இப்பாங்கன்
கூட்டம் சார்தல், கேட்டல், சாற்றல், எதிர்மறை, நேர்தல்,
கூடல், பாங்கியோடு கூடி இருக்கச் செய்தல் என ஏழு வகைகளாக
அமையும். அவற்றிற்கும் மேலாக 24 வகைப்பட்ட விரிவுகளையும்
கூறியுள்ளார் அகப்பொருள் விளக்க நூலாசிரியர். அந்த 24
செய்திப் பிரிவுகளையும் மேற்கண்ட 7 வகைகளுக்கும் உரியவாறு
பாகுபடுத்தியும் கூறியுள்ளார்.
சார்தல், கேட்டல், சாற்றல்
இம்மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடைய
செயல்பாடுகளாகும்.
சார்தல் : தலைவன், பாங்கனிடம்
சென்று சேர்தல்.
கேட்டல் : பாங்கன், தலைவனது வாட்டம் கண்டு, அதற்கான
காரணம் கேட்டல்.
சாற்றல் : தலைவன், பாங்கனிடம் தன் வாட்டத்திற்கான
காரணத்தைக் கூறுதல்.
எதிர்மறை
தலைவனது
காதலைக் (களவை) கேட்டறிந்த பாங்கன் நினக்கு இது
தக்கது அன்று என்று தலைவனிடம் இடித்துரைப்பது
எதிர்மறை எனப்படும்.
இது
பாங்கன் மறுத்துப் பேசுவது, தலைவன்
அதற்கு
விடை சொல்வது, பாங்கன் தலைவனைப் பழித்துப் பேசுவது,
தலைவி மீது கொண்ட காமம் என்னால் தாங்க முடியாதது
என்று தலைவன் கூறுவது முதலான விரிவுகளை உடையது.
நேர்தல்
தலைவன் தனது தாங்க இயலாத காதல் தன்மையை
உணர்த்தினான். அதனை உணர்ந்த பாங்கன் தலைவனது
கருத்துக்கு இசைந்து செயல்பட முடிவு செய்கிறான்.
அவனுக்காகத் தலைவியைச் சென்று கண்டு வருகிறான்.
இதுவே நேர்தல் எனப்படும்.
(நேர்தல் - தலைவனது கருத்துக்கு உடன்பட்டுச் செயல்பட
முடிவு செய்தல்)
இது பல விரிவுக் கூறுபாடுகளை உடையது.
-
பாங்கன் தன் மனத்திற்குள் இரங்குதல்.
-
பாங்கன் தலைவனிடத்தில் இரக்கத்தைப்
புலப்படுத்திப் பேசுதல்.
-
தலைவியின் உருவம், அவளைக் கண்ட
இடம் முதலானவற்றைக் கேட்டறிதல்.
-
தலைவன் ‘தலைவியின் உருவம் இவ்வகைத்து
- கண்ட இடம் இது’ எனக் கூறுதல். (இவ்வகைத்து = இன்ன
தன்மையில் அமைந்தது)
-
‘தலைவ! நான் அவ்விடத்திற்குச்
சென்று கண்டு வருகிறேன் கவலைப்படாதே’ என்று பாங்கன்
கூறுதல்.
-
அவ்வாறே குறிப்பிட்ட அந்த இடத்திற்குப்
பாங்கன் செல்லுதல்.
-
தலைவியை, குறிப்பிட்ட இடத்தில்
பாங்கன் காணுதல்.
-
அவளது பேரழகைக் கண்ட பாங்கன்,
அறிவில்லாமல் தலைவனை இகழ்ந்து விட்டோமே என்று நெகிழ்ந்து
பேசுதல்.
-
இத்தகு பேரழகியைக் கண்ட பின்னும்
- காதல் வயப்பட்ட பின்னும் தலைவன் மீண்டும் வந்தது
வியப்பிற்குரியது எனல்.
-
தலைவியைப் பற்றி வியப்பு மேலிட்டுப்
பேசுதல்.
-
மீண்டு வந்து, தலைவி குறியிடத்தில்
நிற்கும் நிலையைப் பற்றித் தலைவனிடம் கூறுதல்.
இவையாவும் நேர்தல் என்பதன் விரிவுகளாகும்.
கூடல்
பாங்கன் மூலமாக அமைந்த வாய்ப்பைப் பயன்படுத்தி,
தலைவன் தலைவியைக் கூடி இன்புறுதல் கூடல் எனப்படும். இது,
- தலைவன் செல்லுதல்
- தலைவியைக் காணுதல்
- புணர்ந்து மகிழ்தல்
- புணர்ச்சியின்பின் தலைவியைப் புகழ்தல்
என நான்கு உட்கூறுகளை (விரிவுகளை) உடையது, இது.
பாங்கிற் கூட்டல்
பாங்கன் வாயிலாகத் தலைவியைக் கூடி மகிழ்ந்த
தலைவன் ‘இனி நீ வரும்போது நின் உயிர்த்தோழியோடு
வருக!' என்று கூறி, தலைவியை அவளது தோழி இருக்கும்
இடத்திற்கு அனுப்பி வைத்தல் பாங்கிற் கூட்டல் எனப்படும்.
|