5.2 முதல் பாட்டும் இரண்டாம் பாட்டும்
பதிற்றுப் பத்தின்
ஐந்தாம் பத்திலுள்ள சுடர்வீ
வேங்கை மற்றும் தசும்பு துளங்கிருக்கை
எனும் முதல் இரண்டு பாடல்களைப் பற்றிய செய்திகளைப் பார்க்கலாம்.
5.2.1
சுடர்வீ வேங்கை (முதல் பாட்டு)
பதிற்றுப்பத்தின்
ஒவ்வொரு பாட்டுக்கும், அப்பாட்டில் இடம் பெறும் அழகிய ஓர் அரிய தொடரே பெயராக
வைக்கப் பெற்றுள்ளது. பத்துப் பாட்டில் மலைபடுகடாம்
என்னும் பாட்டும் இம்முறையில் பெயர் பெற்றது. கவிதையைச் சுவைப்பதிலும், கவிதைத்
தன்மை மிக்க கற்பனைகளைப் போற்றுவதிலும் தமிழர்களுக்கு அந்நாளில் இருந்த ஈடுபாட்டைக்
காட்டும் அடையாளங்களே இவை. சுடர்வீ வேங்கை என்பதற்கு ‘ஒளிச் சுடர்கள் ஏற்றியது
போன்ற பூக்கள் கொண்ட வேங்கை மரம்’ என்பது பொருளாகும்.
பாட்டின் கருத்து
''இசையை எழுப்புவதற்குரிய நரம்புகள்
கட்டப் பெற்ற
வளைந்த கோட்டை உடைய யாழை இளைய மகளிர்
சுமந்து
வருவர். பண்ணோடு பொருந்திய முழவு,
ஒரு கண்ணை
உடைய மாக்கிணை, மற்றும் ஆடல்
துறைக்கு உரியதும்,
கணுவை இடைவிட்டு மூங்கிலால் அறுத்துச் செய்யப்பட்டதுமான
பெருவங்கியம் (பிற இசைக் கருவிகள்) ஆகிய இவற்றையெல்லாம்
ஒரு சேரக் கட்டி மூட்டையாக்குவர். அம்மூட்டையைத் தோளில்
தொங்கும் காவடியில் ஒரு பக்கத்தில்
கட்டி, அதை இளைஞர்கள்
தூக்கிக் கொண்டு அச்சம் மிக்க காட்டு வழியில்
என்னோடு
நடந்து வருவர்.
நடைவருத்தம் மறப்பதற்காக அவர்கள்
கடவுளை வாழ்த்திக்
குரல் எழுப்புவர். அந்த ஓசை புலியின் உறுமல் போல் கேட்கும்.
அதைக் கேட்டு அங்குள்ள வலிமை மிக்க
யானை, ஏற்றிய
சுடர்கள் போல ஒளி வீசும் பூக்களை உடைய
வேங்கை மரத்தை
வீரம் மிக்க புலியின் தோற்றம் என்று தவறாகக்
கருதிச் சினம்
கொள்ளும்; வேங்கை மரத்தின் கிளையை வளைத்துப் பிடித்துப்
பிளக்கும்; அதனைத் தன் தலையிலே அணிந்து கொள்ளும்.
பகைவர் மீது போர் கருதிச்
செல்லும் வீரர் கையில்
தண்டாயுதத்தைத் தாங்கி ஆரவாரிப்பது போல அந்த
யானை
பேரோசை எழுப்பும். அந்த ஓசை
சுரபுன்னை மரம் நிறைந்த
காடு முழுவதும் கேட்கும்.
மழை இல்லாமையால் பசையற்றுக் காய்ந்த மூங்கில்கள் உள்ள
வழிகள் பல. அவற்றைக்
கடந்து திண்மை மிக்க தேர்களையும்
நல்ல புகழையும் கொண்ட உன்னைக் காண வந்தேன்.
