என்ற பாடலில் தலைவன் தலைவியைப் பிரிந்து பல மலைகளைக்
கடந்து வந்திருப்பினும் தலைவியின் சிறந்த குணங்கள் மனத்தை விட்டு நீங்காதவையாக இருக்கின்றன என்று நினைக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது.
• தலைவி இரங்கு பத்து
தலைவன் ஏதேனும் ஒரு காரணம் குறித்துப் பிரிந்து செல்வான். அவன் செல்லும் கொடிய பாதை குறித்துத்
தலைவி அஞ்சுவாள். இவ்வகையில் அமைந்த பத்துப்
பாடல்களின் தொகுதி தலைவி இரங்கு பத்து என்ற
பெயரால் குறிக்கப்படுகிறது.
தலைவன் சென்ற காட்டுநெறி இன்னாதது என்று தலைவி இரங்கும் (அஞ்சும்) செய்தி பாடல் 331இல் இடம் பெற்றுள்ளது.
• இளவேனிற் பத்து
இளவேனிற் பருவம்
என்பது பாலைத் திணையின் முதற்பொருளில் பெரும்பொழுது. இளவேனில் பருவத்தில்
வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் அந்தக் காலம் வந்தும் அவன்
வாராமையால் வருந்திக் கூறுவது பாலையின் உரிப்பொருள். இவ்வகையில்
அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி இளவேனிற் பத்து என்ற பெயரால்
குறிக்கப்படுகிறது.
இளவேனிற் காலம் வந்த பொழுதும் அவரோ வாரார் எனத் தலைவி வருந்தும் செய்தி இப்பகுதியில் இடம் பெற்றுள்ளது.
• வரவுரைத்த பத்து
பலவேறு காரணங்களில் ஒன்று குறித்துப் பிரிந்து சென்ற தலைமகன்
மீண்டு வருதலை மையமாகக் கொண்டு அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி வரவுரைத்த பத்து
என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
காடு பின்னொழியத் தலைவன் திரும்பி விட்டான் நீ உன் கவலைகளை
ஒழிப்பாயாக என்று தோழி, தலைவியிடம் கூறும் செய்தி இடம் பெற்றுள்ளது.
• முன்னிலைப் பத்து
தலைவன், தலைவி, தோழி ஆகியோர் தங்களுக்குள்
ஒருவரை ஒருவர் முன்னிலைப்படுத்திக் கூற்று நிகழ்த்துவர். இவ்வகையில் அமைந்த பத்துப்
பாடல்களின் தொகுதி முன்னிலைப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
• மகட்போக்கியவழித் தாய் இரங்கு பத்து
களவில் புணர்ந்த தலைமகன், தலைவியை மணங்கொள்ள
உடன் கொண்டு (அழைத்துச்) செல்வான். அப்போது மகளைப் பிரிந்த தாய் வருந்திப் பேசுவாள்.
இவ்வகையில் அமைந்த பாடல்களின் தொகுதி மகட்போக்கியவழித் தாய் இரங்கு பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
இப்பகுதியில் தலைவனுடன் தலைவி செல்லும் காட்டு நெறி மழை பொழிந்து
இனிதாக வேண்டும் என நற்றாய் வேண்டும் செய்தி இடம் பெற்றுள்ளது.
• உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து
உடன்போக்கு நிகழ்கையில் தலைவன், தலைவி தங்களுக்குள்ளும்
இவர்களிடத்துக் காண்போரும் பிறரும் கூற்றுக்கள் (உரையாடல்) நிகழ்த்துவர். இவ்வகையில் அமைந்த பத்துப்
பாடல்களின் தொகுதி உடன்போக்கின்கண் இடைச்சுரத்து உரைத்த பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து
செங்கால் மராஅத்த வரிநிழல் இருந்தோர்
யார்கொல் அளியர் தாமே வார்சிறைக்
குறுங்கால் மகன்றில் அன்ன
உடன்புணர் கொள்கைக் காத லோரே?- (381) |
|