4.3 கற்பனை

ஒரு படைப்பாளன் தான் சொல்ல வந்த கருத்தை அழகுபடச் சொல்வதற்கு உதவுவது கற்பனை ஆகும். உள்ளதை உள்ளவாறு சொல்லாமல் உணர்ந்தவாறு சொல்லுதல் கவிதைக்கு அழகு செய்யும். அழகுக்கு உதவி செய்யும் கற்பனை உவமை, உருவகம் போன்ற வடிவங்களில் அகநானூற்றில் மிளிர்ந்துள்ளது.

4.3.1 உவமைகள்

பெண்களை வர்ணிப்பதும் உவமிப்பதும் அனைத்து இலக்கியங்களுக்கும் ஒப்ப முடிந்த ஒன்று. இத்தகு உவமைகளே கற்பனை நயம் வாய்ந்த அணிகளாகும்.

• ஐய உவமை

பொருளை வேறொன்றாக மாற்றிப் பார்த்தல் ஐய உவமை எனலாம். இதனை மருட்கை உவமை என்றும் அறிஞர்கள் கூறுவர்.

ஆன்ற கற்பின் சான்ற பெரியள்
அம்மா அரிவையோ அல்லள்
தெனாஅது ஆஅய் நன்னாட்டு அணங்குடைச் சிலம்பில்
கவிரம் பெயரிய உருகெழு கவாஅன்
ஏர்மலர் நிறைசுனை உறையும்
சூர்மகள் மாதோ என்னும்என் நெஞ்சே.
(198;12-17)

என்ற பாடற் பகுதியில் ஐய உவமை அமைந்துள்ளது. தலைவியைப் பார்த்த தலைவன் அவளது அழகைப் போற்ற நினைக்கின்றான். அவளை மானுடப் பெண்ணாகத் தன்னுடைய நெஞ்சு ஏற்றுக்கொள்ளவில்லை, மாறாகச் சுனையிலே வசிக்கும் தெய்வப் பெண்ணாகவே கருதுகிறது என்று கூறுகிறான். உவமைக்கும் பொருளுக்கும் ஐயத்தை உண்டாக்குகிறான். எனவே, இது ஐய உவமையாகும்.

• விபரீத உவமை

வழக்கமாகப் பொருளாக வருவதை உவமையாக்கி, உவமையாக வருவதைப் பொருளாக்கிக் கூறுவது விபரீத உவமையாகும். அகநானூற்றில், 'கண்போல் நெய்தல்' (170:4) என்று விபரீத உவமை இடம்பெற்றுள்ளது. பொதுவாகக் கண்களுக்கு நெய்தற்பூவை உவமையாக்குவது மரபு. இங்கு நெய்தல் மலருக்குக் கண் உவமையாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

• இணைப்பு உவமை

உவமையையும் பொருளையும் இரட்டை இரட்டையாகக் கூறுவது சங்க இலக்கியத்தில் காணப்படும் சிறப்பாகும். இது அகநானூற்றிலும் உண்டு.

ஓவத் தன்ன வினைபுனை நல்லில்
பாவை அன்ன பலர்ஆய் மாண்கவின்
.................................... மகள்
(98;11.13.)

என்ற பாடற் பகுதியில் இணைப்பு உவமை அமைந்துள்ளது. ஓவியம் போன்ற இல்லத்திலே பாவை போன்ற தலைவி இருப்பதாக உவமை அமைக்கப்பட்டுள்ளது.

• கருத்து விளக்க உவமைகள்

பொருளுக்கு அழகு சேர்ப்பதற்கு அல்லாமல் தாம் சொல்ல வந்த கருத்தை விளக்குவதற்குக் கவிஞர்கள் உவமைகளைக் கையாளுவார்கள். இங்ஙனம் அமையும் உவமைகளைக் கருத்து விளக்க உவமைகள் என்று குறிப்பிடலாம். இத்தகு உவமைகள் அகநானூற்றில் மிகுதி.