பகைவரை வெல்வதாக உன்னுடன்
சேர்ந்து வஞ்சினம் (சபதம்) கூறியவர்கள் உன் படை வீரர்கள். அதைத் தவறாது முடித்த
வாய்மை மிக்கவர்கள் அவர்கள். அவர்களோடு சென்று முரசு முழங்கும் போரில் பகை
அரசர் வீழ்ந்து படுமாறு போர் செய்தாய். நட்புக் கொண்ட அரசர் ஆக்கம் பெறச்
செய்தாய். பகைவருடைய தலைகளை உலக்கையால் மிளகை இடிப்பதைப் போல் நீ ஏந்திய
தோமரத்தால் (மரத்தால் ஆன ஆயுதம்) இடித்து அழித்தாய். முழங்குகின்ற கடல் போல
உன் முரசு குறுந்தடியால் அடிக்கப்பட்டு முழங்கும். தலையாட்டம் என்னும் அணியை
அணிந்த வெள்ளைக் குதிரை மீது ஏறி வருபவன் நீ. கடலின் அலைகள் திவலைகளாக (துளிகளாக)
உடைந்து போகுமாறு நடந்து சென்று போர் செய்து வருந்தின உன் கால்கள். அக்கால்கள்
தாம் கொண்ட வருத்தத்தை நீங்குமா? சொல்வாயாக.
இசைக்கருவிகளை எல்லாம் இளைஞர் சுமந்துவர நான் காடு
பல கடந்து உன்னைக் காண வந்தேன். அதற்கே என் கால்கள்
வருந்தினவே! கடலில் சலியாது போர் செய்த உன் கால்கள் மிக
வருந்தியிருக்குமே'' என்று பாணன் ஒருவன் கேட்பது போல்
புலவர் இப்பாடலைப் பாடியுள்ளார்.
மழைபெயல் மாறிய கழைதிரங்கு அத்தம்
ஒன்றுஇரண்டு அலபல கழிந்து
(கழை
= மூங்கில்; திரங்கு
= காய்ந்து வற்றிய; அத்தம்
= வழி)
பாணன் கடந்து வந்த பாலை
வழிகள் பல. அவற்றின்
கொடுமையை ஒரே வரியில் அழகாகக் கூறுவது எண்ணத்தக்கது.
பாட்டின் துறை முதலியன
பதிற்றுப்பத்தின்
பாட்டு ஒவ்வொன்றுக்கும் உரியனவாகத் துறை, வண்ணம்,
தூக்கு, பெயர் ஆகிய நான்கும் கூறப்படும்.
இப்பாட்டுக்கு அவை வருமாறு:
துறை : காட்சி
வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வண்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : சுடர்வீ வேங்கை
காட்சி
வாழ்த்து என்பது அரசனை நேரிற் கண்டு வாழ்த்துதல். வண்ணம் என்பது
பாட்டின் ஓசை நயம். ஒழுகு வண்ணம் என்பது
ஆற்றின் ஓட்டம் போன்ற ஓசை. தூக்கு என்பது பாட்டு என்னும் பொருளுடையது.
செந்தூக்கு என்பது ஆசிரியப்பாவாகும். பாட்டின்
பெயர் சுடர்வீ வேங்கை.
ஏற்றி வைத்த சுடர்கள்
போல ஒளி வீசும் மலர்களை உடைய வேங்கை என்ற அழகான கற்பனையைக் கொண்ட தொடராக
இருப்பதால், இது பாட்டுக்கு உரிய தலைப்பாகச் சூட்டப்பட்டது.
5.2.2
தசும்பு துளங்கிருக்கை (இரண்டாம் பாட்டு)
தசும்பு
துளங்கிருக்கை என்பது இப்பாட்டின் பெயர். கள்குடங்கள் வைக்கப்பெற்ற
அசைகின்ற இருக்கை என்பது பொருள்.
கள் நிரம்பிய
மிகப் பெரிய குடங்கள் உருண்டு விடாதபடி அவற்றை ஓர் இருக்கையில் வைப்பார்கள்.
வீரர்கள் மீண்டும் மீண்டும் குடங்களிலிருந்து முகந்து கள்ளை உண்பார்கள்.
அதனால் கள் உண்டவர்கள் மயக்கத்தால் ஆடுவது போலவே கள் கொண்ட குடங்களும் ஆடும்.
இந்த இருக்கை கள் குடத்தின் ஆடல் மேடை போல் தோன்றும். அதுவும் சேர்ந்து ஆடும்.
வெற்றிக் களிப்பில் வீரர் அனைவரும் கூத்தாடும் போது, குடமும் இருக்கையும்
ஆகிய உயிர் இல்லாத அஃறிணைப் பொருள்கள் கூட மகிழ்ந்து ஆடும் என்னும் அழகிய
நயம் தோன்ற இத்தொடர் அமைந்துள்ளது. அழகிய கற்பனையைக் கொண்ட இத்தொடர் பாடலில்
உள்ளதால் அதுவே, பாடலின் பெயர் ஆகச் சூட்டப்பட்டுள்ளது.
