2.3 முதற்பொருள்

ஐந்திணைகளுக்கும் உரிய மூன்று பொருள்களில் முதன்மையானது நிலம் ஆகும்.

நிலத்துடன், அந்த நிலத்துக்குரிய ‘பொழுது’ என்ற காலத்தையும் சேர்த்து ‘முதற்பொருள்’ என வழங்குவர். இதனை,

நிலமும் பொழுதும் என முதல் இரு வகைத்தே (8)

என்ற நம்பியகப் பொருள் நூற்பா இனிது விளக்கும்.

2.3.1 திணையும் நிலமும்

நிலம் என்பது முதற்பொருளின் பகுதி ; குறிஞ்சி முதலான 5 திணைகளுக்கும் உரிய நிலங்கள் எவை என்பதைக் கீழ்க்காணும் நூற்பா விளக்குகிறது.

வரையே சுரமே புறவே பழனம்
திரையே அவையவை சேர்தரும் இடனேஎனஈர்
ஐவகைத்து அனையியல் நிலமே (9)

வரை : மலைமலையும், அதைச் சார்ந்த இடமும் குறிஞ்சி
சுரம் : மணல் மணலும் அதைச் சார்ந்த இடமும் பாலை
புறவு : காடு காடும், காடு சார்ந்த இடமும் முல்லை
பழனம் : வயல்வயலும் அதைச் சார்ந்த இடமும் மருதம்
திரை : கடல்கடலும், அதைச் சார்ந்த இடமும் நெய்தல்

இவ்வாறு ஐந்து திணைகளுக்கும் ஐவகைப்பட்ட நிலங்களை வகுத்துள்ளனர்.

2.3.2 திணையும் பொழுதும்

பொழுது என்பது காலத்தைக் குறிக்கும். அது சிறுபொழுது, பெரும்பொழுது என இருவகைப்படும்.

  • சிறுபொழுது

    இது ஒரு நாளின் சிறுபிரிவு:

    1. மாலை
    2. யாமம் (நள்ளிரவு)
    3. வைகறை (அதிகாலை நேரம்)
    4. எற்படு காலை (சூரியன் மறையும் நேரம்)
    5. நண்பகல்

    எனச் சிறுபொழுது 5 பிரிவுகளை உடையது.

  • பெரும்பொழுது
  • இது ஓர் ஆண்டின் உட்பிரிவு ஆகும்.

    1. இளவேனில் (சித்திரை, வைகாசி மாதங்கள்)
    2. முதுவேனில் (ஆனி, ஆடி மாதங்கள்)
    3. கார்காலம் (ஆவணி, புரட்டாசி மாதங்கள்)
    4. கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்)
    5. முன்பனிக்காலம் (மார்கழி, தை மாதங்கள்)
    6. பின்பனிக்காலம் (மாசி, பங்குனி மாதங்கள்)

    ஐந்து திணைகளுக்கும் உரிய சிறுபொழுது, பெரும்பொழுதுகள் எவையெவை என்பதைக் கீழ்வரும் அட்டவணை விளக்கும்.

    பெரிதாக்குக

    நிலம் (அல்லது)திணை சிறுபொழுது பெரும்பொழுது
    குறிஞ்சி யாமம் கூதிர், முன்பனி
    பாலை நண்பகல் வேனில், பின்பனி
    முல்லை மாலை கார்
    மருதம் வைகறை கார்காலம் முதலான ஆறும் உரியன.
    நெய்தல் எற்படு காலை (சூரியன் மறையும் நேரம்) கார்காலம் முதலான ஆறும் உரியன.