தலைவியது அழகு தலைவனுக்குப் பயன்படாமல் வீணாகிறது. அதாவது அவளது அழகு வெளிப்படாமல் இருக்கிறது. இதனை விளக்க நினைக்கின்றார் புலவர். வறியவர்களுக்கு ஒன்று ஈயாதவனுடைய செல்வம் வெளிப்படாததை உவமையாகக் கூறி விளக்குகிறார்.

இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல்
பரந்து வெளிப்படா தாகி
வருந்துக தில்லயாய் ஓம்பிய நலனே.
(276:13-15)

என்பது அகநானூற்றுப் பாடற் பகுதியாகும்.

காம உணர்ச்சியை அடக்காமல், பலர் அறிய வெளிப்படுத்துபவர்களை நாணமற்றவர்கள் என்பார்கள். இதன் பொருள் காமத்தை அடக்கி ஆளவேண்டும் என்பதாகும். இருப்பினும் காமத்தை நாணத்தால் அடக்க முடியாது என்பதே உண்மை. இக்கருத்தை அழகான உவமை கொண்டு அகநானூற்றுப் புலவர் விளக்கியுள்ளார்.

உப்புச் சிறைநில்லா வெள்ளம் போல
நாணுவரை நில்லாக் காமம்
(208:19-20)

என்பது பாடற்பகுதி. பெருக்கெடுத்து வருகின்ற வெள்ளத்தை (தண்ணீரை) உப்பால் அணை கட்டித் தடுக்க முடியுமா? அதுபோலத்தான் பெருக்கெடுத்துவரும் காமத்தை நாணம் என்ற அணை கொண்டு தடுக்க முடியாது என்று புலவன் தரும் விளக்கம் என்றும் போற்றற்குரியது.

• வரலாற்று உவமைகள்

ஏதேனும் ஒன்றை விளக்குவதற்காக வரலாறுகளைப் பயன்படுத்தும் போக்கு அகநானூற்றில் மிகுதி. வரலாற்றை உவமையாகப் பயன்படுத்தி உள்ளனர். உவமையாக வரலாறுகள் பயன்பட்டமையைக் காண்போம்.

• அடையாளம் காட்டும் வரலாறு

தலைவன் சென்ற காட்டை, காட்டுப் பாதையை விளக்கவும் அடையாளம் காட்டவும் வரலாறு உவமையாகி உள்ளது.

விளங்கு புகழ்நிறுத்த இளம்பெருஞ் சென்னி
.................
வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்
கொன்ற யானைக் கோட்டின் தோன்றும்
அஞ்சுவரு மரபின் வெஞ்சுரம்.
(375:11-16)

இளம்பெருஞ் சென்னி வடுகரை வீழ்த்திய வரலாறு இங்கே சுட்டப்படுகிறது.

• அழகுக்கு வரலாறு

பெண்களின் அழகுக்கு நகரங்கள் உவமையாகி உள்ளன. அப்போது அந்த நகரங்களின் அரசர்கள் பேசப்பட்டுள்ளனர்.

வான வரம்பன் வெளியத்து அன்னநம்
மாண்நலம்
(359:6-7)

குரங்குஉளைப் புரவிக் குட்டுவன்
மாந்தை அன்னஎன் நலம்
(376:17-18)

ஆரியர் அலறத் தாக்கிப் பேர் இசைத்
தொன்றிமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து
வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்
வஞ்சி அன்ன என் நலம்
(396:16-19)

வஞ்சிவேந்தன் இமயத்தில் வில்லைப் பொறித்த செய்தி இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடுகளின் அழகுக்கும் செழுமைக்கும் நகரங்கள் உவமையாகி உள்ளன.

கடல்அம் தானைக் கைவண் சோழர்
கெடல்அரு நல்லிசை உறந்தை அன்ன
நிதியுடை நல்நகர் புதுவது புனைந்து
(369:14-16)

• அலரை விளக்க வரலாறு

தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள களவொழுக்கம் பற்றியும், பரத்தையர் ஒழுக்கம் குறித்தும் எழும் அலரை, வெற்றி பெற்ற வீரர்களின் ஆரவாரத்தோடோ விழாவின் ஒலியோடோ ஒப்பிடுவது அக்கால மரபு.

