5.3 பகற்குறி

தலைவனும் தலைவியும் சந்தித்துக் கொள்ளும் இடம் குறியிடம் எனப்படும். அவர்கள் பகற்பொழுதில் சந்திக்கும் இடம் பகற்குறி எனப்படும். அவ்வாறே இரவுப் பொழுதில் சந்திக்கும் இடம் இரவுக்குறி ஆகும்.

5.3.1 குறி இடையீடு

பகலிலோ, இரவிலோ தலைவன் தலைவியைச் சந்திப்பதற்காகக் குறிப்பிடப்பட்ட இடத்தில் சந்திக்க முடியாதபடி இடர்ப்பாடுகள் ஏற்படும். அதற்குக் குறி இடையீடு என்று பெயர். பகற்குறியிலும், இரவுக்குறியிலும் வெவ்வேறு காரணங்களால் இந்த இடர்ப்பாடு ஏற்படலாம்.

5.3.2 பாங்கியிற் கூட்டத்தில் அமையும் பகற்குறி

பகற்குறியில் தலைவன் தலைவியைச் சந்திப்பது, பெரும்பாலும் தோழி வழியாக நிகழும். எனவே, பாங்கியிற் கூட்டத்துக்குரியதாக இறுதியில் இடம் பெற்ற கூட்டல்- கூடல்- ஆயங்கூட்டல் - வேட்டல் என்னும் நான்கும் பகற்குறியின் வகை என்பார் நாற்கவிராசநம்பி.

5.3.3 ஒருசார் பகற்குறியின் வகை

‘ஒருசார் பகற்குறியின் வகை’ என்ற தலைப்பின் கீழ் மேலும் மூன்று பகற்குறி வகைப்பாடுகளை அகப்பொருள் விளக்க நூலாசிரியர் அமைத்துள்ளார். அவை:

இரங்கல் : தலைவன் பிரிவிற்குத் தலைவி வருந்துதல்; தோழியும் புலம்புதல்.

வன்புறை : தோழி, தலைவியை இடித்துரைத்தல் (அறிவுரை கூறுதல்)

இற்செறிப்பு உணர்த்தல் : தலைவி வெளியே வரமுடியாதபடி வீட்டுக் காவல் ஏற்பட்டதைத் தோழி தலைவனிடம் கூறுதல்.

  • ஒருசார் பகற்குறியின் விரிவு
  • இரங்கல் - வன்புறை - இற்செறிப்பு உணர்த்தல் என மூன்று வகைப்பட்ட ‘ஒரு சார் பகற்குறி’ யானது ‘கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம் பொழுது கண்டு இரங்கல்’ முதலாக, ‘கிழவோன் தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தல்’ ஈறாக, 14 செய்திப் பிரிவுகள் உடையது. அப்பிரிவுகளுக்கான விளக்கத்தை இனிக் காண்போம்.

