என்ற பாடலில் கன்றை நடுவில் உறங்க வைத்திருக்கும்
மான் பிணைகள் போல மகவை நடுவில் படுக்க வைத்திருக்கும் தலைவன் தலைவியின் செயலை, செவிலி நற்றாயிடம் கூறும் செய்தி இடம் பெற்றுள்ளது.
• கிழவன் பருவம் பாராட்டுப் பத்து
வினைக்குச் செல்லும் தலைவன் கார்காலம் (மழைக் காலம்)
வரும்போது தானும் மீண்டு வருவேன் என்று கூறிச் செல்வான். எனினும் சில தருணங்களில் குறித்த பருவம்
வருவதற்கு முன்பே வந்து நிற்பான். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி
கிழவன் பருவம் பாராட்டுப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. கிழவன் - தலைவன்.
‘ஆர்குரல் எழிலி அழிதுளி சிதறி’ என்று தொடங்கும் பாடலில் (411) கார்காலம் தொடங்கும் தறுவாயில் மீண்டு வந்த தலைவன்,
தலைவியை நீராட அழைக்கும் செய்தி இடம் பெற்றுள்ளது.
• விரவுப் பத்து
முல்லைத் திணைக்குரிய ஒழுக்கத்தில், தலைவன் பிரியாமைக்குக்
காரணமான காதலை உணர்ந்தவர் கூற்றும், பருவ வரவு குறித்த கூற்றும், பிரிவானோ என்று தலைவி ஐயம்
கொண்ட போது தலைவியைத் தேற்றும் தலைவன் கூற்றும் எனப் பலருடைய கூற்றுகள் விரவி வந்த பத்துப்
பாடல்களின் தொகுதி விரவுப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
• புறவணிப் பத்து
புறவு என்பதற்குக் காடு என்பது பொருள்.
முல்லைத் திணையின் முதற்பொருளான காட்டின் அழகு குறித்த பத்துப் பாடல்களின் தொகுதி புறவணிப் பத்து என்ற
பெயரால் குறிக்கப்படுகிறது.
இப்பகுதியின் முதற் பாடலில் (431) தலைவன் சென்ற முல்லைக் காடு அழகுடையது.
ஊறு செய்யாதது என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.
• பாசறைப் பத்து
வினையின் பொருட்டுப் பிரிந்த தலைவன்,
பாசறையில் தங்கியிருப்பான். தான் குறித்த கார்காலம் வரும்போது தலைவியின் நினைவு வரும்.
அப்போது அவன் பலவற்றையும் நினைந்து புலம்புவான். இவ்வகையில் அமைந்த பத்துப்
பாடல்களின் தொகுதி பாசறைப் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
• பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து
ஆற்றியிருக்கும்படித் தலைவன் சொல்லிச் சென்ற
பருவம் (கார்காலம்) வந்த போது தலைவி தனக்குள்ளும் தன் தோழியோடும் கூற்று நிகழ்த்துவாள்.
இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி பருவங்கண்டு கிழத்தி உரைத்த பத்து என்ற
பெயரால் குறிக்கப்படுகிறது.
இப்பகுதியின் முதற்பாடலில் (451) குறித்த பருவத்தில் தலைவன் வாராமல் இருக்கின்ற போது தலைவன்
தரப்பிலிருந்து வந்த தூதுச் செய்தி கேட்டு ஆற்றாளாய் இருக்கும் தலைவி பற்றிய செய்தி இடம்
பெற்றுள்ளது.
• தோழி வற்புறுத்த பத்து
தலைவன் பிரிந்திருக்கும் போது அவன் குறித்துச் சென்ற காலம் வாராதிருக்கும் போதே தலைவி
வருந்துவாள். அப்போது தோழி அவளை வற்புறுத்தி ஆற்றுவிப்பாள். இவ்வகையில் அமைந்த பத்துப்
பாடல்களின் தொகுதி தோழி வற்புறுத்த பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
• பாணன் பத்து
பருவ வரவையும் வினை முடித்த தலைவனின் வரவையும் பாணன் முன்னதாக வந்து
தலைவிக்கு உரைப்பான். அவனிடம் தலைவி, தோழி ஆகியோர் கூற்று நிகழ்த்துவர். இவ்வகையில்
அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி பாணன் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
• தேர்வியங் கொண்ட பத்து
வினை முடித்து மீளும் தலைவன், தலைவியின் நிலை நினைந்தவனாய், பாகனை
விரைவாகத் தேரைச் செலுத்தக் கட்டளை இடுவான். இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின்
தொகுதி தேர்வியங் கொண்ட பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
• வரவுச் சிறப்புரைத்த பத்து
தலைவன் வினை முடித்து மீண்டு வந்த போது,
அவன் தலைவியிடம் பேசுவான். தோழி தலைவியிடமும், தலைவனிடமும் பேசுவாள்.
இவ்வகையில் அமைந்த பத்துப் பாடல்களின் தொகுதி வரவுச் சிறப்புரைத்த பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.
இப்பகுப்புகளில் ஒன்பது பகுப்புகள் முல்லைக்குரிய ஒழுக்கத்தை (உரிப்பொருளை) அடிப்படையாகக் கொண்டு
அமைந்துள்ளன. புறவணிப்பத்து என்ற பகுப்பு மட்டும் முல்லைத் திணையின் முதற்பொருளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. |