தலைவன் கூற்றாக அமைந்த பாடல்களில் ஐம்பது விழுக்காட்டிற்கும் மேலானவை அவன் நெஞ்சுடன் (மனத்துடன்) பேசுவதாக அமைந்தவையாகும்.
தலைவி, தான் சொன்ன நன்மொழிகளை நம்பி மழைபொழியும் இரவில் வந்து
தன்னைக் கூடியபின் திரும்பிப் போவதைக் காண்கிறான் தலைவன்.
தலைவியின் இச்செயலை நினைந்து நினைந்து மகிழ்கிறான். ‘இவள் ஒரு தெய்வ மகளே’
என்று அதை நெஞ்சிடம் வெளிப்படுத்துகின்றான். இது 'புணர்ந்து நீங்கிய தலைமகளது போக்கு நோக்கிய
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது' என்னும் துறையாகும் (பாடல் 198) இதைப்போன்று தலைவியைப் பற்றி நெஞ்சிற்குக் கூறும்
பாடல்கள் பல உள்ளன.
தலைவன், தலைவியை முன்குறிப்பிட்டவாறு
குறிப்பிட்ட இடத்தில் சந்திக்கலாம், பேசலாம் என்று வருகிறான். தலைவியைச்
சந்திக்க முடியவில்லை. மனம் வருந்தி - புலம்பி - திரும்பிச் செல்கிறான்.
இது 'அல்லகுறிப்பட்டுழித் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது' என்னும்
துறையாகும் (பாடல்கள் 212, 322, 338, 342, 372).
இவற்றைப் போன்ற களவுக்காலத்துப் பாடல்கள் - துறைகள் - கூற்றுகள் அகநானூற்றில் பல உள்ளன.
கற்புக் காலத்தில் தலைவன் நெஞ்சிடம் பல சூழல்களில் பேசுவதாகப் பாடல்கள் அமைந்துள்ளன.
மனைவி மக்களோடு இன்பமாக வாழ்வதற்குப்
பொருள் இன்றியமையாத் தேவை ஆகும். பொருளைத் தேடுவதற்காகத் தலைவன் வேற்றூர்
செல்ல விரும்புகின்றான். இதை உணர்ந்து கொண்ட தலைவி பாலை நிலத்தைக் கடந்து
செல்லும்போது தலைவன் அடையும் துன்பங்களை எண்ணி வருந்துகிறாள். அவன் பிரிந்து
செல்லக் கூடாது என்ற தன் விருப்பத்தைப் ‘பேசா ஓவியமாக’ அவனுக்கு உணர்த்துகிறாள்.
தலைவி பற்றிய அந்த நினைவு அவன் வேற்றூருக்குச் செல்வதைத் தடுக்கிறது. இது,
'பிரியக் கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது' (பாடல்
5) என்னும் துறையாகும்.
ஒரு தலைவன் பொருளுக்காகப் பிரியக் கருதுகிறான். பிரிந்தும் செல்கிறான். செல்லும் வழியில்
தலைவியின் நினைவு வருகிறது. அதனால், அவளது அழகையும் செயலையும் தன் நெஞ்சிடம் விவரிக்கிறான்.
ஆயினும், அவள் மகிழப் பொருளைத் தேடிவருவோம் என்னுடன் விரைந்து வா என்று நெஞ்சுக்கு உரைக்கிறான். இஃது
‘இடைச் சுரத்து நின்று மீளலுற்ற நெஞ்சைக் கழறியது’ என்னும் துறை ஆகும் (பா.21). அகநானூற்றில் பல
பாடல்கள் இத்துறையில் அமைந்துள்ளன.
ஒரு தலைவன் நாடுகாவல் பொருட்டு வேந்தனின் படையுடன் போருக்குச் செல்கிறான்.
பாசறையில் தங்கியிருக்கிறான். அப்பொழுது தலைவியின் நினைவு வருகிறது.
தன் நெஞ்சிடம் புலம்புகின்றான். இது, 'பாசறைப் புலம்பல்' என்னும் துறையாகும் (பாடல்கள் 84, 214, 304). |