ஒரு வழித்தணத்தல் ஏழு வகைப்படும். அவையாவன:
- செலவு அறிவுறுத்தல்
- செலவு உடன்படாமை
- செலவு உடன்படுத்தல்
- செலவு உடன்படுதல்
- சென்றுழிக் கலங்கல்
- தேற்றி ஆற்றுவித்தல்
- வந்துழி நொந்துரை
செலவு அறிவுறுத்தல்
தற்காலிகப் பிரிவாகச் சில காலம் குறியிடங்களில்
சந்திப்பதைத் தவிர்த்துத் தன் ஊருக்கு சென்று வர
இருப்பதைத் தலைவன் தோழியிடம் கூறுதலும்,
தோழி தலைவியிடம் கூறுதலும் செலவு அறிவுறுத்தல் ஆகும்.
செலவு உடன்படாமை
தலைவன் ஒருவழித் தணத்தலாகத் தன் ஊருக்குச்
செல்வதைத் தோழி உடன்படாமல் தடுத்தல் செலவு
உடன்படாமை எனப்படும்.
செலவு உடன்படுத்தல்
தற்போது உள்ள சூழலில் ஒருவழித்தணத்தலாகத் தான்
பிரிந்து செல்ல வேண்டியது இன்றியமையாதது என்று கூறித்
தலைவன் தோழியை உடன்படச் செய்வது செலவு
உடன்படுத்தல் எனப்படும்.
செலவு உடன்படுதல்
ஒருவழித் தணத்தலாகத் தான் பிரிந்து செல்ல
வேண்டியது இன்றியமையாதது என்று தலைவன் உணர்த்த, அதை
உணர்ந்த தோழி அப்பிரிவுக்கு உடன்படுவது செலவு உடன்படுதல் எனப்படும்.
சென்றுழிக் கலங்கல்
தலைவன் ஒருவழித் தணத்தலாகப் பிரிந்து சென்றபோது
அப்பிரிவைத் தாங்க இயலாத தலைவி மனம்கலங்கிப்
பேசுதல் சென்றுழிக் கலங்கல் எனப்படும்.
தேற்றி ஆற்றுவித்தல்
மனம் கலங்கிய தலைவிக்குத் தெளிவு ஏற்படும் வண்ணம்
அறிவுரைச் சொற்களைக் கூறி, தோழி தலைவியின் துயர் நீக்குதல் தேற்றி ஆற்றுவித்தல் எனப்படும்.
வந்துழி நொந்துரை
ஒருவழித் தணத்தலாகிய தற்காலிகப் பிரிவு முடிந்து, திரும்பி
வந்த தலைவனிடம் தோழி வருந்திப் பேசுதலும், அவ்வாறே
தலைவிக்கும் தோழிக்கும் தன் பிரிவால் ஏற்பட்ட துன்பம்
பற்றித் தலைவன் வருந்திப் பேசுதலும் வந்துழி நொந்துரை எனப்படும்.
|