3.3 உறந்தை நகரின் சிறப்பு |
சோழர்களின் தலைநகரங்களுள் ஒன்று உறந்தை ஆகும். இந்நகரின் சிறப்பினை 68-83 அடிகளில் இந்நூல் விரிவுபடக் கூறுகிறது. |
|
தமிழகத்தின் கீழ்த் திசையில் அமைந்துள்ள நிலப் பகுதிகளைச் சோழ நாடு என்பர். அதனைப் பல காலமாக ஆட்சி செய்த மன்னர் மரபினர் சோழர். |
சோழர் மரபில் தோன்றிய செம்பியன் என்பவன் குடிமக்களின் நலம் காக்கும் வகையில், பகைவரின் தொங்கும் அரண்களை முற்றிலுமாக அழித்தான். அதனால் அவன் தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் என்று சிறப்பிக்கப் பெற்றான். |
'சோழநாடு சோறு உடைத்து' என்பது பழமொழி. இந்நாட்டின் சிறப்பு, நீர்வளம் நிறைந்த, குளிர்ச்சி உடைய வயல்கள். ஐவகை நிலங்களில் இதனை மருதம் என்று குறிப்பிடுவர். |
இந்நாட்டில் நீர்வளமும் நிலவளமும் ஒருங்கே சிறப்புற்று இருப்பதை, சிறுபாணாற்றுப்படை ஒரு நாடகத்தின் அழகுபட விவரிக்கிறது. |
|
சோழநாட்டில் ஒரு பொய்கை (நீர்நிலை) உள்ளது. அது நல்ல நீரை உடையது. அப் பொய்கையைக் கடப்ப மரங்கள் சூழ்ந்துள்ளன. அம்மரத்தில் மலர்கள் மாலைகள் போலத் தொங்குகின்றன. அம்மலர்களினின்றும் இந்திரகோபம் போன்ற தாதுக்கள் விழுகின்றன. இங்ஙனம் வீழ்வது ஓவியத்தை ஒத்து விளங்குகின்றது (இந்திர கோபம் = தம்பலப்பூச்சி). |
இத்தகு வளம் பொருந்திய பொய்கைத் துறையிடத்தே, எழுகின்ற மார்பகத்தினை ஒத்த தாமரை மொட்டுகள் உள்ளன. அது சாதிலிங்கக் குழம்பு தோய்ந்த உள்ளங்கை போன்ற சிவந்த இதழ்களைக் கொண்டது. அழகிய முகம் போல அது மலர்ந்து இருக்கிறது. அதன் பொன் நிறமான பொகுட்டின் (மொட்டு) மீது தும்பி (வண்டு) தன் பெடையைத் தழுவிக் கொண்டு சீகாமரம் என்னும் பண்ணை (இசையை) இசைத்து மகிழ்கிறது. |
|
செந்தமிழ் நாட்டு மூவேந்தர்களுடைய கொடைத் தன்மை, வெற்றிச் சிறப்பு, நாட்டு வளம் முதலியவற்றை, வறுமையில் வாடும் பாணனிடம் பரிசு பெற்ற பாணன் எடுத்துக் கூறுகிறான். அப்பொழுது இவர்களது வள்ளல் தன்மையைக் காட்டிலும் நல்லியக்கோடனின் வள்ளல் தன்மை மேம்பட்டது என்று அவன் புகழ்ந்து கூறுகிறான். |