கற்பு வாழ்க்கை வாழும் காலத்தே தலைவன் தலைவியைப் பிரிந்து மேற்கொள்ளும் செயல் (பிரிவு) ஆறு வகைப்படும்.
- பரத்தையிற் பிரிவு
- ஓதல் பிரிவு
- காவல் பிரிவு
- தூதிற் பிரிவு
- துணைவயின் பிரிவு
- பொருள்வயின் பிரிவு
பரத்தையிற் பிரிவு
தலைவன் பரத்தையிடம் விருப்பம் கொண்டு
தலைவியைப் பிரிந்து, பரத்தையர் வாழும் பகுதிக்குச்
செல்லுதல் பரத்தையிற் பிரிவு எனப்படும். இது,
- அயல்மனைப் பிரிவு
- அயற்சேரிப் பிரிவு
- புறநகர்ப் போக்கு
என மூன்று உட்பிரிவுகளை உடையது.
அயல்மனைப்
பிரிவு
தலைவன் காமக்கிழத்தியோடு கூடி மகிழ ஓர் ஊரிலேயே வேறு வீட்டில் சென்று தங்குதல்.
அயற்சேரிப்
பிரிவு
தலைவன்
பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்தியையும், காதல் பரத்தையையும்
கூடி மகிழ்வதற்காகவும், விழா நிகழ்ச்சிகளைக் காண்பதற்காகவும்,
வேறு ஓர் பகுதிக்குச் சென்று தங்குதல்.
புறநகர்ப்
போக்கு
தலைவன் புதியவளாகிய பரத்தையைத் தேரிலேற்றிக் கொண்டு சோலையில் விளையாடவும், புனலாடவும் நகர்ப் புறத்திற்குச் சென்று தங்குதல்.
ஓதல் பிரிவு
தலைவன் கல்வி கற்றலின் காரணமாகத் தலைவியைப் பிரிந்து
செல்லுதல் ஓதல் பிரிவு எனப்படும். இதற்குரிய கால வரையறை 3 ஆண்டுகளாகும். இது
- வேதம் ஓதுதல்
- வேதமல்லாக் கல்வி கற்றல்
என இரண்டு உட்பிரிவுகளை உடையது.
காவல் பிரிவு
பாதுகாத்தல் தொழிலை மேற்கொள்ள வேண்டி, தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வது காவல் பிரிவு எனப்படும். இது
- அறப்புறம் காவல்
- நாடு காவல்
என இரு உட்பிரிவுகளை உடையது.
அறப்புறம்
காவல்
அறமன்றங்கள் முதலான இடங்களைப்
பாதுகாப்பதற்காகத் தலைவன் மேற்கொள்வது இப்பிரிவு.
நாடு காவல்
பகைவர்களிடமிருந்து தன் நாட்டைக் காப்பதற்காக
மேற்கொள்ளும் இப்பிரிவு அரசருக்கு மட்டுமே உரியது.
தூதிற் பிரிவு
அரசர் இருவர் தம்முள் வேறுபட்டுப் பகை கொண்டு போரிட
எண்ணிய சூழலில், அவ்விருவரிடையே பகை
நீங்குவதற்காகத் தலைவன் தூது செல்லுதல் இப்பிரிவாகும்.
இது அந்தணர்க்கும், அரசருக்கும் உரியது. இதற்குரிய காலம் ஓர் ஆண்டு ஆகும்.
துணைவயின் பிரிவு
ஓர்
அரசனுக்குப் பகைவர்களால் இடையூறு நேர்ந்த வழி அதனைப் போக்குவதற்குத்
துணைபுரியும் நோக்குடன் தலைவன் மேற்கொள்ளும் பிரிவு
துணைவயின் பிரிவு எனப்படும். இது அரசர், வணிகர், வேளாளர்
என்னும் மூவருக்கும் உரியது. இதற்குரிய காலம் ஓர் ஆண்டு
ஆகும்.
பொருள்வயின் பிரிவு
தலைவன்
தன் இல்லற வாழ்வுக்குத் தேவைப்படும் பொருளை ஈட்டுதல் காரணமாகப்
பிரியும் பிரிவு பொருள்வயின் பிரிவு எனப்படும். இது
அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்னும் நான்கு பிரிவினர்க்கும்
உரியது. இதற்குரிய காலம் ஓர் ஆண்டு ஆகும்.
பிரிவு பற்றிய சில சிறப்பு விதிகள்
தலைவன்
நிகழ்த்தும் அறுவகைப் பிரிவிற்குமான சில சிறப்பு விதிகளை
நம்பி அகப்பொருள் நூல் வகுத்து வழங்குகிறது. அவை
வருமாறு:
-
எல்லா வகைப்பிரிவின் போதும் தலைவன்
தலைவியிடம் சொல்லிச் செல்வதும் உண்டு, சொல்லாமல் செல்வதும்
உண்டு.
-
தலைவியிடம் சொல்லாமல் செல்லும் போதும்
தோழியிடம் சொல்லி விட்டுச் செல்வான்.
-
நாடு இடையிட்டுச் (தன் நாடு விட்டு
வேற்று நாட்டுக்கு) செல்லும் பிரிவின் போது தலைவன் -
நடந்து செல்லுதல், கப்பலில் செல்லுதல், ஊர்தியில் செல்லுதல்
என்னும் மூன்று வழிமுறைகளில் ஒன்றை மேற்கொள்வான்.
-
தலைவிக்கும்கூட, தன் பிரிவைக் குறிப்பினால்
உணர்த்திச் செல்வான்.
-
அந்தணர்கள் கப்பலில் செல்வதும்,
அரசர், வணிகர், வேளாளர் என்னும் மூவரும் பெண்களுடன்
கப்பலில் செல்வதும், பெண்களுடன் பாசறையில் சென்று தங்குவதும்
கூடாது.
-
பிரிவு மேற்கொள்ளாமல் தலைவன் தாமதித்தல்
உண்டு. அதற்குச் செலவு அழுங்குதல் என்று பெயர்.
-
தலைவன் ஓதற் பிரிவு மேற்கொண்ட காலத்தே
பிரிவை நினைத்துப் புலம்புதல் கூடாது. தூது காரணமாகவும்,
துணைபுரிதல் காரணமாகவும் பிரிந்து சென்ற தலைவன் அச்செயலின்
காலம் நீட்டிக்கும் போது தலைவியை நினைந்து புலம்பலாம்.
|