1.1 பொருள் இலக்கணம்

தமிழ் இலக்கணப் பிரிவுகளில் மூன்றாவதாக அமைவது பொருள் இலக்கணம். இங்குப் ‘பொருள்’ என்பது சொல் தரும் பொருள் (meaning) அன்று. சொற்களைக் கொண்டு பாடப்படும் இலக்கிய நூலின் பொருள் (content - பாடு பொருள்) ஆகும். தமிழ் மக்களின் வாழ்க்கை நெறிகளை அடிப்படையாகக் கொண்டு புலவர்கள் இலக்கியங்களைப் படைத்தனர். அவ்விலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு இலக்கண ஆசிரியர்கள் பொருள் இலக்கணத்தை (வாழ்வின் இலக்கணத்தை) வரைந்து கொடுத்தனர்.

1.1.1 அகமும் புறமும்

அவ்வாறு அமைந்த பொருள் இலக்கணம் அகம் - புறம் என இருவகைப்படும். அகம் என்பது தலைவன் தலைவியர் இடையே அகத்தே (மனத்துள்) தோன்றும் காதல் உணர்வுகளைப் பற்றியது. புறம் என்பது போரும் வெற்றியும் ஈகையும் புகழும் பற்றியது. அறம், பொருள், இன்பம் எனக் கூறப்படும் உறுதிப் பொருள்களுள் இன்பம் என்பது அகப்பொருளைக் குறிப்பது. அறமும் பொருளும் புறப்பொருளைக் குறிப்பன. முன்னது வீட்டு வாழ்க்கை; பின்னது நாட்டு வாழ்க்கை. இவற்றை முறையே அகத்திணை, புறத்திணை என்றும் வழங்குவர்.

1.1.2 அகம்-புறம் இலக்கண அணுகுமுறை

புறப்பொருள் இலக்கியங்களும் இலக்கணங்களும் பெரும்பாலும் அரசர்களின் போர் நிகழ்வுகள், வீரம், கொடை, புகழ் குறித்தே அமைகின்றன. புற இலக்கியங்கள் உண்மை வாழ்வின் நிகழ்வுகளையும் வரலாற்றில் இடம் பெறத்தக்க தலைவர்களின் செயல்களையும் கூறுவன. புறநானூறு, பதிற்றுப்பத்து போன்ற நூல்களில் பாடப்பெறும் அரசர்கள் கற்பனைப் பாத்திரங்கள் அல்லர். ஆனால் அகப்பொருள் பாடல்களில் இடம்பெறும் தலைவன், தலைவி, தோழி, செவிலி போன்றோர் முற்றும் கற்பனைப் பாத்திரங்களே. அவர்களின் இயற்பெயர், ஊர்ப்பெயர் போன்றவை குறிப்பிடப்படுவதி்ல்லை. இந்த அடிப்படை வேறுபாடு கொண்டே அக-புற இலக்கியங்களும் இலக்கணங்களும் அமைகின்றன.