5.6 செவிலி

செவிலி தலைவியின் வளர்ப்புத்தாய். நற்றாய்க்குத் தோழியாக இருந்தவள். களவு, கற்பு என்ற இரு ஒழுக்கத்திலும் செவிலி கூற்று நிகழ்த்துவாள். தலைவியின் வேறுபாடு கண்டு தோழியை வினாவுதலும், நற்றாய்க்கு அறத்தொடு நிற்றலும், உடன்போக்கின்போது புலம்புதலும், கண்டோரை வினவுதலும், கற்புக் காலத்தில் தலைவியின் இல்வாழ்க்கைச் சிறப்பைக் கண்டு வந்து நற்றாயிடம் உரைப்பதும் செவிலி கூற்றுகள் நிகழும் துறைகள் ஆகும்.

உடன்போகிய தலைவியை நினைத்துச் செவிலி புலம்பும் துறையில் அமைந்த பாடல்கள் அகநானூற்றில் மிகுதி. “திருமண விழாவில், பெற்ற தாய் ‘சிலம்பு கழிநோன்பு’ செய்து கழற்ற வேண்டிய தன் சிலம்பைத் தலைவியாகிய என் மகள் தலைவனோடு உடன்போக்கில் செல்ல இரவில் புறப்பட்ட போது, உறங்கும் தாயை ஒலிசெய்து எழுப்பிவிடுமே என்று, தானே கழற்றி வைத்துவிட்டுச் சென்றுவிட்டாள். அவள் தன் காதலனுடன் காட்டில் ஓர் ஒதுக்கிடத்தில் நடை தளர்ந்து தங்கியிருக்கிறாளோ, அச்சம் தரும் அப்பாலை வழியில் அவனுக்கும் முன்னால் நடந்து கொண்டிருக்கிறாளோ” என்று செவிலி புலம்பும் கயமனாரின் பாடல் (321) மிக அழகியது.

5.6.1 நற்றாய்

நற்றாய், தலைவியைப் பெற்றெடுத்தவள். தலைவியின் வேறுபாடு கண்டு செவிலியை வினாவுதலும், தந்தை; தன்னையர்க்கு அறத்தொடு நிற்றலும், உடன்போக்கின்போது புலம்புதலும், கண்டோரை வினவுதலும் என நற்றாய் கூற்றுகள் - துறைகள் அமையும்.

அக இலக்கியங்களிலும் இலக்கணங்களிலும் நற்றாய்க்கும் தலைவிக்கும் உள்ள தொடர்பு மேலோட்டமாகவே காட்டப்பட்டுள்ளது. தலைவி மீது நற்றாய்க்கு அக்கறையும் பாசமும் இல்லாதது போலவே எண்ணத் தோன்றும்.

உடன்போக்கு மேற்கொண்ட தன் மகளை எண்ணி நற்றாய் வருந்துகிறாள். அலர் பேசும் பெண்டிர் தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள தொடர்பைத் தங்களுக்குள்ளும் பேசிக்கொள்கின்றனர்; நற்றாயிடமும் தெரிவிக்கின்றனர். "தலைவியின் செயலால் மகிழ்ச்சி அடைவதோ துன்பப்படுவதோ நம்முடைய வேலை, இதில் ஏன் மற்றவர்கள் மூக்கை நுழைக்கிறார்கள்?” என்று வெகுள்கிறாள் - வேதனைப்படுகிறாள், நற்றாய்.

தன் மகள் நாணுவாள் என்பதால்தான் அலர்வாய்ப் பெண்களின் கூற்றைத் தன் மகளிடம் விசாரிக்காமல் இருக்கின்றாள். தன் மகள் தனது உள்ளம் என்ன என்பதை அறியாமலேயே சென்றுவிட்டாளே என்று வருந்துகிறாள்.

அவர்கள் போகும் பாதையில் உள்ள சிற்றூரில், நொச்சி மரம் சூழ்ந்த குடிசையில் வாழும் ஒரு பெண்ணாக மாற்றுருக்கொண்டு, அவர்களை வரவேற்று, விருந்து உபசரிக்க எண்ணுகின்றாள். இதுவே அகநானூறு 203 ஆம் பாடலில் இடம்பெற்றுள்ள செய்தி.

இப்பாடல் நற்றாய், தலைவியைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருப்பதையும், அவளது காதலுக்கு ஆதரவாய் இருப்பதையும், காதலனுடன் சென்றுவிட்ட மகள்மீது கோபம் கொள்ளாமல் இருப்பதையும் எடுத்துக்காட்டி, தலைவி மீது நற்றாய்க்கு உள்ள அக்கறையையும் பாசத்தையும் வெளிப்படுத்தி உள்ளது. அக இலக்கியங்களில் இத்தகு அரிய பாடல் இது ஒன்றே எனலாம்.

5.6.2 பரத்தை

தலைவனுக்குத் தலைவி அல்லாமல் வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருக்கும். அவர்கள் பரத்தையர் எனப்படுவர். உரிப் பொருளாகிய ஊடலுக்குக் காரணமாய் அமைந்து, மருதத்திணையை இயக்குபவர்கள் பரத்தையர்களே ஆவர். தலைவன், தலைவனுக்குப் பாங்காயினார், தலைவிக்குப் பாங்காயினார், தமக்குப் பாங்காயினார் என இவர்களிடம் பரத்தையர், தலைவனின் இயல்பைப் பழித்துப் பேசுவர். (பாங்காயினார் = நெருங்கியவர்கள், நண்பர்கள்)

“தலைவன் தன் மனைவியிடம், “உன் கோபத்திற்குக் காரணமான அந்தப் பெண்ணை எனக்குத் தெரியவே தெரியாது; அவளோடு நான் காவிரிப் புதுப்புனல் ஆடவில்லை. அந்தத் தவற்றை நான் செய்திருந்தால் தெய்வம் என்னை வருத்தட்டும்” என்று சூள் (சத்தியம்) உரைத்து அவளைத் தேற்றுகிறானாம். அப்படியானால் நேற்று என்னுடன் நீராடிக் களித்தவன் யார்? வேறு ஒருவனா?” என்று தனக்குப் பாங்காயினாரிடம் தலைவனைப் பழிக்கிறாள் பரத்தை (பாடல் 166).

5.6.3 கண்டோர்

உடன்போக்கின்போது தலைவன், தலைவியரின் கண்ணிலும் தேடிச்செல்லும் செவிலி கண்ணிலும் படுபவர்கள் கண்டோர் ஆவர். இவர்கள் பேசுவதாகவும் பாடல்கள் உள்ளன.