........................................... அலரே
காய்சின மொய்ம்பின் பெரும்பெயர்க் கரிகால்
........................................................... பதினொரு வேளிரொடு வேந்தர் சாய,
மொய்வலி அறுத்த ஞான்றை,
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே.
(246:7-14)

(கரிகாலன் சிற்றரசர் பதினொருவரை வென்ற செய்தி)

எனப் போர் ஆரவாரமும்

.......................................... கொங்கர்
மணியரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவின் அன்ன
அலர் ஆகின்றது
(368:16-19)

(கொங்கர் நாட்டு விழா)

என விழாவும் அலருக்கு உவமை ஆகி உள்ளன.

இவைபோல் பலவற்றுக்கு வரலாற்றுச் செய்திகள் உவமையாகி உள்ளன.

• உள்ளுறை உவமைகள்

சொல்ல வந்த கருத்தை மறைமுகமாகச் சொல்வது உள்ளுறை. அக இலக்கியத்தில் முக்கியக் கூறு உள்ளுறை ஆகும். இதுவும் ஒருவகையில் உவமையே. ஆயினும் இதில் உவம உருபுகேளா அதுபோல இது என்ற விளக்கமோ இருக்காது. அகம் என்பது புறத்தார்க்குப் புலனாகாத - புலனாகக் கூடாத ஒழுக்கம். புறத்தார்க்குப் புலனாகக் கூடாத அகத்திற்கு உள்ளுறை அவசியம். அகநானூற்றில் இடம்பெற்றுள்ள உள்ளுறைகளைத் திணைக்கு ஒன்றாகக் காண்போம்.

பல குரங்குகளுக்குத் தலைமையேற்றிருக்கின்ற ஓர் ஆண் குரங்கு, ஒரு பலாப் பழத்தைத் தன் உடலோடு சேர்த்தெடுத்துச் சென்று தன் பெண் குரங்கை அழைக்கும் என்ற செய்தி ஒரு பாடலில் இடம்பெற்றுள்ளது. இது தலைவனும் தலைவியை அங்ஙனமே காப்பான் என்ற மறை பொருளைத் தருகிறது. இச் செய்தி குறிஞ்சித் திணையின் தலைவி கூற்றில் இடம்பெற்றுள்ளது.

முடவுமுதிர் பலவின் குடம்மருள் பெரும்பழம்
பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்
..................................................
முழவன் போல அகப்படத் தழீஇ
இன்துணைப் பயிரும் குன்ற நாடன்
(352:1-7)

எருமை ஒன்று பொய்கையிலே இருக்கின்ற ஆம்பல் மலர்களைத் தின்று, சேற்றிலே கிடந்து உறங்கி, விடியற் காலையிலே வரால் மீன்கள் துண்டாகும்படி அவற்றை மிதித்து, பகன்றைக் கொடிகளை மேலே பற்றிக்கொண்டு போர் வீரரைப்போல ஊருக்குள் நுழைகிறது என்ற செய்தி ஒரு பாடலில் இடம்பெற்றுள்ளது. இது, தலைவன் ஒருவன் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டு, இரவில் அங்கேயே தங்கி, விடியற்காலையில் எல்லாரும் பார்க்கும் வகையில் வெளியேறி, குடிப்பெருமையைச் சிதைத்து, அடையாளங்களுடன் வந்தான் என்ற செய்தியை மறைமுகமாகத் தருகிறது. இச் செய்தி மருதத்திணையில் தோழி கூற்றில் இடம்பெற்றுள்ளது.

துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
அரிமலர் ஆம்பல் மேய்ந்த நெறிமருப்பு
ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்துத்
தூங்குசேற்று அள்ளல் துஞ்சிப் பொழுதுபடப்
பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து
குரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப்
போர்ச் செறி மள்ளரின் புகுதரும் ஊரன்
(316:1-7)

ஒரு யானை, கிடைத்த சிறிதளவு நீரில் தன் பெண் யானையைக் குளிக்கச் செய்து, எஞ்சிய சேற்று நீரில் தான் குளிக்கின்றது என்ற செய்தி ஒரு பாடலில் இடம்பெற்றுள்ளது. இது, தலைவனும் அதுபோலத் தலைவியைக் காப்பான் என்ற செய்தியைத் தருகிறது. இச் செய்தி பாலைத் திணையின் தலைவன் கூற்றில் இடம்பெற்றுள்ளது.

