|
5.5 சமூக அமைப்பு |
பழங்காலத்தில் சமூகத்தில் பல வேறுபாடுகள்
இருந்ததைக்
கல்வெட்டுகள் ஓரளவு காட்டுகின்றன. நான்கு
வருணப்
பாகுபாட்டை மீறிப் பல்வேறு சாதிகள் குறிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டு அரசர்கள் 'மேதினி கூறும் சாதி
ஒழுக்கம்' தவறாமல்
இருக்கவேண்டி ஆட்சி புரிந்ததாக அவர்கள் மெய்க்கீர்த்தி
கூறுகிறது.
|
5.5.1
வேறுபாடுகள் |
“நம்பி முதல்
குப்பை எடுப்பான் வரை”, “பூசிக்கும் நம்பி
முதல் கழுநீர் போகட்டுவான் வரை”,
“அர்ச்சிப்பான் முதல்
வெட்டியான் வரை” என்ற கல்வெட்டுத் தொடர்கள் மூலம்
தொழில் அடிப்படையில் தோன்றிய வேறுபாடுகளே சாதியையும்,
மேல் கீழ் என்ற நிலையையும் ஏற்படுத்தின என்பதைக்
காணுகிறோம். நம்பி என்பவர் திருக்கோயிலில் பூசை செய்பவர்.
வெட்டியான் என்பவன் சம்பளம் இன்றி ஊர்ச் சபைக்காக வேலை
செய்பவன்.
|
• தீண்டாதார் |
மக்கள் சேர்ந்து
வாழ்ந்த இடங்கள் சேரி என்று கூறப்பட்டன. பார்ப்பனச் சேரி, கம்மாளச்சேரி, இடைச்சேரி என்ற பெயருடன்
பல சேரிகள் இருந்தன. தீண்டாச்சேரி என்ற சேரி ஒன்றும் இருந்ததைக் காண்கிறோம்.
குளம் தூர் வாரும்போது கூட ஊரில் உள்ள அனைவரும் தங்கள்
பங்குக்குத் தூர் வாரவேண்டும் என்று கூறுமிடத்தில் தீண்டாதார்
ஒழியப் பிறர்தான் தூர் வாரவேண்டும் என்று ஒரு கல்வெட்டுக்
கூறுகிறது. இச்சேரிகள் பேரூரை ஒட்டி இருந்தன.
|
• வலங்கை
- இடங்கை வேறுபாடு |
வலங்கை - இடங்கை என்பது அந்தணர்,
வேளாளர்
அல்லாத இதர மொத்த சமூகங்களின் இரண்டு
பிரிவுகள்.
பிற்காலச் சோழர்களின் தொடக்க காலத்தில்
இப்பிரிவு
தொடங்கியது. படைப்பிரிவில் ஏற்பட்ட வலங்கை - இடங்கைப்
பிரிவு சமுதாயத்தில் எல்லாப் பிரிவினர் இடையேயும் பின்னர்
வந்துவிட்டது.
வலக்கை, இடக்கை;
வலதுகை, இடதுகை; வலங்கைப்
பாணத்தார், இடங்கைப் பாணத்தார்; வலங்கையர், இடங்கையர்
எனவும் இவர்கள் குறிக்கப்பட்டுள்ளனர். 10ஆம் நூற்றாண்டில்
முதலில் படைப்பிரிவில் இவ்வழக்கம் தோன்றியது. முதலில்
உள்நாட்டுப் படை வலங்கைப் பழம்படை, வலங்கைப்
படை,
வலங்கை மாசேனை என அழைக்கப்பட்டது. பின்னர், குடியேறிய
வன்னியர், செங்குந்தர்களைக் கொண்ட படை இடங்கைப் படை
என்று அழைக்கப்பட்டது. பிறகு இப்பிரிவு பொதுமக்களிடமும்
பரவியது.
வணிகம், தொழில் சார்ந்தோர்
வலங்கை இடங்கை
எனப்பட்டனர் என்ற கருத்தும் உண்டு. சோழ மன்னனுக்கு
வலப்புறமும் இடப்புறமும் அமரும் உரிமை
சிலருக்கு
அளிக்கப்பட்டது. நாளடைவில் அவர்கள் வலங்கை இடங்கைப்
பிரிவுகளாக மாறினர் என்ற கருத்தும் உண்டு. எப்படியோ மொத்த
சாதிக்குள் இப்பிரிவு ஏற்பட்டுவிட்டது. இப்பிரிவைப்
பற்றிய
ஏற்றுக் கொள்ளக்கூடிய பெயர்க்காரணம் இன்னும் சரியாகக்
கண்டறியப்படவில்லை. வழிபாட்டில் கூட
இப்பிரிவு
ஏற்பட்டுவிட்டது. சில கோவில்களில் வலங்கை
விநாயகர்,
இடங்கை விநாயகர் எனப் பிரதிட்டை செய்த நிகழ்ச்சிகள் உள்ளன.
