தன் மதிப்பீடு : விடைகள் - II

1. கபிலர் செல்வக்கடுங்கோவிடம் பாரி பற்றிக்கூறுவன யாவை?

தேன் மழை பொழியும் பறம்பு மலைக்குரிய பெருவீரனும், ஓவியத்தில் வரைந்தது போன்ற வேலைப்பாடு கொண்ட வீட்டிலிருக்கும் கொல்லிப் பாவை போன்ற அழகிய நல்ல பெண்ணுக்குக் கணவனுமான பாரி, பொன் போன்ற நிறம் கொண்ட பூவினையும் சிறிய இலையினையும் பொலிவு இல்லாத அடிமரத்தையும் உடைய உன்ன மரத்துக்குப் பகைவன். காய்ந்த சந்தனத்தையும், ஈரம் மிக்க வள்ளல் தன்மையையும் தன் அகன்ற நெஞ்சில் உடையவன். அந்தப் பெருவள்ளல் பாரி, சென்றவர் திரும்பி வராத மேல் உலகம் சென்று விட்டான். அதனால் இசைக்கலைஞர்கள் பாடுவதை மறந்தனர். இசைக்கப்படாததால் அவர்களின் முழவுகளின் மார்ச்சினை என்னும் மண் காய்ந்து போனது. பரிசில் பெற்று வாழும் எங்கள் கலைஞர் கூட்டமே காய்ந்து, வாடி வருந்துகிறது.

முன்