6.6 ஒன்பதாம் பாட்டும் பத்தாம்
பாட்டும்
ஒன்பதாவது பாடலாகிய
மண்கெழு ஞாலம்,
பத்தாவது பாடலாகிய பறைக்குரல் அருவி
என்பவை வெளிப்படுத்தும் கருத்துகளை இனிப் பார்ப்போம்.
6.6.1 மண்கெழு
ஞாலம் (ஒன்பதாம் பாட்டு)
இப்பாட்டின் பெயர்
மண்கெழு ஞாலம்.
மண் செறிந்த இவ்வுலகம் என்பது இதன் பொருள். மண்ணுலகம் எனவும் கூறலாம்.
பாட்டின் கருத்து
''மலை போன்ற யானையின் மேல்
வானளாவ எடுத்த
வெற்றிக்கொடி மலைமேலிருந்து விழும் அருவி போல
அசைந்து விளங்கும். கடல்போன்ற
பெரும்படையின் நடுவே
முழங்கும் முரசம் காற்றால் மோதப்பட்ட கடல் அலைபோல
ஒலிக்கும். பகைவரை எறிந்து
சிதைத்தனர் வாள்வீரர். இலை
போன்ற முனையை உடைய வேலேந்திய
வீரரும், பாய்ந்து
போர்புரிந்து வாயில் நுரை தள்ளும்
குதிரைகளும், போர்
வேட்கை கொண்ட மறவர்களும் சென்று போர் புரிந்ததனால்
பிணங்கள் குவிந்தன. இவ்வாறு பகைவரைப்
போரில் கொன்று
அழித்து அவர்தம் குடிகளை மறுவாழ்வு
பெறச் செய்த வெற்றி
வேந்தனே! நிலம் மிகுதியும்
விளைவைத் தரவும், வெயில்
தணியவும், வெள்ளியாகிய கோள்
மழைதருவதற்கு உரிய
வகையில் மற்ற கோள்களோடு பொருந்தி நிற்கவும். வானம்
மழை பெய்வதற்குரிய மேகங்களால் உலகத்தைக் காக்கும்
செயலைச் செய்யவும், நான்கு திசைகளிலும் வேறுபாடின்றித் தம்
ஆணையைச் செலுத்தினர் உன் முன்னோர்!
உன்னைப்
போலவே அசையாத, உறுதியான கொள்கை
உடையவராய் அவர்களும் இருந்தமையால் மண் திணிந்த இவ்வுலகை இனிது
ஆண்டனர்." இவ்வாறு பாராட்டுகிறார் கபிலர்.
பாட்டின் துறை முதலியன
இப்பாட்டின்
துறை வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு.
இதற்குரிய விளக்கத்தை ஐந்தாம் பத்தின் இறுதிப் பாட்டு உரை விளக்கத்தில் காணலாம்.
வண்ணம் ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் முந்திய
பாட்டிற் கூறப் பெற்றன. தூக்கு செந்தூக்கு; இப்பத்தின் முதற்பாட்டில்
விளக்கம் கூறப்பட்டது. பாட்டின் பெயர் மண்கெழு
ஞாலம்.
அசைந்து கொண்டே
இருக்கும் மண் உருண்டையாகிய
இவ்வுலகை அசையாத கொள்கையுடன்
சேர மரபினர் ஆண்டனர்
என்பதைப் புலப்படுத்தும்- மண்கெழு ஞாலம் என்ற அழகிய
தொடர் பாடலின் பெயரானது. ஞாலுதல்
- அந்தரத்தில்
தொங்குதல். ஞாலம் என்று பூமிக்குப்
பெயர் இதனால்
வந்தது.
6.6.2
பறைக்குரல் அருவி (பத்தாம் பாட்டு)
பறைக்குரல்
அருவி என்பது இப்பாட்டின் பெயர்,
பறை போன்ற முழக்கத்தை உடைய அருவி என்பது இதன் பொருள்.
