2.4 நூற்று அறுபத்து நான்காம் பாட்டு

நூற்று அறுபத்து நான்காம் புறப்பாட்டு காட்டிலிருந்த குமணனைக் கண்டு பரிசில் வேண்டிப் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் பாடியது. புலவரின் வறுமை நிலை, குமண வள்ளலின் கொடைத்திறம் ஆகியவற்றை இப்பாடல் காட்டுகின்றது.

நிற்படர்ந்திசினே நற்போர்க் குமண

குமணனின் தம்பி இளங்குமணன் குமணனிடமிருந்து நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். குமணன் காட்டில் சென்று வாழ்ந்தான். அந்நிலையில் புலவர் பெருந்தலைச் சாத்தனார் தம் வறுமையைப் போக்கிக் கொள்ளக் காட்டிலுள்ள குமணனிடம் வருகின்றார். குமணனிடம் தன் வறுமைக் கொடுமையைப் படம் பிடிக்கிறார். "பாலின்றி அழும் குழந்தை; அதனைக் கண்டு துயர் உறும் என் மனைவி; இவர்களைக் காணும்போது இந்த வருத்தம் தீர்த்தற்கு உரியவன் நீயே என எண்ணி வந்தேன்" என்கிறார். "உன்னிடம் நான் பரிசில் கொள்ளாமல் விடமாட்டேன்" என்றும் கூறுகிறார்.

2.4.1 பாட்டும் கருத்தும்

ஆடுநனி மறந்த கோடுயர் அடுப்பின் எனத் தொடங்கும் இப்பாட்டு பதின்மூன்றடிகளைக் கொண்டது. இப்பாட்டின் கருத்து வருமாறு:

“சமையலை அறவே மறந்த அடுப்பு; அதன் பக்கங்கள் ஓங்கி மேடாக உள்ளன. அங்குச் சமையல் நடைபெறாததால் காளான் பூத்துக் கிடக்கின்றது. குழந்தை பசியால் வருந்துகின்றது. என் மனைவியின் மார்பு பாலி்ன்மையால் தோலாய்ச் சுருங்கி அதன் துளை தூர்ந்து வறுமைப்பட்டுக் கிடக்கின்றது. அம்மார்பகத்தைச் சுவைக்கும் குழந்தை பால் பெறாமையால் சுவைக்கும் போதெல்லாம் அழுகின்றது. அழும் குழந்தையைக் கண்ட என் மனைவியின் ஈரம் பொருந்திய இமைகளையுடைய குளிர்ந்த கண்கள் நீரால் நிறைகின்றன. இத்தகைய துன்பத்தைக் காணும்போது இதனைத் தீர்க்கக் கூடியவன் நீயென்று நினைத்து உன்னிடம் வந்தேன். பலவகையான பண்களையும் எழுப்பி இசைத்தற்குரிய நரம்பினை உடையதும் தோலால் போர்க்கப்பட்டதுமாகிய நல்ல யாழையும், கரிய மண் பூசப் பெற்ற மத்தளத்தையும் கொண்ட கூத்தருடைய வறுமையைப் போக்கும் குடியில் நீ பிறந்தவன். எனவே வறுமையுற்று நிற்கும் நான் உன்னை வளைத்தாவது பரிசில் பெறாமல் போக மாட்டேன்”.

இப்பாடல் புலவரின் வறுமையைத் தெளிவாக உணர்த்துகிறது.

பாட்டின் திணை, துறை விளக்கம்

இப்பாட்டின் திணை பாடாண். குமணன் இன்மை தீர்க்கும் குடிப்பிறந்தவன்; புலவர்களின் வறுமை துடைக்கும் கொடையாளி என அவ்வள்ளலின் கொடைச் சிறப்புக் கூறியதால் இது பாடாண் ஆயிற்று. இதன் துறை பரிசில் கடாநிலை. விளக்கம் முன்னர்க் கூறப்பட்டது. குமணனிடம் பரிசில் வேண்டியமையின் இப்பாடல் இத்துறை பெற்றது.