பாட்டின் கருத்து
''கருமையான பனம்பூ
மாலையையும் பொன்னாலான வீரக் கழலையும் சூடிய அஞ்சாத வீரர்கள் மார்பில் வீரத்
தழும்பு கொண்டிருப்பர். இதுவே விழுப்புண் எனப்படும். குளத்தில் மீனைப் பிடிக்கப்
பாய்ந்து மேலே எழும் சிரல் என்னும் மீன்கொத்திப் பறவையின் அலகைப் போன்ற நீண்ட
வெண்மையான ஊசியால் தைக்கப்பட்ட விழுப்புண்களால் உண்டானவை அத்தழும்புகள்.
அத்தகைய வீரர்கள் தம்மைப் போல மார்பில் புண்பட்ட வீரனோடு மட்டுமே தும்பைப்
பூச்சூடிப் போர் புரிவர்; மற்றவர்கள் தமக்கு இணையான வீரர்களாய் இருந்தால்
தும்பை சூடாமல் போர் செய்வர். இத்தகைய வீரர்களுக்குத் தலைவனே! நல்ல நெற்றியை
உடைய இருங்கோ வேண்மாளுக்குக் (அரசிக்கு)
கணவனே! பெரிய யானைகளையும் வெல்லுகின்ற போரையும் கொண்ட செங்குட்டுவனே!
வலிமை மிக்க போர்களில்
வெற்றி பெற்றபின், இஞ்சியையும்
மணமிக்க மலர்களையும் கலந்து தொடுத்த மாலை
சூட்டிய
சந்தனம் பூசிய
கள்ளின் குடங்களிலிருந்து வீரர்களுக்கும்
வெற்றியைப் பாடும் கூத்தர்களுக்கும்
அளவின்றிக் கள்ளை
அளிப்பாய். அக்கள் இனிய சுவையுடையது; நீலமணி போன்றது.
அக்கள் இருக்கும் குடங்கள் ஆடும். அதனால் இருக்கையும்
ஆடும். கூத்தர்களின் சுற்றத்தார் மகிழுமாறு
நீ அவர்களுக்குத்
தலையாட்டம் அணிந்த குதிரைகள் பலவற்றைப்
பரிசிலாகக்
கொடுத்தாய்.
உலகம் அஞ்சும்படியாகப் பல அரசர்களை வென்ற பின், இனி
வெல்லுதற்கு யார் உள்ளார் என உன்
வீரர்கள் உலகமெலாம்
செல்லவும், உன் தேர் வீரர்களும், யானைமேல்
ஊர்ந்து வரும்
அரசரும் உன்னைப்
பாராட்டவும், உன்னால் துரத்தி
அடிக்கப்பட்ட கடலின் பெரிய நீர்ப்பரப்பில்,
நுரையாகிய
வெள்ளைத் தலைகளைக் கொண்ட நீர்த்துளிகள்
உடைந்து
சிதறும்படி, மேலும் மேலும் வந்து மோதும் கடல் அலைகளை
விட எண்ணிக்கையில் அதிகமான குதிரைகளை அல்லவா நீ
இரவலர்க்கு வழங்கியுள்ளாய்!''
இவ்வாறு செங்குட்டுவனின்
படை வீரத்தையும், கொடைத் திறத்தையும் பரணர் புகழ்கிறார்.
எண்ணிக்கை மிகுதிக்கு, கடலின்
அலைகளை உவமை
காட்டுவது சிறப்பாக உள்ளது அல்லவா? பிடரி மயிர்
சிலிர்த்துக்
குதித்து ஓடிவரும் குதிரைகளுக்கு நுரைபொங்கக்
குதித்து வரும்
கடல் அலைகளை உவமையாகும்படி,
குறிப்பாகப் பாடி
இருப்பதும் சிறந்த கற்பனை அல்லவா?
பாட்டின் துறை முதலியன
இப்பாட்டின் துறை
செந்துறைப் பாடாண் பாட்டு. செந்துறைப்
பாடாண் என்பது தேவர்களை வாழ்த்தித் தொழுதல் போல் இல்லாமல் இயல்பாக மக்களைப்
போற்றுவது போல் புகழ்தல். வண்ணமும் தூக்கும் முன்பாட்டுக்குக் கூறிய அவையேயாம்.
பாட்டின் பெயர் தசும்பு துளங்கிருக்கை.
|