2.1 அகப்பொருள் வகை

அகத்திணைகள் மொத்தம் ஏழு; எனினும் அவற்றை இலக்கண நூலார் மூன்று பிரிவுகளில் அடக்கிக் காட்டுவர். அவையாவன :

  1. கைக்கிளை
  2. ஐந்திணை
  3. பெருந்திணை

இம் மூன்றே எண்ணிக்கை அடிப்படையில் கூறும் போது

கைக்கிளை - 1
ஐந்திணை - 5
பெருந்திணை - 1

என 7 பிரிவுகளாகிறது.

மலர்தலை உலகத்துப் புலவோர் ஆய்ந்த
அருந்தமிழ் அகப்பொருள், கைக்கிளை, ஐந்திணை
பெருந்திணை எனஎழு பெற்றித்து ஆகும் (1)

என்பது நம்பியகப் பொருள் நூற்பா!

  • அகப்பொருள் சொல்லப்படும் முறை
  • அகத்திணை ஏழினையும் புனைந்துரை, உலகியல் எனும் இரு முறைகளில் கூறலாம்.

  • புனைந்துரை
  • புனைந்துரை என்பது நாடகப் பாங்குடையது. புலவர் தாமே கற்பனையாகப் படைத்து மொழிவது.

  • உலகியல்
  • உலகியல் என்பது உண்மைத் தன்மை உடையது. இயல்பாக, உலகில் நடப்பதை உள்ளவாறே உரைப்பது.

    2.1.1 கைக்கிளை

    அகப்பொருள் வகைகளில் முதலில் வைத்துக் கூறப்பட்டது ‘கைக்கிளை’ ஆகும்.

    கைக்கிளை என்ற சொல்லைக் கை+கிளை எனப் பிரித்துப் பொருள் காண்பர். ‘கை’ என்பதற்கு ‘ஒரு பக்கம்’ என்றும், ‘சிறுமை’ என்றும் இருவகைப் பொருள்கள் உள்ளன. ‘கிளை’ என்பதற்கு ‘உறவு’ என்று பொருள். எனவே ‘ஒரு பக்கத்து உறவு’ அல்லது ‘சிறுமைத் தன்மையுடைய உறவு’ என்பதே ‘கைக்கிளை’ என விளக்கம் தருவர். இதனை ‘ஒரு தலைக் காமம்’ என்ற தொடரால் குறிப்பிடுகிறது நம்பியகப்பொருள் நூல்.

    2.1.2 பெருந்திணை

    ‘பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்’ என்பது இலக்கண விதி.

    பொருந்தாத காதல் பெருந்திணை எனப்பட்டது. தலைவன் அல்லது தலைவி, பொருந்தாத வகையில் அன்பு காட்டுவது இது! இதுவே உலகில் பெருமளவில் (பெருவழக்காக) நிகழ்வதால் ‘பெருந்திணை’ எனப் பெயர் பெற்றது என்பர் வெள்ளை வாரணர்.

    2.1.3 ஐந்திணை

    இதனை அன்பின் ஐந்திணை என்பர். தலைவன் தலைவி இருவரும் தம்முள் உள்ளம் ஒன்றி, அன்பு மேலிட்டு வாழும் காதல் வாழ்க்கை ஐந்திணை எனப்படும். இது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலங்களின் அடிப்படையில் பெயர் பெற்றுத் திகழ்கிறது. தமிழ் நூல்களில் அதிக அளவில் போற்றிப் பாடப் பெற்றவை இத்தகு அன்பின் ஐந்திணையே.