5.6 ஒன்பதாம் பாட்டும் பத்தாம் பாட்டும்
செங்கை
மறவர் என்ற பாடலைப் பற்றியும், வெருவரு
புனல்தார் என்ற பாடலைப் பற்றியும்
அடுத்துப் பார்ப்போம்.
5.6.1 செங்கை மறவர்
(ஒன்பதாம் பாட்டு)
இப்பாட்டின் பெயர்
செங்கை மறவர் என்பது. சிவந்த கையினையுடைய
மறவர் என்பது இதன் பொருள்.
பாட்டின் கருத்து
யானைகள் பரந்து செல்ல, விரைந்து செல்லும் குதிரைகள்
வீரர்களோடு அணியாகச் செல்ல, கொடியுடைய
தேர்கள்
சுழன்று செல்ல, வேற்படை வீரரைக்
கொண்ட காலாட்
படையினரும் வேந்தரும் குறுநில மன்னரும் ஒருங்கே சேர்ந்து
செல்ல, மிக்க வலிமையோடு மனம் செருக்கி வந்தான் மோகூர்ப்
பழையன். அவனுடைய படைத்திறன் சிதையுமாறு
தாக்கினர்
சேர வீரர்கள். பகைவரின் குருதியில் நனைந்ததனால் போர்
வீரர்களின் கைகள் சிவந்தன. வீரர்களின் மார்பிலிருந்து ஒழுகிய
குருதி மண்ணில் பாய்ந்து
மழைநீர்க் கலங்கலைப் போல்
பள்ளம் நோக்கிப் பாய்ந்தது. பகைவரின் பிணங்கள் குவியுமாறு
ஊர்கள் பலவற்றையும் பாழ் செய்தான் குட்டுவன். வெற்றி முரசு
முழங்கப் பழையனின் செல்வம் முழுவதும் கெட்டொழிய அங்கு
வாழ்ந்தோர் பலரையும் கொன்றான்.
கரிய கிளைகளைக்
கொண்ட காவல் மரமான வேம்பு குட்டுவனால் வீழ்த்தப்
பெற்றது.
சினமிக்க போர் செய்த குட்டுவனைக்
கண்டு வருவதற்காக
நாங்கள் போகிறோம். அசையும் கூந்தலையும்
ஆடும்
இயல்பையும் கொண்ட விறலியர்களே! நீங்களும் வாருங்கள்.
இசைப்பாட்டில் திறமை மிக்க உங்கள் சுற்றத்தார்
உடையும்
உணவும் பெறுவர்''. இவ்வாறு சேரன் கொடைச்
சிறப்பைப்
படைச் சிறப்போடு சேர்த்துப் புகழ்கிறார்
பரணர். அவன்
நாடுகளை வெல்வதே விறலியர் பாணர் போன்றவர்களுக்குப்
பரிசு வழங்குவதற்காகத்தான் என்கிறார்.
அள்ளி அள்ளிக் கொடுக்கும் வள்ளலின் கை சிவந்து போகும்
போதுதான் அதைச் செங்கை என்று பாராட்டுவது வழக்கம்.
இங்குச் சேர வீரரைச் செங்கை மறவர்
என்கிறார் பரணர்.
ஆனால் அவர்களது கை பகைவரின் இரத்தத்தால் செங்கை
ஆனது. நம் போன்ற கலைஞர்களுக்குப் பொன், பொருளை
வாரிக் கொடுப்பதற்காகப் போர் செய்ததால் அந்தக் கை அன்றே
சிவந்து - வள்ளலின் செங்கை ஆகிவிட்டது என்று நயமாகக்
குறிப்பு மொழியால் சொல்கிறார். இந்தப் பாடல் செங்கை
மறவர் என்று பெயர் பெற்றது ஏன் என்று புரிந்து கொண்டீர்கள்
அல்லவா?
பாட்டின் துறை முதலியன
இப்பாட்டின் துறை
விறலியாற்றுப்படை.
விறலி என்பவள் நடனம் ஆடுபவள். வேந்தனிடம் பரிசில் பெற்ற ஒருவன் விறலியை நோக்கி,
அவனிடம் சென்றால் இவ்வாறு நீயும் பரிசில் பெறலாமென்றும், எம்முடன் வந்தால்
இன்னது பெறலாமென்றும் கூறுவது விறலியாற்றுப்படை ஆகும். வண்ணமும் தூக்கும்
முந்திய பாட்டுக்குக் கூறப்பட்டனவே. பாட்டின் பெயர் செங்கை மறவர்.
5.6.2
வெருவரு புனல்தார் (பத்தாம் பாட்டு)
இப்பாட்டின் பெயர்
வெருவரு புனல்தார்.
அஞ்சத் தக்க காலாட் படையாகிய வெள்ளம் என்பது இதன் பொருள்.
