இலக்கியம் என்றால் அது ஏதேனும் கருத்தை உணர்த்த வேண்டும். அகநானூறு
அகப்பொருளை - அகப்பொருட் கருத்தை - உணர்த்த வந்தது. அகப்பொருள்
அதாவது அக ஒழுக்கம் களவொழுக்கம், கற்பொழுக்கம் என இருவகைப்படும்.
• களவொழுக்கம்
தனக்கு நிகராகவோ தனக்கு மேலாகவோ
ஒருவரும் இல்லாத தலைவன், அதே போன்ற தகுதி உடைய தலைவியை விதிவயத்தால் சந்தித்து
உறவுகொள்வான். தனியே சந்திப்பதில் தடைகள் ஏற்படும்போது தோழன், தோழி ஆகியோரில்
யாரேனும் ஒருவர் உதவியுடன் சந்திப்பான். இந்த ஒழுக்கம் பல்வேறு கூறுகளை
உடையது. இதுவே களவொழுக்கம் எனப்படும்.
ஒரு தலைவன் விதி வழி நடத்த
ஒரு தலைவியைத் தனியிடத்தில் கூடி மகிழ்கிறான். மறுநாளும் அவளைச் சந்தித்து
மகிழலாம் என்று செல்கிறான். ஆனால் யாது காரணத்தாலோ அவள் அங்கு வரவில்லை.
அதனால் வருத்தமடைந்த தலைவன் நேற்றைய மகிழ்வையும் இன்றைய துயரையும் நினைந்து
புலம்புகின்றான் (அல்லகுறிப்பட்டுழித் தலைவன்
வருந்தியது).
பாடல் 62 இக் கருத்தைத் தழுவி அமைந்துள்ளது.
• கற்பொழுக்கம்
கற்பொழுக்கம் என்பது தலைவனும்
தலைவியும் இல்லறம் நடத்துவதாகும். இந்த இல்வாழ்க்கை களவு வாழ்க்கையின்
தொடர்ச்சியாகவும் இருக்கலாம். பெற்றோர் செய்து வைத்த திருமணத்தைத் தொடர்ந்ததாகவும்
இருக்கலாம். தலைவியின் இல்லறச் சிறப்பு, விருந்துபசரிப்பு, தலைவன் பொருளீட்டவோ
நாடு காக்கவோ தலைவியைப் பிரிதல், பரத்தையர் பொருட்டுப் பிரிதல் போன்ற பலகூறுகளைக்
கொண்டு கற்பு வாழ்க்கை அமையும்.
காதல் மனைவியைப் பிரிந்து
ஒரு தலைவன் போருக்காகச் சென்றிருக்கின்றான், அவன் பாசறையில் இருக்கும்போது,
தானும் தலைவியும் பிரிந்திருத்தலை எண்ணிப் புலம்புகிறான்:
.....................
புறவுஅடைந் திருந்த அருமுனை இயவில்
சீறூ ரோளே ஒண்ணுதல் -யாமே
.....................
அருந்திறை கொடுப்பவும் கொள்ளான், சினம்சிறந்து
வினைவயின் பெயர்க்கும் தானைப்
புனைதார் வேந்தன் பாசறை யேமே(84) |
|