இவ்வகையினர் வலங்கைச் சாதியார், இடங்கைச் சாதியார் எனவும்
அழைக்கப்பட்டனர்.
|
• வலங்கையரும்
இடங்கையரும் |
தட்டார்,
கொல்லர், தச்சர், கன்னார், மரவேலைக்காரர் ஆகிய
பஞ்சகம்மாளரும், கம்பளத்தார், செங்குந்தர், தேவேந்திரர்,
மாதாரிகள் வன்னியர் போன்ற தொழில்
அடிப்படையாக
இருப்பவர்கள் இடங்கைச் சாதியார் என்றும், கவறைச்செட்டிகள்,
சேணியர் போன்ற வணிகப் பிரிவினர் வலங்கைச் சாதியார் என்றும்
அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
|
• சலுகைகள்
|
சில சாதியாருக்குச்
சில உரிமைகளை அரசர்களும்,
அதிகாரிகளும் அளித்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.
வாயிற்படி அமைத்தல், வாத்தியம் வாசித்தல், சன்னல் அமைத்தல்,
மேல் ஆடை அணிதல், பகல் தீவட்டிப் பந்தம் பிடித்தல், குதிரை
ஏற்றம், குடைபிடித்தல், காலுக்குச் செருப்பு அணிதல் போன்ற
உரிமைகளும் சலுகைகளும் சிலருக்கு வழங்கப்பட்டதாகக்
கல்வெட்டுகள் கூறுகின்றன. இவை சமூக வேறுபாடுகளை நீக்கும்
முயற்சி எனலாம். |
5.5.2
அடிமைமுறை |
அக்காலத்தில்
ஆண்மக்களும், பெண் மக்களும்
செல்வர்களிடமும், கோயில்களிடத்தும், மடங்களிடத்தும் தம்மை
விற்றுக்கொண்டு அடிமைகளாயிருந்து தொண்டாற்றி வந்தனர்
என்பது பல கல்வெட்டுகளால் நன்கறியக் கிடக்கின்றது. கொடிய
பஞ்சம் தோன்றி நாட்டுமக்களை வருத்திய காலத்தில், அவர்கள்
தம்மையும் தமது குடும்பத்தாரையும் பாதுகாக்க இயலாமல் தங்களை
விற்றுக்கொண்டு அடிமைகளாக உயிர்வாழும்படி
நேர்ந்தது
என்பதைச் சில கல்வெட்டுகள் குறிப்பதைக் காணலாம். அன்றியும்
வழிவழியாக அடிமைகளாக வாழ்ந்துவந்த குடும்பத்தினரும் உண்டு
என்பதையும் சில கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன.
|
• கோயிலில்
அடிமைகள் |
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள
மேலப்பெரும்பள்ளம்
திருக்கோயிலில் நாங்கூர் அந்தணன் ஒருவன் பதின்மூன்று காசுக்கு
ஆறுபேரை அடிமைகளாக விற்றனன். மற்றும் பெண்கள் இருவர்,
தம்மை உள்ளிட்ட எழுவரைப் பதினைந்து காசுக்கு விற்றனர்.
தந்திவர்மமங்கலத்து மத்தியஸ்தன் ஒருவன்
வயலூர்க்
கற்றளிப்பரமேசுவரர் கோயிலில் திருப்பதியம் பாடுவதற்கும்,
அடிமைகளாகத் தொண்டு புரிவதற்கும், கி.பி. 948ஆம் ஆண்டு,
சிலரை அளித்தான் என்பதை அவ்வூர்க் கல்வெட்டுக் கூறுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் கருங்குளம் இராசசிம்மேசுவரமுடையார்
கோயிலில் ஓர் உவச்ச அடிமையை அரசியல் அதிகாரி ஒருவன் 1105ஆம் ஆண்டு தந்த செய்தியும் கல்வெட்டில் கூறப்படுகிறது.
|
• அடிமைகட்கு
அடையாளம் |
பாணபுரத்திலிருந்து
அழகிய பாண்டிப் பல்லவரையன்
என்பான் 1119ஆம் ஆண்டு தன் குடும்பப் பெண்கள் சிலரை,
தேவரடியாராகப் பணிபுரிந்து வருமாறு சூல இலச்சினை பொறித்து,
திருவல்லம் கோயிலில் பணிபுரியுமாறு அடிமைகளாக விட்டான்.
