1.4
நாற்பத்தேழாம் பாடலும் ஐம்பதாம் பாடலும்
நாற்பத்தேழாம்
பாட்டு வள்ளியோர்ப் படர்ந்து எனத்
தொடங்குவது. இப்பாட்டின் ஆசிரியர் கோவூர் கிழார்.
காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்ற அரசன், சோழன்
நலங்கிள்ளியிடமிருந்து தன்னிடத்து வந்த புலவர் இளந்தத்தனை
ஒற்றன் என்று தவறாகக் கருதிக் கொல்லத் துணிந்த போது கோவூர்கிழார்
இப்பாடலைப் பாடிப் புலவரைக் காப்பாற்றினார். (துஞ்சிய = இறந்த ; காரியாறு
= ஓர் ஊரின் பெயர்)
ஐம்பதாம் பாட்டு
புலவர் மோசிகீரனாரால் பாடப்பட்டது.
சேரன் தகடூர் எறிந்த பெருஞ்சேரமால் இரும்பொறையின்
அரண்மனையில் இருந்த முரசம் நீராட்டப் பெறப் போயிருந்தது. அப்போது மிகத் தொலைவிலிருந்து
வந்த புலவர் மோசிகீரனார் அறியாமல் அக்கட்டிலில் ஏறித் தூங்கிவிட்டார். நீராட்டிய
முரசொடு வந்த சேரன், கட்டிலில் தூங்கிய புலவரை வாள்கொண்டு வீசாது கவரி கொண்டு
வீசினான். அச்செயல் கண்டு மகிழ்ந்த நினைவில் புலவர் இப்பாட்டைப் பாடினார்.
இப்பாட்டு மாசற விசித்த எனத் தொடங்குவது.
1.4.1
பரிசில் வாழ்க்கை (நாற்பத்தேழாம் பாட்டு)
புலவர்கள் அரசர்களையும்
குறுநில மன்னர்களையும் பாடிப் பரிசில் பெறுவர். பரிசில் வாழ்க்கையை மேற்கொண்ட
புலவர் பிறர்க்குத் தீதறிய மாட்டார். அந்நிலையில் புலவன் ஒருவனை ஒற்றன் என்று
தவறாகக் கருதிக் கொல்லப் புகுந்தான் நெடுங்கிள்ளி என்ற சோழ அரசன். கோவூர்
கிழார் பரிசில் வாழ்க்கை மேற்கொண்ட புலவர்களின் பெருமையை எடுத்துக் கூறிப்
புலவர் இளந்தத்தனைக் கொலைப்படாமல் காப்பாற்றினார். பரிசில் வாழ்க்கை,
1. வளமிக்க கொடையாளிகளைத்
தேடிச்
செல்வதாக அமைவது. 2. தாம்செல்ல வேண்டிய இடம்
மிகத்
தொலைவானது என்றும் செல்ல அரிய வழிகளை உடையது
எனவும் நினையாதது. 3. தம் தெளிந்த
நாவால் தாம்
அறிந்தவாறு பிறரைப் பாடுவது. 4. பாடிப் பெற்ற பொருளைப்
பாதுகாத்து வைத்துக் கொள்ளாது பிறர்க்கும் வழங்குவது. 5.
தம்
சிறப்பறிந்து பிறர் பரிசில் வழங்க வேண்டும் என நினைவது
என்னும் இத்தகைய பண்புகளை உடையது எனக் கோவூர் கிழார்
பாடுவார்.

பாட்டும் கருத்தும்
இப்பாட்டு பதினோரடிகளைக்
கொண்டது. திணை வஞ்சி: துறை துணைவஞ்சி.
“பிறர்க்குப்
பொருளை வழங்கும் தன்மை உடையோரை நினைந்து பழுத்த மரங்களைத் தேடிப் போகும்
பறவை போல நெடுந்தொலைவு என்று கருதாமல் அரிய வழி பலவற்றையும் கடந்து பரிசிலர்
செல்வர். சென்று பிழைபடாத தம் நாவால் தாம் பிறரை அறிந்த வண்ணம் பாடிப் பரிசில்
பெறுவர்; அவ்வாறு பெற்ற பரிசிலைக் கொண்டு சுற்றத்தாரை உண்ணச் செய்வர். அப்பொருளைப்
பாதுகாத்து வைத்துக் கொள்ளாமல், உள்ளம் வருந்தாது பிறர்க்கு அளிப்பர். தமக்குப்
பரிசில் தருவோர் தம் சிறப்பறிந்து தர வேண்டும் எனக் கவலைப்படுவர். இத்தகைய
பரிசில் வாழ்க்கை, பிறர்க்குக் கொடுமை செய்ய அறியாதது. பாகுபடுத்தி உணருமாறு
கல்வியால் தம்மோடு மாறுபட்டாரை அவர் நாணும்படியாகத் தம் கல்வியால் வெல்வர்;
அவ்வெற்றியால் தலை நிமிர்ந்து நடப்பர். இவ்வாறு இனிதே ஒழுகும் பரிசிலர் வாழ்க்கை
நாட்டை ஆளும் செல்வம் பொருந்திய உம்மைப் போன்ற தலைமைத் தன்மையும் கொண்டது”
என்பது இப்பாட்டின் பொருளாகும்.
பாட்டின் திணை, துறை விளக்கம்
இப்பாட்டின் திணை
வஞ்சி. வஞ்சித்திணை என்பது தன் மண்ணின்மீது விருப்பம் கொண்ட வேந்தன்
ஒருவன் மீது படையெடுத்துச் செல்லும் நிகழ்ச்சி. பகை வேந்தனாகிய நலங்கிள்ளியின்
பகுதியிலிருந்து வந்த புலவனைச் சிறைப்படுத்தித் தனது போரிடும் குறிப்பை உணர்த்தியதால்
இப்பாட்டு வஞ்சித் திணையாயிற்று.
