மக்கள் தங்கள் இன்பத்திற்காக மற்ற உயிரினங்களுக்கு இடையூறு செய்வதில்லை. ஓர் ஆடவன் தன்
நாட்டிற்குக் கடமையாற்றுவதற்காக மனைவியைப் பிரிந்து சென்று மீண்டு வருகின்றான். வரும்போது, விரைந்து
வந்து மனைவியைச் சந்திக்க வேண்டும் என்று நினைப்பது இயற்கை. அப்போது வேறு எதுவும் கவனத்திற்கு
வாராது. இருப்பினும் வழியில், சேர்ந்திருக்கும் இணை வண்டுகள் தேரின் மணி ஓசையால் அஞ்சி
விலகிடக்கூடாது என்பதற்காகத் தேரில் உள்ள மணிகளின் நாவினை ஒலிக்காதவாறு கட்டுகின்றான் அந்த ஆடவன். இதனை,
நரம்பு ஆர்த்தன்ன, வாங்குவள் பரிய
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்(4) |
என்ற பாடற்பகுதி வெளிப்படுத்துகின்றது.
ஒரு தலைவன் தன்
தேரில் பூட்டிய குதிரையை அடிக்காமலும் மணி ஓசையால் மான்கள் தம் சேர்க்கையைவிட்டு
அஞ்சி ஓடாமல் இருக்கும் வகையிலும் தேரைச் செலுத்துமாறு தேர்ப்பாகனிடம்
கேட்டுக்கொள்கிறான். (134) இவை அக்கால மக்கள் பிற உயிர்கள் மீது கொண்டிருந்த
பரிவினைக் காட்டுகின்றன.
|