|
• அடிமைகளின்
விற்பனை |
1201ஆம்
ஆண்டு கொடிய பஞ்சத்தில் வேளாளன் ஒருவனும்
அவன் பெண்மக்கள் இருவரும் கோயிலைச் சார்ந்த மடத்திற்கு 110
காசுகளுக்கு விலைப்பட்டு அடிமைகளான செய்தி, திருப்பாம்புரக்
கோயில் கல்வெட்டில் காணப்படுகிறது. நாகப்பட்டினம் அருகில்
உள்ள திருக்காரோணக் கல்வெட்டு ஒன்றில், கணக்கர் இருவர் தம்
அடிமைகளைக் கோயிலுக்கு விற்றதைத் தெரிவிக்கிறது. அதற்காக
‘ஆள்விலைப் பிரமாண இசைவுதீட்டு‘ எழுதப்பட்டதையும்
அக்கல்வெட்டுக் குறிக்கிறது. சிலர் ஊர்ப் பொது இடத்தில் தம்
அடிமைகளைக் கொண்டுவந்து நிறுத்தி “விலைகொள்வார் உளரோ”
என்று கூவி விற்றுள்ளனர். விலைகுறித்தால் கொள்வேன் என்று
சிலர் விலைக்கு வாங்கியுள்ளனர். செல்வர்
சிலர் தம்
சொத்துக்களையும், நிலங்களையும் தம் மக்களுக்குப் பிரித்துக்
கொடுக்கும்போது தமது அடிமைகளையும்
பிரித்துக்
கொடுத்துள்ளனர் என்பதையும் சில கல்வெட்டுகள் கூறுகின்றன.
|
• பரம்பரை
அடிமை |
எதிரிலிசோழக்
கங்கநாடாழ்வான் என்பவன் 1219ஆம்
ஆண்டு திருமறைக்காட்டுக் கோயிலுக்கு ஆண்கள் ஐவரையும்,
பெண்கள் ஐவரையும் பரம்பரை அடிமைகளாக விற்ற செய்தி ஒரு
கல்வெட்டால் புலப்படுகிறது. தச்சன் ஒருவனும், அவன் மனைவியும்
அவர்கள் மக்கள் நால்வரும் அச்சுதமங்கலம் கோயிலில் பரம்பரை
அடிமைகளாக இருந்ததை, ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. இவர்களில்
பலர் பக்திக்காக மட்டும் அல்லாது, கொடிய பஞ்சம் வந்தபோது
வறுமையின் காரணமாகவும் பரம்பரை அடிமையாகத் தங்களைக்
கோயில்களுக்கு விற்றுக்கொண்டனர் என்று தெரிகிறது.
|
5.5.3
நம்பிக்கைகள் |
அக்கால மக்களிடம்
சில நம்பிக்கைகள் இருந்தன
என்பதையும் சில கல்வெட்டுகள் கூறுகின்றன. கொங்குச் சோழ
மன்னன் வீரசோழனின் ஜன்ம நட்சத்திரத்தில் சூரிய கிரகணம்
வந்தது. சமயப் பெரியோர்கள் அதற்குக் கழுவாயாகச் சிவலிங்கப்
பிரதிட்டை செய்யவேண்டும் என்று கூறினர். ஆனால் வீரசோழன்
கொழுமம் பகுதியில் வீரசோழீசுவரம் என்ற
கோயிலையே
கட்டினான் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
|
• தண்ணீர்ப்
பந்தலும் சுமைதாங்கியும் |
இறந்தவர்கட்காக
நடுகல்லும், பள்ளிப்படைக் கோயிலும்
கட்டும்போது, அவர்களின் ஆத்மா சாந்தியடைய, அவர்கள் தாகம்
தீர, அருகில் கிணறு வெட்டுவது, தண்ணீர்ப் பந்தல் அமைப்பது
வழக்கமாக இருந்தது. முதலாம் இராசராசன் நடத்திய ஈழப் போரில்
தன் தந்தை இறந்ததற்காக ஒற்றியூரன் பிரதிகண்ட
வர்மன்
கிணறுவெட்டித் தண்ணீர்ப் பந்தல் அமைத்தான்
என்று
கூறப்பட்டுள்ளது. அதேபோல, கருவுற்ற பெண்கள் நலமாகக்
குழந்தைப் பேறு அடைய சுமைதாங்கிகள் அமைக்கப்பட்டதையும்
கல்வெட்டுக் கூறுகிறது.
|
• பாவம்-புண்ணியம் |
சுவர்க்கம்,
நரகம் போன்ற நம்பிக்கைகளும் மக்களிடையே
இருந்தன. நன்மையும் புண்ணியமும் செய்தோர் சுவர்க்கம் புகுவர்
என்றும், தீமையும் பாவமும் செய்தோர் நரகம் புகுவர் என்றும்
மக்கள் கருதினர். கங்கையாறு மிகப் புனித
ஆறாகக்
கருதப்பட்டதால் மக்கள் கங்கைக்கு நீராடச் சென்றனர். அவர்கள்
பெயருக்கு முன் ‘கங்கையாடி’,
‘கங்கைக்குப் போய்வந்த’ என்ற
தொடர்கள் சேர்த்து எழுதப்பட்டன. சிலர் தங்கள் பெற்றோரின்
அஸ்தியைக் கங்கையில் கரைப்பதற்காகச் சிவாச்சாரியார்கள் மூலம்
அனுப்பிவைத்தனர். சென்றுவந்த சிவாச்சாரியார்கட்குக் கொடைகள்
வழங்கப்பட்டன என்பதையும் சில கல்வெட்டுகள் கூறுகின்றன. |