தொடுகுழி மருங்கில் துவ்வாக் கலங்கல்
கன்றுடை மடப்பிடிக் கயந்தலை மண்ணிச்
சேறு கொண்டாடிய வேறுபடு வயக்களிறு
(121:4-6)

ஒரு கரடி இருப்பைப் (இலுப்பை) பூக்களை விரும்பித் தின்று, கொன்றைப் பழங்களைக் கோதிவிட்டுப் போகின்றது. இது, தலைவன் கிடைத்தவுடன் தலைவி, தோழியரையும் பிறரையும் ஒதுக்கிவிட்டுச் செல்கிறாள் என்ற செய்தியைத் தருகிறது. இச்செய்தி பாலைத் திணையின் தாய் கூற்றில் இடம்பெற்றுள்ளது.

அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத்
துய்த்த வாய, துகள்நிலம் பரக்க,
கொன்றை யம்சினைக் குழல்பழம் கொழுதி
வன்கை எண்கின் வயநிரை பரக்கும்.
(15:13-16)

யாமை (ஆமை) ஒன்று மறைவான இடத்தில் முட்டையிட, அதனைக் குஞ்சு பொறிக்கும்வரை ஆண் யாமை பேணிக் காக்கிறது. இது, தலைவன் களவொழுக்கத்தைத் திருமணம் வரை யார்க்கும் தெரியாமல் மறைத்துக் காப்பான் என்ற செய்தியைத் தருகிறது. இச்செய்தி நெய்தல் திணையின் தோழி கூற்றில் இடம்பெற்றுள்ளது.

நிறைச்சூல் யாமை மறைத்துஈன்று புதைத்த
கோட்டுவட்டு உருவின் புலவுநாறு முட்டை
பார்ப்புஇடன் ஆகும் அளவை, பகுவாய்க்
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்.
(160:5-8)

இவை போன்று ஏனைய உள்ளுறைகளும் சுவையாக அமைந்திருக்கின்றன.

4.3.2 உருவகம்

உவமைக்கும் பொருளுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்து, இரண்டையும் ஒன்றுபோலக் காட்டுவது உருவகம் ஆகும். இது பலவகை ஆகும்.. அவற்றுள் முற்றுருவகம் குறிப்பிடத் தக்கதாகும். இது ஒரு பொருளின் அனைத்து உறுப்புகளையும் உருவகிப்பது ஆகும்.

ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கில்
கோடை அவ்வளி குழலிசை யாகப்
பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் துதைகுரல் ஆகக்
கணக்கலை இகுக்கும் கடுங்குரல் தூம்பொடு
மலைப் பூஞ்சாரல் வண்டு யாழாக
இன்பல் இமிழ்இசை கேட்டுக் கலிசிறந்து,
மந்தி நல்லவை மருள்வன நோக்கக்
கழைவளர் அடுக்கத்து இயலி ஆடுமயில்
நனவுப்புகு விறலியின் தோன்றும்
(82:1-10)

என்ற பாடற்பகுதி முற்றுருவகம் அமைந்ததாகும். மூங்கிலில் அமைந்த துளையில் கோடைக் காற்றுப் புகுந்து குழலிசையாகவும் இனிய அருவியின் இசை முழவின் இசையாகவும் கலைமான் கூட்டங்களின் ஒலி பெருவங்கியத்தின் ஒலியாகவும் வண்டுகளின் ஒலி யாழாகவும் இனிய பல இசைகளைக் கேட்டு மகிழும் மந்திகள் பார்வையாளர்களாகவும் மலைப்பகுதிகளில் ஆடும் மயில்கள் விறலியராகவும் உருவகப் படுத்தப்பட்டுள்ளன. இங்கு ஒரு சோலை முற்றிலும் ஒரு நாடக அரங்கமாக உருவகிக்கப்பட்டு முற்றுருவகம் ஆகிறது.

இவ்வாறு உருவகங்கள் பல வந்து அகநானூற்றைச் சிறப்பிக்கின்றன.