4.5 பெருஞ்சாத்தன் (242ஆம் பாட்டு)

242ஆம் பாட்டு இளையோர் சூடார் எனத் தொடங்குவது; ஆறடிகளை உடையது. இப்பாட்டு ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் குறித்துக் குடவாயிற் கீரத்தனாரால் பாடப் பெற்றது.

பாட்டின் சூழல்

ஒல்லையூர் கிழான் என்பானின் மகன் பெருஞ்சாத்தன். இவன் பெருங் கொடையாளி; ஆண்மை மிக்க போர்வீரன். இவன் இறந்து பட்டபோது ஊரே துயரம் கொண்டது. இந்தச் சூழலில் குடவாயிற் கீரத்தனார் முல்லைப் பூவைப் பார்த்துப் பாடுவது போலச் சாத்தன் இறந்த அவலத்தைப் பாட்டாக வடித்துள்ளார்.

4.5.1 பாட்டின் கருத்து

குடவாயிற் கீரத்தனார் சாத்தன் இறந்தமை குறித்து நாடு உற்ற துயரைக் கீழ் வருமாறு காட்டுகின்றார். “முல்லைப் பூவே! உன்னை இன்று இளையவர்கள் சூட மாட்டார்கள்; வளையணிந்த மகளிரும் இன்று உன்னைப் பறிக்க மாட்டார்கள்; யாழின் கோட்டினாலே பாணன் கொடியை வளைத்து உன்னைப் பறித்துச் சூடமாட்டான்; பாடினியும் உன்னை அணிய மாட்டாள். தனது ஆண்மை வெளிப்படப் பகைவரை எதிர்நின்று வென்ற வன்மை மிக்க வேலைக் கொண்ட சாத்தன் இறந்த பிறகு ஒல்லையூர் நாட்டில் முல்லை மலரே ! நீ மட்டும் ஏன் பூத்தாய்?"

குடவாயிற் கீரத்தனாரின் அவலம்

முல்லை ஒவ்வொரு நாளும் பூக்கிறது. அதற்கு இன்ப துன்பமில்லை. ஆனால் நாட்டில் உள்ளவர்கள் சாத்தன் இறப்பால் துயருற்றனர். கீரத்தனார் தாமும் துயருற்றார்.

வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே

என்று கேட்டார் புலவர். நாடு முழுவதும் துயருற்றிருக்கும் போது நீ ஏன் மலர்ந்தாய் என்பது புலவர் வினா. அஃறிணைப் பொருளைப் பார்த்து இவ்வாறு கேட்பது ஓர் இலக்கிய மரபு. “நகுவை போலக் காட்டல் தகுமோ மற்றிது தமியோர் மாட்டே” என்று குறுந்தொகை (162)யில் தலைவன் முல்லைப் பூவைப் பார்த்துக் கேட்கின்றான். 'தனித்திருக்கின்றவர்களைப் பார்த்து முல்லை மலரே! சிரிப்பதுபோல மலர்தல் தகுமா' என்பது இதன் பொருள்.