5.3 மூன்றாம் பாட்டும் நான்காம் பாட்டும்

ஏறாஏணி என்ற பாடலும், நோய்தபு நோன்தொடை என்ற பாடலும் முறையே மூன்றாம் நான்காம் பாடல்களாக உள்ளன. அவை பற்றிய செய்திகள் கீழே கூறப்படுகின்றன.

5.3.1 ஏறா ஏணி (மூன்றாம் பாட்டு)

கோக்காலி என்பது பொதுவாக ஏறுவதற்குப் பயன்படும் பெரிய உயர்ந்த நாற்காலி போன்ற ஏணி ஆகும். ஆனால் இந்தக் கோக்காலி ஏறுவதற்குப் பயன்படாமல் கள்குடம் வைக்கும் இருக்கையாய்ப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இது ஏறா ஏணி என்று நயமாகக் குறிப்பிடப்படுகிறது. அதுவே பாடலின் பெயராக அமைந்தது.

பாட்டின் கருத்து

''கவரிமானின் முடியைத் தம் மேகம் போன்ற கூந்தலில் கலந்து முடித்த கொண்டையினையும் ஊஞ்சலாடும் விருப்பத்தையும் உடைய, அணிகளை அணிந்த மகளிர் இமயமலைச் சாரலில் வாழ்கின்றனர். அவர்கள் காட்டில் யானைகள் செல்லுதலைக் காண்பர். உரல் போன்ற பெரிய காலையும், ஒளிமிக்க தந்தத்தையும் பெரிய கையையும் உடைய ஆண் யானைகளுடன் புதிதாக வந்த பெண் யானைகள் எத்தனை என அவர்கள் எண்ண முயல்வர். பின்பு அவை எண்ணிக்கைக்கு அடங்காமையால், எண்ணுவதைக் கைவிடுவர். அத்தகைய காடுகளில் கடவுளர் தங்கும் இடங்கள் இருக்கும். அத்தகு இடங்களைக் கொண்ட இமயமலையை வடக்கு எல்லையாகவும், குமரி முனையைத் தெற்கு எல்லையாகவும் கொண்ட அகன்ற நிலப்பகுதியில் ஆட்சி செய்த பகையரசர்களின் புகழ் மிக்க பல நாடுகளையும் வென்று, அவற்றின் நலத்தைக் கெடுத்தவனே! போரில் எப்போதும் வெல்கின்ற படையைக் கொண்ட, பொன்னாலாகிய மாலை அணிந்த குட்டுவனே!

பெரிய மழை பெய்யாமல் போவதால் காட்டில் உள்ள மூங்கில்கள் வாடி உலரும்; குன்றுகள் எல்லாம் பசும்புல் இல்லாமல் கெடும்; சூரியனின் வெயில் மிகுதியாய்த் தோன்றும்; அருவிகள் நீரற்றுக் கிடக்கும். இத்தகைய வறண்ட காலத்திலும் வற்றாத உன் பேரியாற்றில் கரைகள் உடைந்து நீர் ஓடும்படியாகவும், புதிய ஏரைப் பூட்டி உழுகின்ற உழவர்கள் கொன்றைப் பூவைச் சூடி மகிழும்படியாகவும், முழங்கும் மேகம் இடித்து மழையை மிகுதியும் பெய்தது போல, நீ உன்னை அடைந்த வறியவர்களுக்கு வாரி வழங்குவாய். அவர்களை உண்ணச் செய்து நீயும் உடன் உண்பாய். பாணர், கூத்தர் முதலானோர் மகிழ்ச்சி பெறப் பொன்னை அளவு இல்லாமல் கொடுப்பாய்.

அசைகின்ற சிறகைக் கொண்ட கின்னரப் பறவையின் இனிய இசையை வென்ற யாழின் இசையோடு ஒத்த குரலை உடைய விறலியர்க்குப் பல பெண் யானைகளைப் பரிசாகத் தருவாய். துய்யினை உடைய வாகைப் பூவை மேலே வைத்து, நுண்ணிய கொடியில் பூத்த உழிஞைப் பூவைச் சூடுகின்ற வெற்றி வீரர்கள் பெற்று மகிழ, கொல்லும் தொழிலையுடைய ஆண் யானைகளைப் பரிசிலாக அளிப்பாய். கணுக்களைக் கொண்ட நுண்ணிய கோலை ஏந்திச் சென்று தெருக்களில் உன் குலத்தைப் புகழ்ந்து வெற்றியை வாழ்த்திப் பாடும் பாணன் பெறுமாறு குதிரைகளைத் தருவாய். இவ்வாறு நீ கொடைத் தொழிலையும் போர்த் தொழிலையும் சமமாக விரும்பியிருக்கின்றாய். பகைவராலும் புகழப்படும் நல்ல கல்வி அறிவு ஒழுக்கங்களை நீ பெற்றுள்ளாய்.

வள்ளல் தன்மை மிகுந்த கையை உடையவனே! தூங்கலோசை உடைய பாட்டிற்குப் பொருந்த முழவு இசை முழங்குகிறது. உண்ணுதற்குரிய இறைச்சியைச் சுடும் புகை நாற்றமும், வெப்பமும் நீங்காமல் உள்ளன. நிரம்புதலும் குறைதலும் அறியாத கள் குடங்கள் கோக்காலியில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் கள் நிரம்பி நெடுநேரம் இருப்பதில்லை. வீரர்கள் முகந்து பருகிக் கொண்டே இருக்கின்றனர். அவை மீண்டும் நிரப்பப்படுவதால் குறைந்தும் நெடுநேரம் இருப்பதில்லை. ஏறாத ஏணியில் கள்ளின் மட்டம் மட்டும் எப்படித்தான் ஏறுகின்றதோ? இவ்வாறு விளங்கும் உன் செல்வப் பெருமையெல்லாம் கண்டேன். மகிழ்ச்சிப் பெருக்கைக் கண்டேன்.''

