சங்க காலத்தில் உழவே தலைமையான தொழிலாக விளங்கிற்று. உழவுத் தொழிலின் மேன்மையை உணர்ந்த
புலவர்கள் உழவின் நுட்பங்கள் பற்றிப் பல பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். நெல் பயிரிடுதலில் பல்வேறு நிலைகள் உள்ளன.
நிலத்தை உழுதல், நீர் பாய்ச்சுதல், விதை விதைத்தல், நாற்று நடுதல், உரமிடுதல், களையெடுத்தல், பின் உரிய காலத்தில்
அறுவடை செய்தல் என்பன அவை.
இவற்றுள் உழவுக்குரிய கலப்பை - நாஞ்சில் பற்றிய குறிப்பு, பாடல் 141இல் இடம்பெற்றுள்ளது. 'இருங்கழிச்
செய்யின் உழாஅது செய்த வெண்கல் உப்பின்' - (140) எனவரும் தொடர்,
உழுது விளைவிப்பது பயிர்; உழாது விளைவிப்பது உப்பு என்ற பொருளைத் தருகிறது. (செய்யில் - வயலில்)
உழவுத் தொழிலுக்கு அடிப்படையான நீர்நிலைகளை இரவும் பகலும் காத்து
நீரை ஒழுங்குபடுத்தும் காவலர்கள் இருந்துள்ளனர் என்ற செய்தியைப் பாடல் 252 கூறுகிறது. |