தலைவி தலைவனுடனும் கூற்றுகள் நிகழ்த்துவாள். இருப்பினும் இவை மிகச் சிலவே. இவை களவு,
கற்பு ஆகிய இரு ஒழுக்கங்களிலும் நிகழும். கூற்றுகள் நேரிடையாகப் பேசுவதாகவோ தோழியிடம்
பேசுவதுபோல மறைமுகமாகவோ அமையும்.
கற்பு வாழ்க்கையில் பரத்தையர் பொருட்டுப் பிரிந்து மீண்டும் வரும் தலைவனிடம்
தலைவி கூற்று நிகழ்த்துவாள். ஒரு தலைவன் பரத்தையுடன் இருந்து, பின் தன் இல்லம்
திரும்புகின்றான். அவனது தகாத ஒழுக்கத்தைக் குறித்துத் தலைவி வினவுகின்றாள்.
அவன் ஒன்றும் தெரியாதவன் போல் நடிக்கின்றான். அவனது ஏமாற்றுத்தனத்தைத் தலைவி
அவனிடமே வெளிப்படுத்துகின்றாள். இது, 'பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைமகன், யாரையும்
அறியேன் என்றாற்குத் தலைமகள் சொன்னது' என்ற துறையாகும் (பாடல் 16).
“தெருவில் விளையாடிக் கொண்டிருந்த நமது மகனை வழியில் வந்த அந்தப்
பெண் வாரியெடுத்து மகிழ்ந்தாள். நான் அங்குச் சென்றதும் களவு செய்தவரைப் போல
விழித்தாள். நீயும் இவனுக்குத் தாயே என்றேன். நாணித் தலை குனிந்தாள்” என்பது இப்பாடலின் கருத்து. |