6.5 ஏழாம் பாட்டும் எட்டாம்
பாட்டும்
ஏழாம் பாட்டாகிய
வெண்போழ்க் கண்ணி
என்பது பற்றியும், எட்டாம் பாட்டாகிய ஏம
வாழ்க்கை பற்றியும் இனிப் பார்ப்போம்.
6.5.1
வெண்போழ்க் கண்ணி (ஏழாம் பாட்டு)
இப்பாட்டின்
பெயர் வெண்போழ்க் கண்ணி. வெண்மையான
பிளந்த பனந்தோட்டாலாகிய மாலை என்பது இதன்பொருள். (போழ்
= பிளவு; பிளந்த பனம்பூ ; கண்ணி
= மாலை)
பாட்டின் கருத்து
''படைத்தலைவர் போருக்கு ஏற்ற
படைக் கருவிகளை
ஆராய்வர். சேரனின் வெற்றிக் கொடி விண்ணிலே அசையும்.
பகைவர் உள்ளம் நடுங்கும். ஒளி வீசும்
மணி பதித்த
கொம்பென்னும் வாத்தியத்தோடு வலம்புரிச் சங்குகள்
முழங்கும். களிறுகளின் கூட்டம் போர்
வெறி கொண்டு
போர்க்களத்தில் அலையும். கொழுப்புடன்
தசை குவிந்து
கிடக்கும் போர்க்களத்தில் பெரிய
சிறகுகளை உடைய
பருந்துக் கூட்டங்கள் பிணங்களின் இரத்தத்தை உண்ணும்.
தலை வெட்டுண்ட வீரரின்
உடலோடு உருவற்ற
பேய்
மகள் ஆடும் கூத்து காண்போரை அச்சுறுத்தும்.
நாட்டிலுள்ளவர்கள் நடுங்கப் பல போர்களில் தன்னை
எதிர்த்தவரைச் சேரன்
வென்றழித்த போர்க்களம் இப்படிக்
காட்சியளிக்கும்.
மணம் கமழும் கொன்றைப் பூவின் கொத்துகளைக்
கலந்து
தொடுத்த வெண்மையான பனந் தோட்டாலாகிய மாலையினை
உடைய சேர வீரர்,
வாளின் வடுவை முகத்திலே பெற்றவர்.
ஒழுங்கான கொம்பும் பெரிய கண்ணும்
கொண்ட எருதுகளையும்
பிற விலங்குகளையும் இறைச்சியின்
பொருட்டு வைத்து
வெட்டும் அடிமணை என்னும்
கட்டையில் வெட்டுத் தழும்புகள்
நிறைந்திருக்கும். அது போல உடம்பெங்கும் விழுப்புண்களாகிய
வெட்டுத் தழும்புகளைக் கொண்ட நிலையில்
அவர்கள் தம்
மார்பில் அவ்வடுக்களை மறைக்கச் சந்தனம்
பூசியிருப்பர்.
இத்தகைய வீரர்க்குத் தலைவன் வாழியாதன்.
தெய்வத்திற்கு உரிய மலர்ந்த காந்தள் பூக்களில் சென்று
தேன் உண்ட தும்பிகள் சிறகு தளர்ந்து
பறக்க முடியாதன
ஆயின. இத்தகைய பெருமை வாய்ந்த நேரி
மலைக்குரிய
தலைவன் வாழியாதன். இசை
வல்லோர்க்குரிய மரபு அறிந்த
பாணனே! நீ அச்சேரனைப் பாடிச் சென்றால் புகழ்
பெற்ற
உன் சுற்றத்தாருடன் கொடுமணம்
என்ற ஊரின்
அணிகலன்களையும், பந்தர் என்னும் ஊரின் கடற்கரையில்
பெறப்படும் தென்கடல் முத்துக்களையும் பரிசிலாகப்
பெறுவாய்.'' இவ்வாறு,
சேரனிடம் பாணனை
ஆற்றுப்படுத்துகிறார் கபிலர்.
பாட்டின் துறை முதலியன
இப்பாட்டின்
துறை பாணாற்றுப்படை, பரிசில் பெற்ற
பாணன் ஒருவன் வழியிடையே எதிர்ப்படும் பரிசில் பெறாத பாணன் ஒருவனைக் கண்டு
‘இன்னாரைச் சென்று கண்டால் நீ இன்ன பரிசில் எல்லாம் பெறலாம்’ என்று கூறுவது
என்பதை அறிவீர்கள். பாட்டின் வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குரியன.
பாட்டின் பெயர் வெண்போழ்க் கண்ணி.
ஊழி முதல்வனாகிய சிவபெருமான்
அழித்தல் கடவுள்.
அவனது மாலை கொன்றை.
அந்தக் கொன்றை மாலையுடன்
சேரனின் குலமரபுப் பூவான பனம்பூவை மாலையாகத்
தொடுத்து அணிந்த வீரர்கள் என்று வருணிக்கிறார்.