    • பகற்குறியில் அதற்குரிய இடத்துக்கு வந்து தலைவன் தலைவியைப் புணர்ந்து, பிரிந்து சென்ற பிறகு தலைவி மாலைப் பொழுதைக் கண்டு வருந்திப் பேசுதல்.
    • தோழி புலம்பிப் பேசுதல்.
    • பகற்குறிக்குத் தலைவன் வருவது தாமதம் ஆகும் போதும், தலைவி மனம் வருந்திப் பேசுதல் - ‘நீ வருந்துவது முறையன்று’ என்று தோழி தலைவியிடம் இடித்துரைத்தல்.
    • தலைவி தோழி மீது வெறுப்புற்று அவளை நேருக்கு நேர் நோக்காமல் புறமொழியாகப் பேசுதல் - அது கேட்ட தோழி தலைவியை மகிழ்வுடன் உபசரித்து அவளுடைய வெறுப்பை நீக்க, அதன் பின் மீண்டும் தலைவி பேசுதல்.
    • தலைவியை அச்சுறுத்தி, தோழி பேசுதல்.
    • தலைவனை விட்டுப் பிரியமுடியாத தன்மையை எண்ணித் தலைவி தனக்குள் பேசுதல்.
    • தலைவன் வருவதைத் தோழி அறிவித்தல்.
    • தலைவன் குறியிடத்தில் வேலி ஓரமாக வந்து நிற்க அவன் உணரும்படி தலைவிக்கு உள்ள வீட்டுக் காவலைத் தோழி அறிவித்தல்.
    • தலைவன் வந்து நிற்க அதை அறியாதவள் போலத் தோழி தலைவியிடம் பேசுதல். (முன்னிலைப் புறமொழி)
    • தலைவன் வந்து நிற்க அவனுக்கு முன் தமது வீட்டுக் காவலை (இற்செறிப்பைத்) தோழி நேரடியாகச் சொல்லுதல்.
    • அதனைத் தொடர்ந்து தோழி தலைவனிடம் ‘எம்மை மறவாமை வேண்டும்’ என்று ஓம்படையாகப் பேசுதல். (ஓம்படை = பாதுகாப்பு; மறவாமை)
    • தலைவன் தன் நெஞ்சோடு தானே பேசுதல்.

    இவை யாவும் ஒருசார் பகற்குறியின் விரிவுச் செய்திகள் ஆகும்.

    5.3.4 பகற்குறி இடையீடு

    தலைவனும் தலைவியும் பகற்பொழுதில் சந்தித்துக் கூடி மகிழும் இடம் பகற்குறி எனப்படும். அவ்வாறு பகற்குறியில் கூடி மகிழ்வதற்கு ஏற்படும் தடை பகற்குறி இடையீடு எனப்படும்.

  • பகற்குறி இடையீட்டு வகை
  • பகற்குறி இடையீடு மூன்று வகைப்படும்.

    • விலக்கல் : தலைவனும் தலைவியும் பகற்குறிக்கு உரிய இடத்திற்கு வருவதைத் தோழி விலக்குதல் (தடுத்தல்) விலக்கல் எனப்படும்.
    • சேறல் : தோழி தலைமகளை அழைத்துக் கொண்டு குறிப்பிட்ட இடத்தை விட்டு வேறு இடம் சென்று சேர்வது சேறல் எனப்படும்.
    • கலக்கம் : தோழியால் குறி விலக்கித் தலைவன் தலைவியர் பிரிந்த பிறகு, இருவரும் மனம் கலங்குதல் கலக்கம் எனப்படும்.
  • பகற்குறி இடையீட்டின் விரிவு
  • பகற்குறி தடைப்படுதலே இடையீடு எனப்பட்டது. அது இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கல் முதலாகக் குறுந்தொடி வாழும் ஊர் நோக்கி மதிமயங்கல் ஈறாக 7 பிரிவுகளை உடையது. அவற்றுக்கான விளக்கம் வருமாறு:

    • தலைவனைப் பகற்குறி இடத்திற்கு வரவிடாமல் தோழி விலக்குதல்.
    • தலைவியைப் பகற்குறி இடத்திற்கு வரவிடாமல் தோழி விலக்குதல்.
    • தான் விளையாடும் இடத்தைப் பார்த்துத் தலைவி மயங்கியும் தயங்கியும் நிற்றல்.
    • அந்த விளையாட்டு இடத்தை விட்டு நீங்கித் தலைவியை அழைத்துக் கொண்டு தோழி தம் ஊர் செல்லுதல்.
    • பிறகு ஓர் நாள் தலைவன் தமது சந்திப்பு இடம் (குறியிடம்) பக்கமாக வந்து நின்று வருந்துதல்.
    • தலைவியின் காவல் இல்லாத, தினைப் புனத்தைப் பார்த்துத் தலைவன் வருந்துதல்.
    • தலைவியின் சொந்த ஊர் நோக்கித் தலைவன் மதிமயங்கிப் போதல் இவையே பகற்குறி இடையீட்டின் விரிவுகளாகும்.