இவ்வாறு குட்டுவனை வாழ்த்துகிறார் பரணர்.

பாட்டின் துறை முதலியன

இப்பாட்டின் துறை இயன்மொழி வாழ்த்து. இயன்மொழி வாழ்த்து என்பது கொடை முதலான இயல்புகளைக் கூறி வாழ்த்துதல். வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குரிய ஒழுகு வண்ணமும் செந்தூக்கும். பாட்டின் பெயர் ஏறா ஏணி.

5.3.2 நோய்தபு நோன்தொடை (நான்காம் பாட்டு)

இப்பாட்டின் பெயர் நோய்தபு நோன்தொடை. இதன் பொருள் நோயில்லாத ஆற்றல் மிக்க உடம்பு என்பதாம். சேரனின் உடல் வலிமை, அழகு, நலம் இவற்றை மிகச் சிறிய தொடரால் வாழ்த்தியமையால் இப்பாட்டு இப்பெயர் பெற்றது.

பாட்டின் கருத்து

''நிலத்தை இடிப்பது போன்ற முழக்கத்தோடு, வானத்தைத் தடவுவது போல் உயர்ந்த கொடி தேரில் அசையப் பல போர்களைச் செய்தாய். அப்போர்களில் வென்று பெற்ற பொருள்கள் அரியவை; பெரியவை. ஆனாலும் தனக்கென்று எடுத்துக் கொள்ளாமல் பிறர்க்குக் குறையாமல் வாரி வழங்குபவனே! கனவிலும் பிறரிடம் சென்று என் துன்பம் நீக்குக என்று கேளாதவனே! குற்றமற்ற நெஞ்சத்தையும் பெருமிதமான நடையையும் உடைய தலைவனே!

நுண்ணிய கொடியாகிய உழிஞையின் பூவைச் சூடும் முற்றுகைப் போரில் வல்லவன் அறுகை என்பவன். ஆனால், அவன் மோகூரில் உள்ள பழையன் என்பவனுக்கு அஞ்சி ஓடி ஒளிந்தான். நெடுந்தொலைவில் இருந்தாலும் அறுகை உன்னைத் தன் நண்பன் என்று பலரும் அறியச் சொன்னவன். அதனால் அவனுக்கு உதவ வேண்டி மோகூர் மன்னனாகிய பழையன் என்பவனுடைய அரண்களைத் தெய்வத்தால் அழிக்கப்பட்ட இடம் போல் அழித்தாய். அவன் காவல் முரசைக் கைப்பற்றி அவன் கூறிய வஞ்சினத்தைச் சிதைத்தாய். அவனுடைய காவல் மரமாகிய வேம்பை வெட்டி வீழ்த்தி முரசு செய்வதற்குரிய துண்டுகளாக ஆக்கி வண்டியில் ஏற்றி யானைகளைக் கொண்டு இழுக்கச் செய்தாய். வீரர்கள் வியந்து புகழ்ந்து போற்றும் நோயற்ற உன் வலிமை மிக்க உடம்பை உன்னைப் பாடும் பாடினி கண்டு வாழ்த்திப் பாடுவாளாக.

பசுமையானதும் கொழுப்பற்றதுமான இறைச்சித் துண்டை வைத்த இடத்தை மறந்து விட்ட உச்சிக் கொண்டையை உடைய கோட்டான், கவலையோடு பிற கோட்டான்களையும் வருத்தக் கூவும் இடுகாடு; அங்கு அரசர் பலரை வென்று இவ்வுலகை ஆண்ட மன்னர் பலர் தாழியிலே இடப்பட்டு வன்னி மரத்தின் நிழலை உடைய இடுகாட்டு மன்றத்திலே புதைக்கப்பட்டனர். நோயற்ற உன் உடம்பினை அந்தத் தாழியாகிய மட்குடம் காணாது நீங்குவதாக. அதாவது, என்றும் நீ இறவாது நீடு வாழ்வாயாக'' என்று பரணர் பாடியுள்ளார்.

அறுகை என்ற குறுநில மன்னனுக்காகச் செங்குட்டுவன் பழையன் மீது படையெடுத்து அவன் அரண்களை அழித்தான் என்ற வரலாற்றுக் குறிப்பு இப்பாட்டால் கூறப்பட்டது.

தபு என்றால் கொல்லும் என்று பொருள். நோய்தபு வன்மையான உடம்பு என்றால், நோயையே கொன்று வெற்றி கொள்ளும் வலிமை மிக்க உடம்பு என்றும் பொருள் தருகிறது. மேலும், போர்செய்து பகைவரை வென்று அடையும் பொருளைக் கொடையாக ஈந்து, பரிசிலர்களாகிய எங்களின் பசி முதலிய நோய்களை அழிக்கும் வலிமை மிக்க உடம்பு என்றும் நயப்பொருள் தருகின்றது. இந்த அருமை மிக்க அழகிய தொடரைக் கொண்டுள்ளதால் இப்பாட்டுக்கு அது பெயராகிறது.

பாட்டின் துறை முதலியன

இப்பாட்டின் துறை செந்துறைப் பாடாண் பாட்டு. வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குரிய ஒழுகு வண்ணமும் செந்தூக்கும். இவற்றுக்குரிய விளக்கம் முன்னால் கூறப்பட்டது. பாட்டின் பெயர் நோய் தபு நோன்தொடை.