5.4 இரவுக் குறி

தலைவனும் தலைவியும் இரவு நேரத்தில் களவில் சந்தித்துக் கூடி மகிழும் இடம் இரவுக்குறி எனப்படும்.

5.4.1 இரவுக் குறியின் வகை

இரவுக்குறி ஒன்பது வகைப்படும். அவையாவன :

1 வேண்டல் :
தலைவன் தலைவியை மறுபடியும் சந்திக்க விழைந்து தோழியிடம் இரவுக்குறி வேண்டிப் பேசுதல். அச்செய்தியைத் தோழி தலைவியிடம் கூறுதல்.
2 மறுத்தல் :
தோழியும், தலைவியும் தலைவனது வேண்டுகோளை மறுத்து விடுதல்.
3 உடன்படுதல் :
தோழியும், தலைவியும் தலைவனது வேண்டுகோளை ஏற்று இரவுக்குறிக்கு உடன்படுதல்.
4 கூட்டல் :
தோழி தலைவியை அழைத்துச் சென்று இரவுக்குறிக்குரிய இடத்தில் விட்டு வருதல்.
5 கூடல் :
தலைவனும் தலைவியும் இரவுக்குறி இடத்தில் கூடி மகிழ்தல்.
6 பாராட்டல் :
இரவுக்குறியில் நிகழ்ந்த புணர்ச்சியின் பின் தலைவன் தலைவியைப் புகழ்தல். தலைவன் தந்த பரிசினைத் தோழி புகழ்தல்.
7 பாங்கிற் கூட்டல் :
இரவுக்குறியில் கூடி மகிழ்ந்த தலைவன் காத்திருந்த தோழியிடம் தலைவியை ஒப்படைக்க, அவள் தலைவியை இல்லத்திற்கு அழைத்துச் செல்லுதல்.
8 உயங்கல் :
இரவுக்குறியில் சந்திப்பதற்குத் தலைவன் வரும் வழியில் உள்ள இடையூறுகளை எண்ணித் தலைவி வருந்துதல். அதைக் கண்டு தலைவனும் வருந்துதல். (உயங்கல் - வருத்தம்)
9 நீங்கல் :
தோழி தலைவியைக் குறியிடத்தில் விட்டு விட்டு நீங்குதலும், தலைவன் தலைவியைக் கூடிப் பின் நீங்குதலும் நீங்கல் எனப்படும்.

  • இரவுக்குறியின் விரிவுகள்
  • தலைவனும் தலைவியும் இரவில் குறிப்பிட்ட ஓர் இடத்தில் சந்தித்துக் கூடி மகிழ்வது இரவுக்குறி என்றும், அது ஒன்பது வகைகளை உடையது என்றும் அறிந்தோம். அதுவே 27 விரிவுபட்ட செயல்களாகவும் விளக்கப்படுகிறது. அவற்றுள் முதன்மையான செய்திப் பிரிவுகளை இனிக் காண்போம்.

    • தலைவன் இரவுக்குறியை விரும்புதல்.
    • தலைவன் வரும்வழி இரவில் வர ஏற்றதன்று எனத் தோழி கூறுதல் - தலைவனோ தான் வரும் வழி எளிதானது என வலியுறுத்தல்.
    • தலைவனும் தோழியும் அவரவர் நாட்டு அணிகலன் பற்றியும் அதன் சிறப்பையும் பேசுதல்.
    • தோழியின் கருத்தை முதலில் உடன்படாத தலைவி தன் நெஞ்சோடு பேசுதல் ; பிறகு உடன்பட்டுத் தோழியிடம் பேசுதல்.
    • தலைவி இரவுக்குறி உடன்பட்டதை, தோழி தலைவனிடம் கூறுதல்.
    • தாய் உறங்கிவிட்டாளா என்பதைத் தோழி கண்டறிதல்.
    • தலைவன் வந்திருப்பதைத் தோழி தலைவியிடம் கூறுதல்.
    • தலைவியைக் குறியிடத்துக்குத் தோழி அழைத்துச் செல்லுதல். அங்கு விட்டுவிட்டுத் திரும்புதல்.
    • தலைவன் தலைவிக்கு முன் தோன்றுதல்.
    • வரும் வழியின் இடர்ப்பாடு கூறித் தலைவி வருந்துதல் ; அவளைத் தலைவன் தேற்றுதல்.
    • புணர்தல் ; அதன்பின் புகழ்தல்.
    • ‘இரவுக்குறியில் இனி வராதே’ என, தலைவி தலைவனைத் தடுத்தல்.
    • தலைவன் தலைவியை அவளது வீட்டிற்குச் செல்லவிடுத்தல்.
    • தோழி தலைவியை மீளவும் இல்லத்திற்கு அழைத்துச் செல்லுதல்.
    • தோழி தலைவனை இரவுக்குறி விலக்குதல் (தடுத்தல்) - தோழியின் சொல் கேட்டுத் தலைவன் மயங்குதல் - தோழி தலைவனிடம் தலைவியின் மனத்துயர் கூறுதல்.
    • தலைவன் சென்று தன் இருப்பிடம் சேருதல்.

