6.1 பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்து

பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்து செல்வக் கடுங்கோ வாழியாதனைக் குறித்துக் கபிலர் பாடியது. பாரியுடன் வாழ்ந்த கபிலர் அவன் இறந்த பின் செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கண்டு இப்பத்தைப் பாடியுள்ளார். புறநானூற்றிலும் வாழியாதனைக் குறித்துக் கபிலர் பாடிய இரண்டு பாடல்கள் உள்ளன. சேர மன்னர்கள் உதியஞ்சேரல், இரும்பொறை என்ற இருவேறு மரபுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை மரபைச் சார்ந்தவன். அந்துவஞ்சேரல் இரும்பொறையின் மகன்.

6.1.1 ஏழாம் பத்தின் பதிகம்

வாழியாதன் சோம்பாத உள்ளமுடையவன். பகைவரை வென்று சிறைசெய்து கொண்டு வந்தவன். நுட்பமான கேள்வியறிவுடையவன். அந்துவஞ்சேரலுக்கும் பொறையன் தேவிக்கும் மகன். இவ்வேந்தன் பல வேள்விகளை இயற்றியவன். புரோகிதர்களைத் தன் அறிவால் வென்றவன். இச்செய்திகளைப் பதிகம் அளிக்கின்றது.