5.1 பதிற்றுப்பத்தின் ஐந்தாம்
பத்து
பதிற்றுப்பத்தின்
ஐந்தாம் பத்து, பரணரால் செங்குட்டுவன் மீது பாடப்பெற்றது என்பதை முன்னர்க்
கண்டோம். பரணர் சங்க காலப் புலவர்களில் புகழ் மிக்கவர். சங்க இலக்கியங்களில்
இவர் எண்பத்தாறு பாடல்களைப் பாடியுள்ளார். இவருடைய பாடல்களில் வரலாற்றுக்
குறிப்புகள் மிகுதியாக இடம் பெறும்.
இப்பாட்டின் தலைவன்
கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்.
இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மகன். மேற்குக் கடலில் வணிகக் கப்பல்களைக்
கொள்ளையடித்துத் தொல்லை செய்து வந்தனர் கடற்கொள்ளையர்கள். இவர்களைத் தன்
கப்பல் படை கொண்டு அடக்கி வெற்றி பெற்றான். இதனால், இவன் கடல் பிறக்கோட்டிய
என்ற சிறப்புப் பெயரைப் பெற்றான். இப்பத்துப் பாடல்களில் பரணர் செங்குட்டுவனின்
வீரம், கொடை ஆகிய இருபெரும் பண்புகளைப் போற்றுகிறார்.
5.1.1
ஐந்தாம் பத்தின் பதிகம்
பதிகம் என்பது
முன்னுரை என்று அறிவீர்கள். பதிற்றுப் பத்தின் ஒவ்வொரு பத்துக்கும் ஒரு பதிகம்
உள்ளது. இப்பதிகம் பாட்டுடைத் தலைவனைப் பற்றிய செய்திகளைக் கூறுவது. பாடல்களில்
இல்லாத செய்திகளும் இப்பதிகத்தில் இடம்பெறக் காணலாம். ஐந்தாம் பத்தின் பதிகம்
“செங்குட்டுவன், நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் மணக்கிள்ளியின் மகளுக்கும் பிறந்தவன்.
கண்ணகியைத் தெய்வச் சிலையாக வடித்தற்குரிய கல்லைக் கொண்டு வருவதற்காக இமயம்
சென்றவன். வடவாரிய மன்னரை வென்றவன். பழையன் என்ற குறுநில மன்னனின் காவல்
மரமாகிய வேம்பினைத் துண்டுகளாக ஆக்கிப் பகை வேந்தனின் உரிமை மகளிர் கூந்தலைக்
கயிறாக்கி யானைகளைக் கொண்டு இழுத்து வந்தவன்” என்று கூறுகின்றது. கண்ணகி
சிலைக்குரிய கல்லெடுத்து வந்த செய்தி உள்ளே இருக்கும் பத்துப் பாடல்களிலும்
இல்லை என்பது குறிக்கத்தக்கது. அந்நிகழ்ச்சி பதிற்றுப்பத்துப் பாடிய தன்
பின் நிகழ்ந்திருக்கலாம் என்பர் அறிஞர்.
|