இவர்கள்
அழித்தலில் சிவபெருமான் போன்றவர்கள் என்னும் நயம்
தோன்றச் செய்யும் தொடர் இது. இதனால் பாடலின் பெயரானது.
6.5.2
ஏம வாழ்க்கை (எட்டாம் பாட்டு)
இப்பாட்டின் பெயர்
ஏம வாழ்க்கை. பாதுகாப்பான வாழ்க்கை
என்பது இதன் பொருள். அச்சமற்ற வாழ்க்கை என்றும் கூறப்படும்.
பாட்டின் கருத்து
''தம் கணவரைப் பிரிந்த
மகளிர்க்கு, பிரிவாற்றாமையால்
உறக்கம் பெறாமல், மெலிவால் அணிந்திருக்கும் அணிகலன்கள்
உடலிலிருந்து நெகிழும். உயர்ந்த மண் சுவர்
கொண்ட
நீண்ட பெரிய இல்லத்தின் ஓவியம் தீட்டப்பட்ட
சுவரில்,
கணவரைப் பிரிந்த நாட்களை விரலால்
கோடிட்டுக் குறித்து,
அவற்றை மீண்டும் மீண்டும் தடவிப்
பார்த்து எண்ணி,
அதனால் இயல்பாகவே சிவந்த விரல்கள் மேலும்
சிவக்கும்.
அழகிய வரிகளையுடைய சிலம்பையும் காண்பாரை வருத்தும்
அழகையும் கொண்ட அத்தகைய மகளிரின் மனத்தைப் பிணித்து
நிற்கும் சந்தன மணம் கமழும் மார்புடைய
சேரனே! உன் அடி
நிழலில் வாழ்வோர். பகைவர் நாட்டில் சென்று அமைத்துத்
தங்கிய பாசறை நடுவில் வில்லின் ஒலியும், முரசின் ஒலியும்,
மோதுகின்ற காற்று குறுந்தடி போல வீசக் கடல் முழங்குவது
போலப் பெருமுழக்கம் செய்யும். அவ்வொலி
வானம் முழுவதும்
கேட்கும்.
கண்டவர்கள் விரும்பும்
அழகு மிக்க பகைவர் மதிலை அழிக்காமல் உண்ணுவதில்லை என்று வஞ்சினம் கூறி, உண்ணாமல்
நாட்கள் பல கழிந்தன. அந்நிலையிலும், போரை விரும்பும் ஊக்கத்தைக் கொண்ட பகைவர்
உடல் வலிமை குன்றும் வரை, அவர்களின் இருப்பிடங்களைக் கைக்கொள்ளக் கருதிப்
பலநாட்கள் காத்திருப்பர் உன் வீரர். அவர்கள் பகைவேந்தர்கள் ஊர்ந்து வரும்
யானைகளை வீழ்த்தித் தந்தங்களைக் கைக்கொள்வர். அவற்றை விலையாகத் தந்து கள்ளைப்
பெற்று உண்டு மகிழ்வர். வடநாட்டில் உள்ள உத்தரகுரு என்னும் நகரில் வாழும்
மக்களைப் போல இவர்களும் துன்பமே இல்லாமல் என்றென்றும் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள்
எனின், இல்லை. ஏனெனில் இவர்கள் பகைப்புலத்தை வெல்லும் வரை உண்ண மாட்டோம்
என நோன்பு கொண்டுள்ளனர். எனவே இவர்கள் வென்றாலும், சில நாள் இன்பம் பெறுவரேயன்றிக்
கிடைத்த வெற்றி போதும் என அமைதி கொள்ளாதவர்கள். வேறு பகைவரைத் தேடிப் போர்
செய்யவே செல்வார்கள்.
இவ்வாறு, சேரனும்
படைவீரரும் தங்கள் காதல் இன்பத்தை, தம் நாட்டு மக்கள் இன்பம் பெறுவதற்காகத்
துறக்கும் உயர் பண்பு கொண்டவர்கள் என்பதைக் கபிலர் விளக்குகிறார்.
பாட்டின் துறை முதலியன
பாட்டின் துறை
செந்துறைப் பாடாண் பாட்டு. இதற்குரிய
விளக்கத்தை இரண்டாம் பாட்டின் விளக்கத்தில் காண்க. வண்ணமும் தூக்கும் முந்திய
பாட்டுக்குரியவை. பாட்டின் பெயர் ஏம வாழ்க்கை.
நாம மறியா ஏம வாழ்க்கை - அச்சமும் துன்பமும் என்னவென்றே அறியாத பாதுகாப்பான
வாழ்க்கை என்று பொருள் தரும் தொடர். தம் நாட்டு மக்களுக்கு இப்படிப்பட்ட
வாழ்க்கையைத் தந்து விட்டுத் தம் வாழ்க்கை முழுவதையும் போர்க்களத்தில் கழிக்கின்றனர்
சேரனும் அவன் வீரர்களும். அவர்களின் பிறர் நலம் போற்றும் பொதுநல வாழ்க்கையை
அழகாகச் சுட்டும் தொடர் இது. இதனால் இப்பாடலுக்குப் பெயர் ஆனது.
|