5.1 பாங்கி மதி உடன்பாடு - விளக்கம்

பாங்கி (தோழி) எப்போதும் தலைவியுடன் இருப்பவள். உற்ற துணையாய், நட்புரிமை பூண்டு வாழ்பவள்; எனினும் அவள் அறியாத வகையில் தலைவி ஒரு தலைவனோடு காதல் உறவு கொண்டாள்.

இயற்கைப் புணர்ச்சி, இடம் தலைப்பாடு, பாங்கன் கூட்டம் என்னும் மூன்று நிலைகளில் அக்களவு ஒழுக்கம் தொடர்ந்து நிகழ்ந்தது.

அக்களவு ஒழுக்கத்தின் காரணமாகத் தலைவியின் புறத் தோற்றத்திலும் செயல்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றைக் கண்ட தோழி அவை காதலால் ஏற்பட்டனவாக இருக்கலாம் என எண்ணுகிறாள். தன் அறிவோடு உடன்படுத்தி ஆராய்ந்து அஃது உண்மையே என்ற முடிவுக்குத் தோழி வருகிறாள்.

இவ்வாறு தோழி தன் மதியோடு (அறிவோடு) உடன்படுத்தி ஆராய்ந்து முடிவு காண்பது பாங்கிமதி உடன்பாடு எனப்படும். இது மூன்று நிலைகளை உடையது. அவையாவன:

  • முன்னுற உணர்தல்.
  • குறையுற உணர்தல்.
  • இருவரும் உள்வழி அவன் வர உணர்தல்.

5.1.1 முன்னுற உணர்தல்

தலைவி தன் முன் வந்து நிற்க, அவளை உற்றுநோக்கிய தோழி, அவளின் காதல் உண்மையை உணர்தல் முன்னுற உணர்தல் எனப்படும்.

பாங்கற் கூட்டத்தின்போது தலைவனைக் கூடி மீண்ட தலைவி தோழி முன் வந்து நிற்பாள். அப்போது தலைவியின் வேறுபாட்டைக் கண்டு, களவு ஒழுக்கம் நிகழ்ந்துள்ளது என்ற உண்மையைத் தோழி அறிவாள். இதுவே முன்னுற உணர்தல் ஆகும். இது மூன்று உட்பிரிவுகளை உடையது.

  • ஐயப்படுதல்.
  • ஐயம் தீர்தல்
  • சொல்லால் ஆராய்தல்

என்பன அவை.

  • ஐயப்படுதல், ஐயம் தீர்தல்
  • தலைவியிடம் காணப்படும் மணம் (நாற்றம்), அவளது தோற்றத்தில் நிகழ்ந்துள்ள புதிய மாற்றம், தலைவி பின்பற்றும் புதிய செயல்கள் (ஒழுக்கம்), உண்ணும் உணவின் அளவு குறைதல், தலைவி தன் செயலைத் தோழியிடம் மறைத்தல், தோழியர் கூட்டத்தை விட்டு அவ்வப்போது பிரிதல், குறிப்பிட்ட ஓரிடத்திலேயே எப்போதும் இருத்தல் (பயில்வு) முதலான ஏழு வகையிலும் தலைவியின் களவு ஒழுக்கம் பற்றிய ஐயம் தோழிக்கு ஏற்படும். அவற்றினைக் கொண்டே களவு உண்மையைப் பற்றிய ஐயம் தீர்தலும் நிகழும்.

    குறிப்பு : உணவு குறைதல் ஐயத்தை ஏற்படுத்தும் : நோய்வாய்ப் படல் முதலான எந்தக் காரணமும் இன்றி உணவு குறையும்போது அது காதலால் (களவால்) நிகழ்ந்த மாற்றம் என்று ஐயம் தீர்ந்து, தெளிவும் ஏற்படும். இவ்வாறே மற்றவற்றையும் எண்ணிப்பார்த்தல் வேண்டும்.