பாட்டின் கருத்து
''களிறுகளைச் செலுத்தும் வன்மை
மிக்க காலடிகளை
உடையவர்; குதிரைகளைச்
செலுத்திப் பழக்கப்பட்ட கால்
விளிம்பு கொண்டவர்; பகைவரை அழிக்கும் வேற்படையையும்
கல்லோடு மோதி அதை உடைக்கும் வலிமை மிக்க
தோளையும் பெற்றவர்; வில்லால் பகைவரை
வருத்திய
வெற்றிக்குரியவர்; வண்டுகள் மொய்த்துப் பாடாத
குவிந்த
அரும்பு போலும் கூர்மையுடைய பனம்பூவோடு குவளைப்
பூவையும் மாலையாக்கிச் சூடியவர் உன் வீரர்கள். கடுஞ்சினம்
மிக்க பகைவேந்தர்களைப் போரில் அழித்து
வீரக்கழல் அணிந்த
அம்மறவர்களுக்குத் தலைவனே!.
விளையாட்டாகவும் பொய் கூறாத
வாய்மையையும், பகைவர்
கூறும் புறஞ்சொற்களைக் கேட்டுக்
கொள்ளாத நல்ல
அறிவினையும், குற்றம்
நீங்கிய மார்பில் பூணோடு கூடிய
ஆரத்தையும் உடைய வேந்தனே! பெண்மை சிறந்து நாணமும்
மடமும் கற்பும் நிலைபெறக் கொண்ட ஒளிபொருந்திய
நெற்றி கொண்ட ஒப்பற்ற பெண்ணுக்குக் கணவனே!
குன்றாத கொள்கையுடைய சான்றோராகிய அமைச்சர் முதலிய
சுற்றத்தார் சூழ, வேள்வி செய்து கடவுளை மகிழ்வித்தாய்.
மேலுலகத்தில் வாழும் வீரர்களை, அவர்களது செயல்களைப்
புலவர்களைக் கொண்டு பாட வைத்து மகிழ்வித்தாய்!
சான்றோரைப் பணிகின்ற மென்மையையும்
பகைவர்க்கு
வணங்காத ஆண்மையையும்
கொண்டவனே! இளைய
வயதினரான மக்களைக் கொண்டு
பெரியோரைப் பேணி, மிகப்
பழங்காலத்திலிருந்து முன்னோர்
செய்து வரும் கடமையை
ஆற்றும் வெல்போர் வேந்தனே!
தேவர்கள் வாழும்
பொன்னுலகத்திலும் கேட்கும்படி பறைபோல இனிமையாய்
ஒலிக்கின்ற அருவிகள் மிகப்பெரிய உச்சிகள்
எல்லாவற்றிலும்
விளங்குகின்ற அயிரை
என்னும் நெடிய மலையைப்போல
நீ
வாழும் நாளும் அழிவில்லாது நிலை பெறட்டும்.'' இவ்வாறு
சேரனை வாழ்த்துகிறார் கபிலர்.
பாட்டின் துறை முதலியன
பாட்டின் துறை
செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம்
ஒழுகு வண்ணம்.
தூக்கு செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்.
இவற்றுக்குரிய விளக்கங்கள் முன்னுள்ள பாடல்களின் விளக்கங்களில் தரப்பட்டுள்ளன.
பாட்டின் பெயர் பறைக்குரல் அருவி.
அருவியின் ஓசையைப் புகழை முழக்கும் இனிய பறையின்
குரல் என்று பாடினார். அந்த ஓசையும் விண்ணுலகத்தில்
இருக்கும் தேவர்களுக்கும், சேரனின் முன்னோர்களுக்கும்
கேட்கும் என்று உயர்வு நவிற்சியாய்க் கற்பனை
தோன்றக்
கூறினார். இதனால்
இந்த அழகிய தொடர் பாடலின்
பெயராகியது.
|