உள்ளுறை அல்லாத உவமம் ஏனை உவமம் எனப்படுகிறது.
‘ஏனை உவமம் தானுணர் வகைத்தே’ என்று தொல்காப்பியம்
குறிப்பிட்டுள்ளது. தான் உணரும் வகையாவது, வண்ணத்தால், வடிவால்,
பயனால், அல்லது தொழிலால் உவமிக்கப்படும் பொருளோடு எடுத்துக் கூறுதல் என்று
இளம்பூரணர் விளக்கம் அளித்துள்ளார். ஆக எல்லாரும் பொருள் உணரும் வகையில்
உவமையும் பொருளும் சேர்ந்து இடம்பெறும் உவமை ஏனை
உவமம் என்பது தெளிவாகிறது. உவமைகள் இருவகை நிலைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
சொல்ல வந்த கருத்தை விளக்குவதற்காகவும், சொல்லும் பொருளுக்கு அழகு சேர்ப்பதற்காகவும்
அவை வருகின்றன. எனவே கருத்து விளக்க உவமைகள், அணி உவமைகள் என்ற பெயரில்
ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள சில ஏனை உவமங்களைக் காண்போம்.
• கருத்து விளக்க உவமைகள்
தெரிந்த ஒன்றைக் கொண்டு தெரியாத ஒன்றை விளக்குவதாகக் கருத்து விளக்க உவமைகள் அமையும்.
• குடும்பம்
ஒரு தலைவன் தலைவியைப் பிரிந்து அவளுக்கு எந்த உதவியும் செய்யாமல் இருக்கிறான். இருப்பினும்
அவள், அவன் மார்பை நினைந்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். தலைவியின் இந்த நிலை, தாய் தங்களைக்
கவனிக்காவிடினும் தாயின் முகம் நோக்கி வாழும் வளரும் ஆமைக் குஞ்சுகளின் நிலையால் விளக்கப்படுகிறது.
தீம்பெரும் பொய்கை ஆமை இளம்பார்ப்புத்
தாய்முகம் நோக்கி வளர்ந்திசி னாஅங்கு
அதுவே ஐயநின் மார்பே. ... ... ...- 44 |
என்பது மேற்கூறிய கருத்தை விளக்கும் பாடற்பகுதி.
தலைவனின் இல்லத்திற்குச் சென்று தலைவியின் இல்வாழ்க்கைச் சிறப்புப் பற்றி அறிந்து அதனை நற்றாயிடம் கூறுகிறாள் செவிலி.
இல்லறத்தில் எந்தக் குற்றங்களும் நெருங்காமல் இல்லற தர்மங்களைத் தலைவி மேற்கொண்டு சிறப்பாக வாழ்கிறாள் என்று செவிலி
கூற நினைக்கிறாள். காற்றால் அணைக்க முடியாத பெரிய திரிகளை உடைய பாண்டில் என்ற விளக்கை உவமை
ஆக்குகிறாள்.
ஒண்சுடர்ப் பாண்டில் செஞ்சுடர் போல
மனைவிளக் காயினள் மன்ற- 405 |
என்பது மேற்கூறிய செய்தியைத் தரும் பாடற்பகுதி ஆகும்.
தலைவி, தன் கணவனோடும் புதல்வனோடும் வாழும் வாழ்க்கைத் திறத்தை அறிந்த செவிலி அதனை மான் இனத்தோடு உவமித்துச் சொல்கிறாள்.
மறியிடைப் படுத்த மான்பிணை போலப்
புதல்வன் நடுவ ணாக நன்றும்
இனிது மன்றஅவர் கிடக்கை- 401 |
என்பது பாடற்பகுதி. தலைவன், தலைவி, புதல்வன் ஆகிய மூவரும் ஒரே படுக்கையில்
இருக்கும் காட்சி மான்பிணை தன் குட்டியோடும் ஆண் மானோடும் இருக்கும் காட்சியால் விளக்கப்பட்டுள்ளது.
இந்நிலையின் இனிமை,
புதல்வற் கவைஇய தாய்புற முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை பாணர்
நரம்புளர் முரற்கை போல
இனிதால் அம்ம பண்புமார் உடைத்தே- 402 |
என யாழ், நரம்பு, இசை ஆகியவற்றாலும் விளக்கப்பட்டுள்ளது.
• பிற
குடும்ப நிகழ்வுகளை விளக்குவதற்கு மட்டுமல்லாமல் பிற நிகழ்வுகளை விளக்குவதற்கும் உவமைகள் இந்த
அகப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன.
ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. அது கிள்ளிவளவனுக்கு உரிமையான
யானை பகைவரின் மதிலை அழிப்பதைப்போல விரைந்து வந்து கரையை அழிக்கிறது என உவமை
அமைந்துள்ளது.
கதிரிலை நெடுவேல் கடுமான் கிள்ளி
மதில்கொல் யானையின் கதழ்பு நெறிவந்த
சிறையழி புதுப்புனல் ஆடுகம்- 78 |
|