனவும்” ஆகிய பெண்கள் கொடைகளைத் தன் கல்வெட்டில் குறிக்கின்றான்.
 

• பெண்களின் பாதுகாவலர்கள்

சில இடங்களில் பெண்கள் கொடை கொடுக்கும்போது அப்பெண்ணின் தந்தை அல்லது கணவன் அல்லது சகோதரன் ஆகியோர் அப்பெண்ணிற்காகக் கொடை கொடுத்ததாகக் கூறிக் கொள்கின்றனர். “திருச்சிற்றம்பல தேவனை முதுகண்ணாக உடைய இவன் பிராமணி சாத்தி’' என்பது ஒரு கல்வெட்டுத் தொடராகும். முதுகண் என்பது பாதுகாவலரைக் குறிக்கும் கல்வெட்டுச் சொல்லாகும். மனைவிக்குக் கணவரும், மக்களுக்குப் பெற்றோரும் பாதுகாவலராகக் (முதுகண்ணாகக்) குறிக்கப் பெற்றுள்ளனர்.
 

• தேவரடியார் நிலை

தேவரடியார் என்று பெயர் பெற்ற திருக்கோயில் பணிப்பெண்கள் கொடை கொடுக்கும் அளவிற்குச் சிறப்புடன் திகழ்ந்துள்ளனர். சில தேவரடியார்கள் திருமணமும் செய்துகொண்டு கணவனோடு வாழ்ந்துள்ளனர். அவர்கள் மக்கட் செல்வங்களான ஆண்களும், பெண்களும் கொடையளித்துள்ளனர். தேவரடியாருக்குக் கோயிலில் பொட்டுக்கட்டுதல் என்னும் சடங்கு செய்து, சந்தனம் தெளித்து, புத்தாடை, அணிகலன்கள் கொடுத்து நகர்வலம் செய்வித்துச் சிறப்புச் செய்துள்ளனர். அவர்கள் குடும்பத்தார்க்குக் கொடை கொடுத்தனர்.
 

5.2.2 ஆளுமை

அரசனோடு அத்தாணி மண்டபத்தில் வீற்றிருந்து அரசியர் அதிகாரமும் செய்துள்ளனர். இதனை
 

“செம்பொன் வீரசிம்மாசனத்து
     உலகமுழுதுடையாளொடும்
வீற்றிருந்தருளிய கோப்பரகேசரி
     மின்மரான ஸ்ரீ ராஜராஜன் “

“உலகுடைய முக்கோக் கிழானடிகளொடும்
செம்பொன் வீரசிம்மாசனத்து
வீற்றிருந்தருளிய சக்கரவர்த்தி
ஸ்ரீ ராஜாதிராஜன்’

என்ற கல்வெட்டு மெய்க்கீர்த்தித் தொடர்களால் அறியலாம்.
 
• பெண் அதிகாரிகள்

அரசு அதிகாரிகளாகச் சில பெண்கள் இருந்துள்ளனர். “அதிகாரிச்சி எருதன் குஞ்சரமல்லி” போன்றோர் பெயர்களைக் கல்வெட்டில் காணுகிறோம். இவர்கள் சிலர் அதிகாரிகளின் மனைவியராகவும் இருந்துள்ளனர். சில இடங்களில் அரசமாதேவியின் பணிப்பெண்களாக இருந்தனர். இவ்வாறு சில பெண் அதிகாரிச்சிகள் இருந்துள்ளனர்.
 

5.2.3 தீப்பாய்தலும் நோன்பும்

கணவன் இறந்தவுடன் அவனோடு உடன்கட்டையேறி வீரமரணம் அடைந்த பெண்கள் பற்றியும் சில குறிப்புகள் கிடைத்துள்ளன. சங்க காலத்திலேயே இவ்வழக்கம் உண்டு என்பதைப் புறநானூற்றில் பூதப்பாண்டியன் தேவியின் வரலாற்றால் அறிகின்றோம். மணிமேகலையில் சாதுவன் மனைவி ஆதிரை தீப்பாய முற்பட்டதை நாம் காணுகின்றோம். செயற்கரும் செயல் முடித்தபின் ஆண்களும் தீப்பாய்ந்துள்ளனர்.
 

• சோழமாதேவியர்

முதல் பராந்தகன் காலத்தில் இருங்கோவேள் மரபில் வீரசோழ இளங்கோவேள் மனைவி கங்கமாதேவி தீப்பாய்ந்து இறந்ததையும், கங்கைகொண்ட சோழன் ஆகிய முதல் இராசேந்திரன் மனைவி வீரமாதேவியார் தீப்பாய்ந்ததையும், மூன்றாம் குலோத்துங்கசோழன் மனைவி தீப்பாய்ந்ததையும், இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன் மனைவியும் முதலாம் இராசராசன் தாயுமாகிய வானவன்மாதேவி இராசராசன் குழந்தையாக இருக்கும்போதே தீப்பாய்ந்து இறந்ததையும் கல்வெட்டுகள் கூறுகின்றன.
 

“முழங்கு எரி நடுவணும்
     தலைமகன் பிரியாத் தையல்’

என இராசராசன் மனைவி வானவன்மாதேவி கல்வெட்டில் குறிக்கப்படுகிறாள்.
 

• கைம்மை நோன்பு

இவ்வாறு தீப்பாய்ந்து இறந்த பெண்களை வீரமாசத்தி என்பர். பின்னர் இவர்கள் 'வீரமாசத்தி' என்று வழிபடப்பட்டனர். சமுதாயத்தில் எல்லாப் பெண்களும் கணவன் இறந்த பின்னர் தீப்பாய்ந்தனர் என்று கொள்ள முடியாது. இவ்வழக்கம் மிக அருகியே காணப்பட்டது. பலர் கைம்மை நோன்பு நோற்றும் வாழ்ந்திருக்கக் கூடும். கண்டராதித்தன் திருத்தேவியரரான செம்பியன் மாதேவி தன் கணவன் இறந்தபின், பல ஆண்டுகள் மூன்று அரசர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்து, பல இறைப்பணிகள் செய்துள்ளார். இவர்கள் கைம்மை நோன்பு நோற்றவர்கள் ஆவர். அரசனும் அரசியும் இறந்த பின்னர் அவர்கட்குப் பள்ளிப்படை என்னும் சமாதிக் கோயில்கள் எடுக்கப்பட்டன. பஞ்சமாதேவி பள்ளிப்படை என்ற பெயரைக் கல்வெட்டில் காணுகின்றோம்.