வேந்தன் பொருட்டு அல்லது பொருள் வயிற் பிரிந்த தலைவன் மீண்டு வரும் போது தேர்ப்பாகனிடம் பேசுவான்.
தலைவி வருத்தம் தீர்வாள்
என்பதாகவும் (422), தன் வருத்தம் தீரும் (425) என்பதாகவும், தலைவன் வினை
மீட்சியின் போது இடைச்சுரத்தில் தேர்ப்பாகனிடம் கூறுகிறான்.
3.3.5 பரத்தையர் பிரிவு
தலைவனுக்கு, மணம் செய்து
கொண்ட தலைவி அல்லாமல் வேறு சில பெண்களோடும் தொடர்பு உண்டு. அவர் பரத்தையர்
எனப்படுவர். பரத்தையரில் பல்வேறு வகையினர் உண்டு. கற்பு வாழ்க்கையில்
இருக்கும் தலைவன், இப்பரத்தையர் பொருட்டாகத் தலைவியைப் பிரிந்து செல்வான்.
இது பரத்தையர் பிரிவு எனப்படும். இப்பிரிவில்
தோழி, தலைவன், பாணன் முதலிய வாயில்கள் ஆகியோர் வழி, கூற்றுகள் நிகழும்.
இதன் அடிப்படையில் சில பாடல்களைக் காண்போம்.
• தலைவி - தலைவன்
பரத்தையர் பிரிவு தொடர்பாகத் தலைவன் தலைவியரிடையே கூற்று நிகழும்.
பல பரத்தைகளைத் தொடர்ந்து மணக்கும் தலைவன் இனி இங்ஙனம் செய்யேன்
என்று கூறுகின்ற போது தலைவி மறுத்துக் கூறுவது உண்டு (61).
தவற்றை உணர்ந்த தலைவன் தானே வந்தும் வாயில்கள் மூலமும் குறையிரந்து (வேண்டி)
நிற்பான். அந்நிலையில் தலைவி அவனையும் வாயில்களையும் இகழ்ந்து கூறுவாள் (41).
இப்பாடல் பரத்தையர் பொருட்டுப் பிரிந்த தலைவன், தன் பிள்ளையையே தின்னும்
முதலை போன்ற கொடியவன் எனக் குறிப்பால் கூறி, தலைவி ஏற்க மறுக்கும் செய்தியைத் தாங்கி நிற்கிறது.
• தோழி - தலைவி
தலைவனின் புறத்தொழுக்கம் (இல்லறநெறி கடந்த பரத்தையர் பிரிவு) குறித்துத்
தோழியிடம் தலைவிக்குக் கூற்று நிகழும்.
தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தைத் தலைவி தோழிக்கு உரைப்பாள் (15).
பரத்தையர் பிரிவு இயல்பு என்று கூறுகின்ற தோழியை மறுத்தும் தலைவி கூறுவாள்.
• தலைவி - வாயில் மறுத்தல்
தலைவனை ஏற்கச் சொல்லிப் பாணன் முதலிய வாயில்கள் தலைவியிடம் முறையிட்டு
நிற்கும். அப்போது தலைவி வாயிலை ஏற்க மறுப்பாள். இது வாயில் மறுப்பதாகும்.
தலைவன் தொடர்பு கொண்டுள்ள பரத்தையர் நள்ளிரவு நேரத்திலும் துயிலாதவர்கள்.
உண்மை இங்ஙனமிருக்கத் தலைவன் எப்படி அவர்களைப் பிரிந்து வருவான் எனத் தலைவி
பேசுவதாகப் பாடல் (13) அமைந்துள்ளது. இவ்வகையில் பல பாடல்கள் (18, 131, 16) அமைந்துள்ளன.
• தோழி - தலைவி
தலைவனுக்கு ஆதரவாக அல்லது வாயில் நேரக் கூறும் வகையில் தோழி
தலைவியிடம் பேசுவதுண்டு. (27)
• தோழி - தலைவன்
தலைவன் பரத்தையர் காரணமாகப் பிரிந்து மீண்டுவந்து தோழியிடம் குறையிரந்து நிற்பான்.
அப்போது அவனை ஏற்றோ, மறுத்தோ அவள் பேசுவதுண்டு.
தலைவன் வாயில் வேண்டி நிற்கும் போது தோழி, தலைவியின்
குறிப்பறிந்தோ, தானாகவோ வாயில் மறுத்துப் பேசுவாள் (55).
• பரத்தை . தலைமகன்
பரத்தை தலைமகளை எண்ணித் தலைவனிடம் கூற்று நிகழ்த்துவாள்.
பாடல் 121 பரத்தை, தலைவி குறித்துப் பேசியதற்குச் சான்று ஆகும்.
அவள் தலைவி குறித்து நகையாடிப் பேசுவதும் உண்டு. இந்நிலையில்
கிழவற்கு உரைத்த பத்து என்ற
பகுப்பில் அமைந்த பாடல்கள் உள்ளன.
• பரத்தை - பரத்தையின் தோழி
தலைவன், தலைவியின் இல்லத்திற்குச் செல்லக் கருதுவான். அதனைப் பரத்தையர்
தோழி அறிந்து பரத்தைக்கு உரைப்பாள். அங்ஙனம் உரைக்கும் தோழிக்குப் பரத்தை பதில் கூறுவாள். (38)
....................................... நம்வயின்
திருந்திழைப் பணைத்தோள் நெகிழப்
பிரிந்தனன் ஆயினும் , பிரியலன் மன்னே- 39 |
என்ற பாடல் பரத்தையின் நலனை (அழகை) எல்லாம் உண்டு பிரிந்தான்
என்று தலைவி கூறியதாகக் கேள்விப்பட்ட பரத்தை, தன் தோழிக்குக் கூறுவது போல்
கூறியதாகும். அதாவது, பரத்தையை விட்டுத் தலைவன் வீடு திரும்பினாலும்,
‘அவன் மனத்தளவில் நம்மை விட்டுப் பிரிய முடியாதவன்’ என்று பரத்தை பெருமிதத்தோடு சொல்கிறாள். |