இப்பாட்டின்
துறை துணை வஞ்சி. பகை உள்ளத்தோடு இருக்கும் இருவரை அமைதிப்படுத்தி
உடன்பாடு காணுமாறு உரைத்தல் துணைவஞ்சித் துறையாகும். புலவர் இளந்தத்தன் மீது
கொண்ட மாறுபாட்டைப் போக்கியமையால் துணைவஞ்சித் துறையாயிற்று. இதனைச் சந்து
செய்வித்தல் என்பர்.
1.4.2 முரசுகட்டில் (ஐம்பதாம் பாட்டு)
முரசு என்பது பேரொலி எழுப்பும்
தோற்கருவி. மன்னர்கள்
போர்ச்செயல், அறம் வழங்குதல்,
கொடை கொடுத்தல் ஆகிய
செயல்களுக்காக வேந்தர் முரசு முழக்கப்படும். வீரமுரசு,
நியாயமுரசு, தியாகமுரசு என முரசு மூன்று வகைப்படும் என்பர்.
இம்மூன்றில் ஒன்றாக மணமுரசைக் கூறுவதும் உண்டு.
முரசை வைப்பதற்கென்று
ஒரு கட்டில்
இருக்கும்.
அக்கட்டிலில் யாரும் அமர்ந்தால், முரசுக்குரிய வேந்தனைச்
சிறுமைப் படுத்துவதாகக் கருதப்படும்.
உடனே வேந்தன்
அவ்வாறு செய்தவரை வாள்கொண்டு வெட்டவும் தயங்க
மாட்டான். அத்தகு கட்டிலில் தூங்கிய புலவரைச் சேரன் வாள்
கொண்டு வீசாமல் கவரி கொண்டு
வீசியதை இப்பாட்டு
உரைக்கின்றது.

பாட்டும் கருத்தும்
இப்பாட்டு பதினேழு அடிகளைக் கொண்டது.
திணை பாடாண்; துறை இயன்மொழி.
“குற்றம் இல்லாமல்
நன்கு இழுத்துக் கட்டப்பட்ட நீண்ட வாரை உடையது; கருமரத்தாற் செய்யப்பட்டது;
கருமையான பக்கம் பொலிவு பெறுமாறு ஒளிமிகுந்த பொறியையும் நீலமணி போலும் நிறத்தையும்
கொண்ட மயிற்பீலியால் தொடுக்கப்பட்ட மாலையைப் பொன்போலும் தளிர்களைக் கொண்ட
உழிஞையோடு சூட்டப்பட்டது. குருதியைப் (இரத்தத்தை) பலியாக ஏற்கும் விருப்பத்தையும்
சினத்தையும் கொண்டது. இப்பண்புகளைக் கொண்ட வீரமுரசத்தை நீராட்டி வரச் சென்றிருந்தனர்.
அம்முரசம் வைக்கும் கட்டில் எண்ணெயின் நுரையை முகந்து வைத்தாற் போன்ற மெல்லிய
பூவால் நிரம்பியிருந்தது. அக்கட்டிலை முரசு கட்டில் என அறியாது நான் ஏறிக்
கிடந்தேன். என்னை உன் சினந்தோன்ற உன் வாளால் இருகூறாக ஆக்காது விட்டாய்;
நல்ல தமிழ் முழுதும் அறிந்த உன் பண்புக்கு அவ்வாறு செய்யாது விட்டது பொருந்தும்.
அவ்வாறு இருகூறாக என்னை வெட்டாமல் விட்டதுடன், என் அருகில் வந்து வலிமை மிக்க
முழவு போன்ற உன் தோளை உயர்த்தி விசிறி கொண்டு வீசினாய் வெற்றி பொருந்திய
தலைவனே ! நீ இவ்வாறு செய்தமைக்குக் காரணம், இவ்வுலகத்தில் நல்ல புகழைப் பெற்றவர்களுக்கே
மேலுலகமாகிய உயர்ந்த இடத்தின் கண் வாழ இடம் கிடைக்குமென்றும் மற்றவர்கள்
அவ்வுலகில் உறைதல் இயலாது என்பதும் நீ அறிந்த செயல் போலும்!” என்பது இப்பாட்டின்
பொருளாகும்.
இவண்இசை உடையோர்க்கு அல்லது அவணது
உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
என்பதால் புகழ்பெற்றவர்களே துறக்க உலகம் (சொர்க்க
உலகம்) செல்ல முடியுமென்பது
தமிழர் கொண்டிருந்த
நம்பிக்கை என்பதறியப்படும்.
புலவர்களை வேந்தர்கள் மதித்துப் போற்றியதற்கு
இப்பாடல்
நல்ல எடுத்துக்காட்டாகும்.
பாட்டின் திணை, துறை விளக்கம்
இப்பாட்டின்
திணை பாடாண். சேர
வேந்தனின் புகழை
மதித்துப் போற்றும் வாழ்வின் பெருமையையும், அவனது இரக்க
உணர்வையும், கவரி வீசிய பெருந்தன்மையையும் கூறியதால்
இது பாடாணாயிற்று.
"அதூஉம்
சாலும் நற்றமிழ் முழுதறிதல்" என வேந்தனின் தமிழ்க் காதலைக் கூறியதாலும்
புலவரென அறிந்து தண்ணென வீசிய கொடைப் பண்பையும் சொன்னதாலும் இயன்மொழித்துறை
எனப்பட்டது. |