5.2 அகப்பொருள் துறைகள்

அகப்பொருள் நிகழ்வுகளும் சூழல்களும், துறைகள் என்ற பெயரால் குறிக்கப்படும். யார் யாரிடம் எதற்கு எப்படி எந்தச் சூழ்நிலையில் பேசினார் என்பனவற்றின் தொகுப்பே துறை ஆகும். எடுத்துக்காட்டாக, துறை என்பது 'பிரிவிடை ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது' என அமையும். ஏதோ ஒன்றன் பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றுள்ளான். பிரிவுத் துயரத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத தலைவி, தனது துன்பத்தைத் தோழியிடம் எடுத்துச் சொல்வது இத் துறைக்கு விளக்கமாகும். துறைகள் எல்லாம் கூற்றுகளால்தான் இயங்கும். கூற்று என்பதன் பொருள் ‘கூறிய சொற்கள்’ ஆகும். எனவே, கூற்றுகள் என்ற அடிப்படையில் அகநானூற்றுத் துறைகள் சிலவற்றையும் அவற்றிற்குரிய பாடல்களையும் பற்றிக் காண்போம்.

அகப்பொருள் மாந்தர்களாகத் தலைவன், தலைவி, தோழி, பாங்கன், செவிலி, நற்றாய், பாணன், கண்டோர் ஆகியோர் அமைவர்.