  • சொல்லால் ஆராய்தல்
  • தோழி, தலைவியை நோக்கிச் சொல்லும் சொற்களால் அவளது களவு ஒழுக்கத்தை உணர முயல்வதும், உணர்ந்துள்ளதைச் சுட்டிக் கட்டுவதும் உண்டு. நீர்ச் சுனையைப் புகழ்தல், வியத்தல், தலைவியின் புற அழகு மாற்றத்தைப் புனைந்து உரைத்தல் என்பன போன்ற உரையாடல்கள் வழி, தலைவியின் களவு ஒழுக்கத்தைத் தோழி உணர்வாள்.

    “மலை அணங்கே! சிவந்த கண்ணும் வெளுத்த வாயும் இல்லை எனில் எங்கள் தலைவியும் உன்னைப் போன்றவளே” என்று தோழி கூறுவதாக வரும் தஞ்சைவாணன் கோவைப் பாடல் (எண். 67) இதற்குச் சான்றாகும். (கண் சிவப்பதும், வாய் வெளுப்பதும் களவுக் கூட்டத்தினால் தலைவிக்கு நிகழ்ந்த மாற்றம், அதைக் குறிப்பிட்டுச் சொல்லாடல் நிகழ்த்தினாள் தோழி)

    5.1.2 குறையுற உணர்தல்

    தலைவன் வந்து, தன் குறையைத் தோழியிடம் உரைக்க அதன் மூலம் தலைவன், தலைவியரின் களவு ஒழுக்கத்தைத் தோழி உணர்வது குறையுற உணர்தல் எனப்படும்.

    தலைவன் தோழியிடம் சென்று நின்று, ஊர்- பெயர் வினவுவதும், கெட்ட (தொலைத்த) பொருள் ஒன்றைப் பற்றிக் கேட்பதும் அதன்வழித் தோழி தேர்ந்து தெளிவதும் இவ்வகைப்படும்.

    ‘இக்காட்டிற்கு நான் மிகப் புதியவன்! தனியாக வந்துள்ளேன்; உம் ஊர் எது?’ எனத் தலைவன் கேட்பான். தோழி இதற்கு விடை தாராத போது,

    பெயரேனும் உரைமின்களே! (தஞ்சைவாணன் கோவை-78) என்று தலைவன் கேட்பான்.

    ‘அம்புபட்டுப் புண்பட்ட யானை இவ்வழி வந்ததா'? என்று கேட்பது கெடுதி வினவுதல் (கெட்ட அல்லது தொலைந்த பொருள் பற்றிக் கேட்டல்) ஆகும்.(தஞ்சைவாணன் கோவை-72)

    இவ்வாறெல்லாம் தலைவன் வினவும் வினாக்களைக் கொண்டு, தோழி உண்மை உணர்வாள்.

    5.1.3 இருவரும் உள்வழி அவன்வர உணர்தல்

    தலைவியும் தோழியும் ஒன்றாக ஓரிடத்து இருந்தபோது, அவ்விடத்துக்கு மாலையும் தழையும் எடுத்துக் கொண்டு தலைவன் வருவான். அதன்வழித் தலைவிக்கும், அங்கு வந்த தலைவனுக்கும் இடையே ஓர் உறவு இருப்பதைத் தோழி உணர்ந்து கொள்வாள். இதுவே இருவரும் உள்வழி அவன்வர உணர்தல் எனப்படும். இது பின்வரும் உட்பிரிவுகளை உடையது.

    • தலைவன் பரிசுப் பொருள் (கையுறை) கொண்டு வருதல்.
    • தலைவன் கெடுதி (தொலைந்தது) நிகழ்ந்தது பற்றி வினவுதல்.
    • தலைவனுக்குத் தோழி மறுமொழி கூறுதல்.
    • தலைவன் சென்ற பின்பு தலைவி முன்பாக அவனைத் தோழி எள்ளி நகையாடுதல்.
    • தோழி தன் அறிவாற்றலால் தலைவன் - தலைவியின் மனக்குறிப்பை ஆராய்ந்து கூறுதல்.