2.5 உரிப்பொருள்

முப்பொருள் வகைப்பாட்டில் மூன்றாவதாக அமைவது உரிப்பொருள் ஆகும். ஐவகைப்பட்ட திணைகளுக்கும் உரிய ஒழுக்கங்களை உரிப்பொருள் என்று பெயரிட்டு வழங்குவர். அந்த ஒழுக்கங்கள் ஐந்திணை பற்றிய செய்யுட்களுக்கு உரிய பாடுபொருள் என்பதனாலும் உரிப்பொருள் எனப்பட்டது. அவ்வத் திணைகளுக்கு உரிமை உடைய ஒழுக்கங்கள் என்று விளக்கம் தருவதும் பொருத்தம் உடையதே ! (உரி = உரியது, உரிமை உடையது)

2.5.1 ஐந்திணை உரிப்பொருள்கள்

ஐந்திணைகளுக்கும் உரிய உரிப்பொருள்களைக் கீழ்க்காணுமாறு வகுத்துள்ளனர்.

  • குறிஞ்சிக்குரியது
  • புணர்தலும், அதன் நிமித்தமும்

  • பாலைக்குரியது
  • பிரிதலும், அதன் நிமித்தமும்

  • முல்லைக்குரியது
  • இருத்தலும், அதன் நிமித்தமும்

  • மருதத்துக்குரியது
  • ஊடலும், அதன் நிமித்தமும்

  • நெய்தலுக்குரியது
  • இரங்கலும், அதன் நிமித்தமும் சொற்பொருள் விளக்கம்

  • புணர்தல்
  • தலைவனும் தலைவியும் கூடுதல்.

  • பிரிதல்
  • தலைவன், யாதேனும் ஒரு காரணமாகத் தலைவியை விட்டுப் பிரிந்து செல்லுதல்.

  • இருத்தல்
  • தலைவி, தலைவனது பிரிவைப் பொறுத்துக் கொண்டு இருத்தல்.

  • ஊடல்
  • தலைவி, யாதேனும் ஒரு காரணம் கருதித் தலைவன் மீது கோபப்படுதல்.

  • இரங்கல்
  • தலைவி, தலைவனது பிரிவைத் தாங்க இயலாது வருந்துதல்.

  • நிமித்தம்
  • நிமித்தம் என்றால் அந்த ஒழுக்கம் தொடர்பான முன்/ பின் செயல்பாடுகள் என்று பொருள்.