2.1
தொண்ணூற்றைந்தாம் பாட்டு
இப்பாட்டைப் பாடியவர்
ஒளவையார்.
இப்பாட்டு அதியமான்
பொருட்டுத் தொண்டைமானிடம் தூது
சென்றபோது அவர் பாடியதாகும். அதியமானுக்கும் தொண்டைமானுக்கும்
பகை இருந்தது. அந்நிலையில் அதியமானுக்காக ஒளவையார் தொண்டைமானிடம்
தூது சென்றார். தூது வந்த ஒளவையாரிடம் தொண்டைமான் தன் படைக்கலக் கொட்டிலைப்
பெருமையோடு காட்டியபோது இப்பாடலை அவர் பாடினார்.
ஒளவையின் தூது
தகடூரை ஆண்ட
அதியமான் கடையெழு வள்ளல்களில் ஒருவன். உண்டாரை நெடுங்காலம் வாழவைக்கும் நெல்லிக்கனியை
முயன்று பெற்று ஒளவைக்குக் கொடுத்தவன். அவனுக்கும் தொண்டைமானுக்கும் பகை
இருந்ததென்றும் அப்பகை தவிர்க்க ஒளவை தூது சென்றார் என்றும் கூறப்படுகின்றது.
இப்பாட்டில் தொண்டைமானைப் பெருமைப் படுத்துவது போல ஒளவை பாடியிருப்பினும்
அதியமானின் சிறப்பையே பாடியுள்ளார். இதனைப் 'பழித்தது
போலப் புகழ்ந்தது' என்று புறநானூற்றின் பழைய உரை குறிக்கும்.
2.1.1 பாட்டும் கருத்தும்
இப்பாட்டு, இவ்வே
பீலி அணிந்து என்று தொடங்குவது; ஒன்பதடிகளை உடையது. திணை
பாடாண்;
துறை வாள் மங்கலம்.
“இப்போர்க் கருவிகள்
மயில் தோகை மாலை
சூட்டப்பட்டுள்ளன. இவற்றின் உடற்பகுதிகளாகிய
திரண்ட
வலிய காம்புகள் அழகுறச் செய்யப்பட்டு உள்ளன.
நெய்
பூசப்பட்டுக் காவல் மிக்க அகன்ற அரண்மனைக் கண் உள்ளன.
அப்போர்க் கருவிகள் (அதியமானுடையவை) பகைவரைக்
குத்துதலால் கங்கும் நுனியும் முரிந்து கொல்லனது கொட்டிலில்
கிடக்கின்றன. செல்வம் உண்டானபோது பிறர்க்கெல்லாம்
உணவு தந்து, செல்வம் இல்லாதபோது உள்ளதனைப் பலரோடு
சேர்ந்து உண்ணும் வறுமைப்பட்டவர்களின்
சுற்றத்திற்குத்
தலைவனாகிய எம் வேந்தனின் கூரிய
நுனியையுடைய வேலும்
கொல்லன் உலையை விரும்பிற்று” என்பது
இப்பாட்டின்
கருத்தாகும்.
உண்டாயிற் பதங்கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
(பதம் = உணவு ; ஒக்கல்
= சுற்றத்தார்)
என அதியமான் புகழப் பெற்றுள்ளான்.
பாட்டின் திணை, துறை விளக்கம்
இப்பாட்டின் திணை பாடாண்.
அதியமானின் பெருவீரம்
அவனுடைய போர்க் கருவிகள்
எப்போதும் கொல்லன்
உலைக்களத்தில் கிடக்கின்றன என்பதால் அறியப்படும். அவன்
இல்லோர் ஒக்கல் தலைவன் என்றதால்
அவன் கொடை
மேம்பாடு அறியப்படும். இவ்வாறு அதியனின் பண்பு மேம்பாடு
குறித்தமையால் இப்பாட்டுப் பாடாண் ஆயிற்று.
இப்பாட்டின்
துறை வாண்மங்கலம் (வாள்மங்கலம்). தலைவனின் வாள் அல்லது போர்க் கருவிகளின்
பெருமை கூறுவது இத்துறை. என் தலைவனின் வேல், வீரச்செயல் புரிந்து கொல்லனின்
கொட்டிலில் கிடக்கிறது எனப் போர்க் கருவியின் பெருமை கூறப்பட்டதால் இப்பாட்டு
வாண்மங்கலம் என்னும் துறை ஆயிற்று.
அதியமான்
சிறப்பு
தொண்டைமானின் போர்க்கருவிகளைப்
பார்த்து “இவை
மயில்தோகை யணிந்து மாலை சூட்டிக் காம்புகள் திருத்தப்பட்டு,
நெய்பூசிக் காவல் மிக்க இடத்தில் வைக்கப்பட்டுள்ளன” என்று
கூறுவது பாராட்டுப் போன்று தோன்றினாலும், ”இவை போரின்
கண் ஈடுபடுத்தப்படாமல், காட்சிப் பொருளாக
வைக்கப்
பட்டுள்ளன. இவற்றால் வரும் பெருமை
யாது?” எனக்
கேட்பதுபோல் தோன்றுகின்றது. எனவே இது புகழ்ச்சி
அன்று
இகழ்ச்சி என்பது புரியும்.
அதியமானின் போர்க் கருவிகள்,
பகைவரைக் குத்திக்கங்கும்
நுனியும் முரிந்தன; அவை இப்போது கொல்லனின் கொட்டிலில்
கிடக்கின்றன என்றமையால் அவன் இடையறாது போர் செய்யும்
வீரன் என்பது உணர்த்தப்பட்டது.
அதியனிடம் நல்ல
போர்க்கருவிகள் இல்லை எனப் பழிப்பது போலத் தோன்றினும்,
அவன் வீரத்தைப் புகழ்வதாக உள்ளது.
|