    5.4.2 இரவுக்குறி இடையீடு

    தலைவன் தலைவியை இரவு நேரத்தில் சந்திப்பது இரவுக்குறி எனப்படும். அவ்வாறு இரவுக்குறியில் சந்திப்பது சில காரணங்களால் தடைப்படும். அதனை இரவுக்குறி இடையீடு என்பர்.

  • இரவுக்குறி இடையீட்டு வகை
  • இரவுக்குறி இடையீட்டை இரண்டாக வகைப்படுத்துவர். அவையாவன:

    1. அல்லகுறி,
    1. வரும் தொழிற்கு அருமை

    5.4.3 அல்ல குறி

    இரவுக்குறியில் சந்திக்க வரும் தலைவன் தன் வருகையை அறிவிக்கச் சில செயல்பாடுகளை நிகழ்த்துவான். அவை அடையாளக் குறியீடுகள் ஆகும். பறவை போல ஒலி எழுப்புதல், தண்ணீரில் கல் எறிதல், இளநீரைப் பறித்துப் போடுதல் போன்ற செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை நிகழ்த்தி, தலைவன் தன் வருகையை உறுதி செய்வான். அதை உணர்ந்து தலைவியும் குறியிடத்திற்குச் சென்று கூடுவாள். சிலசமயம் மேற்சொன்ன அடையாளச் செயல்பாடுகள் வேறு காரணத்தினால் அல்லது வேறு ஒன்றினால் அல்லது இயல்பாக நிகழ்ந்து விடுவது உண்டு. ஆனால் தலைவியோ அது தலைவன் நிகழ்த்திய அடையாளமே எனக் கருதிக் குறியிடத்திற்குச் சென்று, தலைவனைக் காணாது திரும்பி விடுவாள். தலைவனும் அவ்வாறே வந்து தலைவியைக் காணாது, காரணமும் புரியாது திரும்பி விடுவான். இதுவே அல்லகுறிப்படுதல் எனப்படும்.

  • அல்லகுறிப்படுதல் - விரிவுச் செய்திகள்
  • இறைவிக்கு இகுளை இறைவு உணர்த்துவழி தான் குறி மருண்டமை தலைவி அவட்கு உரைத்தல் (இறைவி = தலைவி; இகுளை = தோழி) முதலாக என்பிழைப்பு அன்று என்று இறைவி நோதல் ஈறாக அல்லகுறிப்படுதல் பற்றிய விரிவுச்செய்திகள் 12 உள்ளன. அவற்றை இனிக் காண்போம்.

    • தலைவன் வருகையைத் தோழி தலைவிக்குச் சொல்லுதல் - தனக்கு அல்லகுறிப்பட்டது என்று தோழியிடம் தலைவி கூறுதல்.
    • தலைவன் தீங்கு செய்தான் எனத் தோழி கூறுதல்.
    • அல்லகுறிப்பட்டது அறியாத தலைவன், தலைவியைக் காணாமல் வருந்தித் திரும்புதல் முதலியவாகும்.

  • வரும்தொழிற்கு அருமை
  • இரவுக்குறியில் தலைவியைக் காணத் தலைவன் வருவான். அப்படி வரும் வழியில் சில இடையூறான நிகழ்ச்சிகள் நிகழும். அதனால் இரவில் வரும் செயல் எளிதாக இருக்காது. அரிதாகவே அமையும். இதையே வரும்தொழிற்கு அருமை என்பர்.

  • வரும் தொழிற்கு அருமையின் விரிவுச் செய்திகள்
  • இப்பிரிவுக்குரிய விரிவுச் செய்திகள் 7 ஆகும். அவையாவன:

    1 தாய் துஞ்சாமை : தலைவியின் தாய் உறங்காது இருத்தல்.
    2 நாய் துஞ்சாமை : ஊரிலிருக்கும் நாய் உறங்காது இருத்தல்.
    3 ஊர் துஞ்சாமை : தாயும் நாயும்துயின்றாலும் ஊரில் உள்ளவர் துயிலாது இருத்தல்.
    4 காவலர் துஞ்சாமை : இரவுக்காவல் புரியும் நகரக் காவலர்கள் துடியடித்துக் கொண்டு எதிரில் வருதல்.
    5 நிலவு வெளிப்படுதல் : தலைவன் இரவுக்குறியில் வருவதற்கு இடையூறாக ஒளி வீசும் நிலவு வெளிப்படுதல்.
    6 கூகை குழறுதல் : கோட்டான் குரல் எழுப்ப அதுகேட்டுத் தலைவி அஞ்சுதல்.
    7 கோழி குரல் காட்டுதல் : தலைவன் தலைவி ஆகிய இருவருக்கும் இடையூறாகக் கோழி குரல் எழுப்புதல்.