4.7 மனைவி இறந்த துயர் (245ஆம் பாட்டு) 245ஆம் பாட்டு யாங்குப் பெரிதாயினும் எனத் தொடங்குவது; ஏழடிகளை உடையது. இப்பாட்டைப் பாடியவர் சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை என்பவர். சேரமான் மாக்கோதை சேர நாட்டை ஆண்ட அரசன். தன் மனைவி இறந்துபட்ட நிலையில் இச்சேரன் அழுது புலம்பி ஆற்றாமல் பாடிய பாட்டு இது. மனைவி இறந்து அவளைத் தீப்படுத்திய சூழலில், அவளைப் பிரிந்து வாழ முடியாத பெருந்துயரச் சூழலில் சேரமான் அரிய இப்பாட்டைப் பாடியுள்ளான். 4.7.1 பாட்டின் கருத்து “எவ்வளவு பெரியதாக இருந்தாலும் என் துன்பத்தின் எல்லை என்பது எது? என் உயிரைப் போக்கிவிடக் கூடிய வலிமை என் துன்பத்திற்கு இல்லாது போயிற்று. கள்ளிச் செடிகள் வளர்ந்த ஊர்ப்புறக் காட்டில் வெட்ட வெளிக்கண் தீ மூட்டப்பட்டது; சிறிய விறகைக் கொண்ட படுக்கையில் ஒளி பொருந்திய தீப்பரவுமாறு செய்யப் பெற்றது; என் மனைவி மேலுலகம் போய்விட்டாள். அவள் இறந்த பிறகும் நான் உயிரோடு கூடி வாழ்கின்றேன். இவ்வுலகப் பண்பு இவ்வாறு இருக்கின்றதே!” என்பது பாட்டின் கருத்து. சங்க காலத்தில் கணவன் இறந்தபின் அவனோடு உயிர் துறந்த பெண்ணைக் குறித்துச் செய்தி உள்ளது. கணவன் இறந்த பின் கைம்மை நோன்பு ஏற்ற மகளிரைப் பற்றிய செய்தியும் உண்டு. இப்பாட்டு, மனைவி இறந்த பின்னும் இருக்கின்றேனே எனப் புலம்பும் ஒரு கணவனைக் காட்டுகிறது. இதனைப் பாடிய மாக்கோதை ‘என் உயிர் போகவில்லையே’ என வருந்துகின்றான். அரசக் குடியிற் பிறந்தவன் இவ்வாறு வருந்துவது எண்ணத் தக்கது. மனைவியிடத்து மாளாக் காதல் கொண்ட மாக்கோதையின் மாண்பைக் கூறுவது இப்பாட்டு. |