பாட்டின் கருத்து
''பெரிய மலையிடத்தே மேகம் முழக்கம் செய்வதால் மான்
கூட்டம் அஞ்சும். காற்று அசைப்பதால் ஆலங்கட்டி
சிதறக்
கடுமழை பொழியும். கரும்பு வயல்களை
உடைய நாடுகள் வளம்
பெருகவும், வளம்
பொருந்திய உலகைப் பாதுகாக்கவும்
காவிரியாற்றின் வெள்ளம் நேர் கிழக்காக ஓடிவரும். அரசே! நீ
அக்காவிரி போன்றவன் மட்டுமல்லன். பூக்கள்
விரிந்த நீரைக்
கொண்ட மூன்று ஆறுகள் சேரும் இடமான முக்கூடலையும்
ஒத்தவன்.
கொல்லுகின்ற யானைகளாகிய பெரிய அலைகள் திரண்டு வர,
வலிமை மிக்க விற்படை அம்புகளை நீர்த்துளிகளாகச் சிதறி வர,
கேடயத்தின் மேலே மின்னும் வேல்கள் மீன்களாக விளங்க,
போர்ப்பறையோடு முரசொலி கலந்து வெள்ளத்தின் ஓசையாய்
முழங்க, அதனைக் கேட்டு அஞ்சிப் பணிகின்ற அரசர்களுக்குக்
காவலாகவும், எதிர்த்தவரை அழிக்கும்
பெரும் வெள்ளமாகவும்
உன் காலாட்படை பாய்ந்து செல்லும். படையாகிய
அந்த
வெள்ளம் கடலிலும் மலையிலும் பிற
இடத்திலும் உள்ள
பகைவர் அரண்களை அழித்து, அவர் நாட்டின் நிலப்பரப்பு
முழுவதிலும் பாய்ந்து பரவி நிரம்பிவிடும்.
பகைவரின் புகழ்
கெடும். அவர்களின் சினம் என்னும் தீயை
அவித்துவிடும்.
இக்காலாட் படைக்குத் தலைவனாகிய செங்குட்டுவனே!
சாந்து
பூசித் திலகமிட்டு, மைதீட்டிய பெண்களின் பல வண்ணங்களும்
கலையும்படி அவர்களைக் கூடி அவர்களின் மென்மையான
கூந்தலாகிய படுக்கையில் கிடந்து,
அவர்களைத் தழுவிச்
சிறுதுயில் பெறுவதை இழந்தாய். இவ்வாறு போர்க்களத்திலேயே
நாள் பலவும் கழிந்தன. இன்னும்
எத்தனை நாட்கள் இவ்வாறு
கழியுமோ?''.
''வாழும் நாட்களின் பெரும் பகுதியைப் போர்க்களத்திலேயே
கழித்து விடுகிறாயே? எங்களைக் காக்கும் கடமைக்கே நாட்களை
ஒதுக்கிவிட்டதால், உனக்கு இன்பம் தரும் காதலுக்கு நேரம்
இல்லாமல் போய்விட்டதே'' என்று கவலையோடு கேட்கிறார்
பரணர்.
வீரன் குட்டுவனின் தன்னலம்
அற்ற கொடை உள்ளம், தன்
குடிமக்களுக்காகக் காதல் இன்பத்தைக் கூட இழக்கத் தயங்காதது
என்று உணர்த்துகிறார். சேரனின் படையைப்
பகைவர்
நிலப்பரப்பை விழுங்கும் பெரு வெள்ளமாக உருவகம் செய்து
பாடுகிறார். இதனால் வெருவரு புனல்தார் என்ற
உருவகத்
தொடர் பாடலின் பெயர் ஆகியது.
பாட்டின் துறை முதலாயின
இப்பாட்டின் துறை
வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு. தனது மண்ணின் மீது விருப்பம் கொண்டு
போருக்கு வந்த மன்னர் அஞ்சுமாறு சென்று போர் தொடுத்ததைப் புகழ்ந்து கூறுவதால்,
இப்பாட்டு வஞ்சித்துறைப் பாடாண் பாட்டாயிற்று. இப்பாட்டின் வண்ணம் ஒழுகு
வண்ணமும் சொற்சீர் வண்ணமும். ஒழுகு வண்ணம் என்பது ஆற்றொழுக்காகச் செல்லும்
சந்தம் என்று அறிவீர்கள். அளவடி என்பது நான்கு சீர்கள் கொண்ட அடி. சொற்சீர்
வண்ணமென்பது, அளவடியிற் குறைந்து வந்தாலும் அகவலோசையோடு வருதல். தூக்கு முந்திய
பாட்டுக்குரியது. பாட்டின் பெயர் வெருவரு புனல்தார்.
|